குழந்தைகள் விளையாடும்போது ஒருவருக்கொருவர் கோபம் கொண்டு சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த ஒரு பொருளை வாங்கித் தராமல் இருந்தால் கோபம் கொள்வார்கள். சில நேரங்களில் குழந்தைகள் அதிக கோபம் மற்றும் விரக்தி காரணமாக பெற்றோரிடம் அல்லது நண்பர்களிடம் வாக்குவாதம் செய்கின்றனர். இவை அனைத்தும் ஒரு குழந்தையின் வளரும் பருவத்திலேயே உண்டாகிறது. உங்கள் குழந்தை ஒரு சில நேரங்களில் கோபம் கொள்வது சாதாரணமான விஷயம், ஆனால் அடிக்கடி கோபம் கொள்வது, விரக்தி அடைவது, பகைமை உணர்ச்சியுடன் இருப்பது போன்ற குணங்கள் உங்கள் குழந்தையிடம் இருந்தால் இது சரி செய்ய வேண்டிய ஒரு பாதிப்பாகும்.
ஒரு குழந்தை பகைமை உணர்ச்சியுடன் இருப்பதற்கும் கோபம் கொள்வதற்கும் எண்ணற்ற காரணிகள் உண்டு. பெற்றோரின் விவாகரத்து, அன்பானவர்கள் பிரிவது போன்றவற்றால் ஏற்படும் துயரத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். ஒரு அதிர்ச்சியான சம்பவத்தின் காரணமாக இருந்தால் , இது ஆழ்ந்த கோபத்திற்கு வழிவகுக்கும். குழந்தைகள் பெரும்பாலும் கத்துவது, கடிப்பது, அழுவது அல்லது வருத்தப்படுவது போன்ற பல்வேறு வழிகளில் கோபத்தை வெளிப்படுத்த முனைகிறார்கள்.
ஆனால் அவர்களின் கோபம் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டால், வருங்காலத்தில் அவர்கள் ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்க முடியும். உங்கள் குழந்தை அதிக கோபம் கொண்ட குழந்தை என்பதை உணர்த்தும் 4 அடையாளங்கள் இதோ.
தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பது
குழந்தைகள் 2-3 வயதில் கோபத்தை வெளிப்படுத்த கால்களை உதைத்துக் கொண்டு அழுவார்கள். மழலையர் பள்ளியில் படிக்கும் போது அந்த குழந்தைக்கு பொருந்தாத உணர்வு ரீதியான சூழ்நிலைகள் உண்டாகும் போது இதே அளவிற்கு பிடிவாதம் இருக்கக்கூடாது. குழந்தைகள் பேசத் தொடங்கி பள்ளிக்கு செல்லும் போது அவர்களின் பிடிவாதத்தின் ஆழம் மற்றும் அதிர்வு குறைய வேண்டும். எனவே உங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனமாக இருந்து, அவர்களின் பிடிவாதத்தை கட்டுப்படுத்தும் வழிகளை கண்டறிய வேண்டும்.
குறைவான சகிப்புத்தன்மை
ஒரு குழந்தை வளரும் போது, அவன் / அவளை விரக்தியடையச் செய்யும் செயல்களைக் கையாளும் திறனை வளர்க்க முனைகிறார்கள். ஒரு 5 வயது குழந்தை புதிர் தீர்க்கும் விளையாட்டு விளையாடும் போது, அதில் தோல்வியடையும் போது, அதனை தூக்கி எறிந்துவிடக்கூடும். அந்த சூழ்நிலையில் சகிப்புத்தன்மை குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறி, இந்த விளையாட்டில் இருந்து விலகி, வேறு விளையாட்டு விளையாடக் கூறலாம். அல்லது முயற்சி செய்தால் முடியாதது இல்லை என்று கூறி எந்த ஒரு சவாலான காரியத்தையும் செய்து முடிக்கும் ஊக்கத்தை பெற்றோர்கள் குழந்தைக்கு கொடுக்கலாம்.
அச்சுறுத்தல் அல்லது தாக்குதல்
சில நேரங்களில் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட அதிக சக்திசாலி என்ற நோக்கில் மற்றவர்களை பயமுறுத்துவதை வழக்கமாக கொள்வார்கள். வயது அதிகரிக்கும் போது இந்த பழக்கம் மாறிவிடும். ஆனால் ஒரு சிலர் இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல், பெரியவர்களாக ஆன பின்னும் தன்னுடைய பெற்றோர், உடல் பணிபுரியும் தொழிலாளர்கள், மற்றவர்கள் என்று அனைவரையும் பயமுறுத்தும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். உங்கள் குழந்தைக்கு இந்த பழக்கம் இருப்பதை நீங்கள் கண்டறிந்தால் அதன் விளைவுகளை பற்றி அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
தன்னைத் தானே தண்டித்துக் கொள்வது
சில குழந்தைகள் கோபமாக இருக்கும் போது தன்னைத் தானே நோகடித்துக் கொள்ளும் சுய தீங்கு உண்டாக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அவமானமாக அல்லது குற்ற உணர்ச்சியாக உணர்ந்தால் தனக்குத்தானே தீங்கு செய்து கொள்வார்கள். ஒரு வருத்தமான அனுபவம் அல்லது சம்பவம் கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். குழந்தைகள் சில சமயங்களில் தலைமுடியை இழுத்து, அரிப்பு, சிராய்ப்பு அல்லது தங்களைக் கடிப்பதன் மூலம் கோபத்தைக் காட்டுகிறார்கள். எந்தவொரு குழந்தைக்கும் சுய-தீங்கு என்பது ஒரு தீவிரமான பாதுகாப்புப் பிரச்சினையாகும், மேலும் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தையின் இந்த வகையான நடத்தை குறித்து அக்கறை கொண்டிருந்தால் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
முடிவுரை
எனவே பெற்றோர் தங்கள் குழந்தைக்கு கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தை உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் குழந்தையின் கோபத்தை நிர்வகிக்க உதவும் நிபுணர்களிடம் குழந்தையை அழைத்துச் செல்லலாம்.