கர்நாடகாவில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிப்படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகையாகக் கொண்டாடப்பட்டவர் சௌந்தர்யா.கரியரின் உச்சத்தில் இருந்தபோதே திடீரென இதே ஏப்ரல் 17-ம் தேதி 2004-ம் ஆண்டு விமான விபத்தில் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 31.
செளந்தர்யாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும், செளந்தர்யாவின் வழிகாட்டியாக விளங்கியவருமான இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் விகடனுக்கு அளித்த பேட்டியில், 2004-ம் வருஷம் ஏப்ரல் மாசம் 15-ம் தேதி என் மனைவி சுஜாதாக்கு செளந்தர்யாகிட்ட இருந்து போன் வந்துச்சு. அண்ணி, இப்பத்தான் வாசு சாரோட `ஆப்தமித்ரா’ படத்துல நடிச்சு முடிச்சேன். இப்போ ரெண்டு மாசம் கர்ப்பமா இருக்கேன். உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு. ஆனா, எலெக்ஷன் வந்துடுச்சு.அண்ணன் கட்சி பிரசாரத்துக்குக் கூப்பிடுறார்.
போய்தான் ஆகணும். ஆனா, அதுக்கப்புறம் ரெஸ்ட்தான். உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். நிச்சயமா சென்னைக்கு வந்து உங்க வீட்ல தங்குவேன்’னு ரொம்ப நேரம் மனம் விட்டுப் பேசியிருக்கு. போன்ல பேசி முடிச்சதும் இந்த விஷயங்களை என் மனைவி சொன்னாங்க. அடுத்தநாள், ஏப்ரல் 16-ம் தேதி திரும்ப செளந்தர்யாகிட்ட இருந்து எனக்கு போன்.`சார், உங்களை என் வாழ்க்கைல மறக்க மாட்டேன். சினிமால நீங்க எனக்குக் கொடுத்த வாய்ப்பை எப்பவும் நினைச்சுக்கிட்டே இருப்பேன்’னு ரொம்ப நேரம் என்னென்னவோ பேசிட்டிருந்துச்சு.
`உனக்கு என்ன ஆச்சுமா… ஏன் இப்படிலாம் பேசுற’னு நானும் எப்பவும்போல் பேசிமுடிச்சு போனை வெச்சுட்டேன்.மறுநாள் `கற்க கசடற’ படத்தோட பூஜை அழைப்பிதழ் கொடுக்க சத்யராஜ் சார் வீட்டுக்குப் போனேன். என்னை வாசலில் பார்த்து கண்கலங்கியதோடு விஷயத்தை சொன்னதும் துடிதுடித்து போனதாக தெரிவித்துள்ளார்.