தற்போது எல்லாம் பெண்களுக்கு நீண்ட கூந்தல் என்பது இல்லாமல் போய் விட்டது. நம்முடைய நவீன மாற்றங்களால் கூந்தல் உதிர்வு, வறண்ட கூந்தல் என்று ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கிறோம். எல்லாருக்கும் கற்பனை கதாபாத்திரமான ராபுன்சல் கூந்தல் மாதிரி இருக்க ஆசை இருக்கிறது. ஆனால் அது என்னவோ நமக்கு சாத்தியப்படுவதில்லை.
பளபளப்பான கூந்தலை பெற, நீண்ட கூந்தலை பெற, பட்டு போன்ற கூந்தலை பெற என்று ஏகப்பட்ட விளம்பரங்கள் அழகு சாதனப் பொருட்கள், ஷாம்புகள் எல்லாம் மார்க்கெட்டில் கூவி கூவி வித்தாலும் பலன் என்னவோ சுமார் தான். அப்போ உண்மையில் கூந்தல் வளர்ச்சிக்கு எது அத்தியாவசியம்.
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க எப்படி சில ஊட்டச்சத்துக்கள் அவசியமோ அதைப் போல் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கவும் சில ஊட்டச்சத்துக்கள் தேவை. இந்த ஊட்டச்சத்துக்களை எல்லாம் உணவின் மூலம் எடுத்துக் கொள்ளும் போது அழகான கூந்தல் வளர்ச்சியை பெறுகிறீர்கள். சரி என்னென்ன ஊட்டச்சத்துக்கள் அவசியம் அவை எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளது என்று பார்ப்போம்.
வைட்டமின் பி
நமது கூந்தல் வளர்ச்சிக்கு வைட்டமின் பி மிக முக்கியமான ஒன்று. இதிலுள்ள பயோட்டின் கூந்தல் வளர்ச்சியை தூண்டு புதிய முடிகள் வளர உதவுகின்றன. ஆனால் நாம் பெரும்பாலும் இந்த மாதிரியான வைட்டமின் உணவுகளை சேர்ப்பதே இல்லை. உங்களுக்கு கூந்தல் உதிர்வு பிரச்சனை இருந்தால் அதற்கு இந்த வைட்டமின் குறைபாடு கூட காரணமாக இருக்கலாம்.
உணவுகள்
கம்பு, சோளம், கேழ்வரகு, சூரியகாந்தி விதைகள் போன்ற தானியங்களிலும் பயோடின் உணவுகளான முட்டை, பாதாம் பருப்பு போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். தீவிர முடி உதிர்தல் பிரச்சனை இருந்தால் மருத்துவரின் பரிந்துரை பேரில் தினமும் பயோடின் மாத்திரை 2500 மைக்ரோ கிராம் எடுத்துக் கொள்ளலாம்.
வைட்டமின் சி
வைட்டமின் சி நமது முடியில் உள்ள கொலஜனை வலிமையாக்கி வலிமையான கூந்தலை தருகிறது. எனவே வைட்டமின் சி அடங்கிய நெல்லிக்காய் நம் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த ஒன்று. ஒரு நெல்லிக்காயில் பார்த்தால் 600-700 மில்லி கிராம் அளவிற்கு வைட்டமின் சி சத்து உள்ளது.
உணவுகள்
நெல்லிக்காய், ஆரஞ்சு, லெமன், பச்சை இலை காய்கறிகள்.
வைட்டமின் சி நம் உடலில் இரும்புச் சத்து உறிஞ்சவும் உதவுகிறது. இவையும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஊட்டச்சத்து. எனவே லெமன் சேர்த்த கொண்டைக்கடலை அல்லது ராஜ்மா அல்லது சுண்டல் அல்லது பருப்பின் தூது கொத்தமல்லி இலைகள் தூவி எடுத்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லி சாற்றை பருகலாம். தினமும் லெமன் ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வரலாம்.
வைட்டமின் ஈ
வைட்டமின் ஈ தலைக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து பளபளப்பான மென்மையான கூந்தலை தருகிறது. கூந்தல் உதிர்வையும் தடுத்து நிறுத்துகிறது.
உணவுகள்
பாதாம் பருப்பு, நிலக்கடலை, சூரிய காந்தி விதைகள், கோதுமை போன்றவற்றில் வைட்டமின் ஈ அதிகளவில் உள்ளது. எனவே இந்த மாதிரியான உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இரும்புச்சத்து
இரும்புச்சத்து தலைக்கும் கூந்தலுக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. மயிர்க்கால்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்கி கூந்தலை புத்துயிர் பெறச் செய்கிறது.
உணவுகள்
சைவ உணவுகள்
கொண்டைக்கடலை, ராஜ்மா, பயிறு வகைகள்
அசைவ உணவுகள்
சிக்கன், மீன் வகைகள், டர்கி, ஆட்டிறைச்சி இவற்றில் இரும்புச் சத்து அதிகளவில் உள்ளது. இரும்புச் சத்தை உறிய வைட்டமின் சி அவசியம் என்பதால் வைட்டமின் சி உணவுகளையும் சேர்த்து எடுத்து கொள்ளுங்கள். இது இரும்புச் சத்து குறைப்பாட்டை தடுக்கும். இரும்புச் சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது காபி, டீ வேண்டாம். இது இரும்புச் சத்து உறிஞ்சு வதை 30 % வரை குறைக்கிறது.
வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ கூந்தல் உடைந்து போவதை தடுக்கிறது. மேலும் கூந்தலின் போதுமான எண்ணெய்யை சமநிலைப்படுத்துகிறது. இதனால் கூந்தல் வறண்டு போய் உடைவது தடுக்கப்படும்.
உணவுகள்
கேரட், மாம்பழம், சிவப்பு குடை மிளகாய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மீன், கடல் உணவுகள், சோயா பீன்ஸ்.
மேற்கண்ட ஊட்டச்சத்து உணவுகளை நீங்கள் உணவில் சேர்த்து வரும் போது உங்கள் கூந்தல் வளர்ச்சி மேம்படுகிறது. இதன்படி உங்க கூந்தலை ஆரோக்கியமாக வைக்க முற்படுங்கள்.