27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
immune power 03

உங்களுக்கு தெரியுமா நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும் விஷயங்கள் இவை தான்.!

உங்களுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறதா? அப்படியெனில் உடலைத் தாக்கும் கிருமிகளில் இருந்து பாதுகாப்புத் தரும் உங்களின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.

ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைவதற்கும், பலவீனமாவதற்கும் அவரது பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது.

எனவே ஒருவர் அடிக்கடி நோய்வாய்ப்பட நேர்ந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். அப்படியே விட்டுவிட்டால், அதனால் பல தீவிரமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இங்கு உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடையச் செய்யும் சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் தவறை சரிசெய்து கொள்ளுங்கள்.

உடற்பயிற்சியின்மை

தற்போது உடல் உழைப்பு என்பது மிகவும் குறைவாக உள்ளது. இப்படி உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தால், அதனால் முதலில் நோயெதிர்ப்பு மண்டலம் தான் பாதிக்கப்படும். மேலும் ஆய்வுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் வேண்டுமானால், தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

ஆரோக்கியமற்ற டயட்

சமச்சீரற்ற மற்றும் ஆரோக்கியமற்ற டயட் கூட பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வழிவகுக்கும். ஏனெனில் இந்த டயட்டுகளில் புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் கிடைக்கப் பெறாமல் போய், அதனால் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு குறைய ஆரம்பிக்கும். ஆகவே நல்ல ஆரோக்கிமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வாருங்கள்.

அதிகப்படியான ஆல்கஹால்

ஆண்களும், பெண்களும் தற்போது அதிக அளவில் மது அருந்துகின்றனர். இப்படி மதுவை ஒருவர் அதிகம் அருந்தினால், நோயெதிர்ப்பு மண்டலம் முதலில் பாதிக்கப்பட்டு, உடலின் இதர உறுப்புக்கள் மெதுவாக பாதிப்படைய ஆரம்பிக்கும். ஆகவே இப்பழக்கத்தை முதலில் கைவிட வேண்டும்.immune power 03

தூக்கமின்மை

ஒருவருக்கு போதிய அளவு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. சரியான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகும். யார் ஒருவர் சரியான அளவில் தூங்காமல் உள்ளார்களோ, அவர்கள் தான் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள்.

மன அழுத்தம்

இன்றைய தலைமுறையினரிடம் மன அழுத்தம் அதிகம் உள்ளது. இதற்கு அதிகப்படியான வேலைப்பளு தான் முக்கிய காரணம். ஒருவர் மன அழுத்தத்தால் கஷ்டப்பட்டால், அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்து, பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட வேண்டியது அவசியம்.

உடல் பருமன்

ஆம், உடல் பருமனும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையிழக்கச் செய்யும். அதனால் தான் உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், அடிக்கடி ஏதேனும் உடல் நல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

அதிகப்படியான ஆன்டி-பயாடிக்ஸ்

தற்போது மருத்துவரின் ஆலோசனையின்றி ஆன்டி-பயாடிக் மருந்துகளை எடுத்து வருவோரின் எண்ணிக்கை அதிகம். இப்படி அதிகளவு ஆன்டி-பயாடிக்குகளை ஒருவர் எடுத்து வந்தால், நாளடைவில் அவரது நோயெதிர்ப்பு சக்தி மெதுவாக அழிக்கப்பட்டு வரும். எனவே இப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

புகைப்பிடித்தல்

இதை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் புகைப்பிடித்தாலும் அல்லது புகைப்பிடிப்போரின் அருகில் இருந்தாலும், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி, பல தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டு பண்ணும்.