இருமல், தடிமல் மற்றும் சுவாச பிரச்சினைகள் இருந்தால், 1390 இனை அழைக்குமாறும் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இவ்வறிவிப்பை விடுத்துள்ளார்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் 24 மணி நேரமும் செயற்படும் 1390 எனும் தொலைபேசியை தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெறவும், உரிய சேவைகளை ஒருங்கிணைக்கவும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமான கொவிட்-19 நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அதிகளவில் தேவைப்படுவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நோய் தொற்றியிருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்காக விசேட திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்காகவும், ஏனையோருக்கு நோய் தொற்றாதிருப்பதை குறைக்கவும், இலகுவானதும் உரிய சேவை மற்றும் ஆலோசனையை வழங்குவதற்காகவும், இம்மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 1390 இனை அழைக்கும் நோயாளியின் மருத்துவ நிலை குறித்து விசாரித்த பின்னர், தேவைப்பட்டால், 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவையையும் இந்த மையம் வழங்கும்.
எனவே, இந்நாட்களில் உங்களுக்கு இருமல், சளி மற்றும் சுவாச பிரச்சினைகள் இருந்தால், உடனடியாக 1390 ஐ தொலைபேசியில் அழையுங்கள் என அனில் ஜாசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.