மனிதன், தன் தொண்டைப்பகுதியை கிருமிகள் இன்றி தூய்மையாக வைத்திருப்பதன் மூலம், கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்ற கருத்து பரவி வரும் நிலையில், வாய், மூக்கு, தொண்டை பகுதிகளை மட்டும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், பாதிப்பிலிருந்து தற்காலிகமாக காத்துக்கொள்ளலாமே தவிர தப்பிக்க முடியாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாள்தோறும் இரவு படுக்க செல்வதற்கு முன், வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பை போட்டு அந்த தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்து வருவது, நாம் தொன்றுதொட்டு செய்துவரும் காரியம் தான். இந்த எளிய பழக்கத்தினாலும் நாம் வைரஸ் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளலாம் என்று புனேயில், வாதநோய் சிகிச்சை மையத்தில் பிராக்டிஸ் செய்து வரும் டாக்டர் அரவிந்த் சோப்ரா தெரிவித்துள்ளார்.
டாக்டர் அரவிந்த் சோப்ரா, மத்திய அரசின் ஆயுஷ் அமைப்பின் மருத்துவ சோதனை பிரிவின் தலைவராகவும் உள்ளார். இவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மக்கள் இதுபோன்ற எளிய அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பொது சுகாதார நிறுவனம் என்ற அமைப்பின் தலைவர் டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி கூறியதாவது, வாய் கொப்பளித்தல் போன்ற நடைமுறைகளால் பயன் இருக்கும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் மூக்கின் வழியாக மனித உடலுக்குள் நுழைந்து சைனஸ் மற்றும் தொண்டைக்குழி வழியாக,ல நுரையீரலை அடைகிறது. கைகழுவுதல், வெதுவெதுப்பான நீரால் வாய் கொப்பளித்தல் போன்ற நடவடிக்கைகளால், வைரஸின் தொற்று நமக்கு ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. என்று தெரிவித்துள்ளார்.
உப்பு தண்ணீரை கொண்டு வாய் கொப்பளிப்பது என்பது அந்த நேரத்தில் மட்டும் கைகொடுக்கும் நடவடிக்கை என்றும், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் இதற்கு எவ்வித பங்கும் இல்லை என்று தேசிய வைராலஜி மைய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சளி மற்றும் ஜலதோசத்தால் அவதிப்படுபவர்கள், உப்பு கலந்த தண்ணீரை கொண்டு வாய், மூக்கு உள்ளிட்ட பகுதிகளை கழுவிவந்தால் நிவாரணம் பெறலாம். ஆனால், இதையே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் என்று அறுதியிட்டு சொல்லிவிட முடியாது.
உப்பு தண்ணீரால் வாய் கொப்பளித்தல் என்பது பல்வேறு நாடுகளில் மக்கள் அன்றாடம் கடைப்பிடித்து வரும் நடைமுறை ஆகும். ப்ளூ காய்ச்சல் ஏற்படும் சமயங்களில், கை, கால்களை அடிக்கடி கழுவுவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகளும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
உப்பு தண்ணீரால் வாய் கொப்பளித்தால், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்குமே தவிர, நுரையீரலுக்கு செல்லும் வைரசை கட்டுப்படுத்தும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று அமெரிக்காவின் ஹார்வார்டு பொது சுகாதார அமைப்பின் பேராசிரியர் ஷான் தெரிவித்துள்ளார்.