27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
qt

2020 – தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்

நிகழும் மங்கலகரமான சார்வரி ஆண்டு உத்தராயண புண்ணிய காலம் நிறைந்த திங்கட்கிழமை இரவு மணி 7:20-க்கு 13.4.2020 கிருஷ்ணபட்சத்தில் சஷ்டி திதி, மூலம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் தனுசு ராசி, துலாம் லக்னம், நவாம்சத்தில் கும்பலக்னம் கடக ராசியில் சார்வரி ஆண்டு பிறக்கிறது.

மேஷம்

கூடிவாழும் குணம்கொண்ட உங்களின் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். இந்த ஆண்டு முழுக்கவே சனி சாதகமான வீடுகளில் செல்வதால் வழக்கில் வெற்றியுண்டு. இந்த ஆண்டு தொடங்கும்போது குரு பகவான் 10-ம் வீட்டில் அமர்வதால் காலநேரமில்லாமல் உழைக்கவேண்டி வரும். தேவையற்ற விஷயங்களை யாரிடமும் விவாதிக்காதீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். வைகாசி, ஆவணி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். அதிகாரிகள் அளவில் செல்வாக்கு அதிகரிக்கும். புரட்டாசி, தை, மாசி மாதங்களில் புது வாய்ப்புகளும் பொறுப்புகளும் தேடி வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இந்தப் புத்தாண்டு வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று செவ்வாய்க்கிழமைகளில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

ரிஷபம்

நடுநிலை தவறாத உங்களின் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்குள் ஆட்சி பெற்றிருக்கும் நேரத்தில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆண்டு தொடக்கம் முதல் 25.12.2020 வரை சனி பகவான் அஷ்டம சனியாகத் தொடர்வதால் யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். கணவரின் உடல்நலனில் கவனம் தேவை. இந்த ஆண்டு தொடங்கும்போது குரு 9-ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரத்தில் அதிரடியான அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மன இறுக்கம் அதிகரிக்கும். சக ஊழியர்களால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். மாசி, பங்குனி மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும். இந்த சார்வரி ஆண்டு முற்பகுதியில் வேலைச்சுமையைத் தந்தாலும், மையப் பகுதியிலிருந்து மகிழ்ச்சியைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் ஶ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்குங்கள்.

மிதுனம்

உங்களின் ராசியைச் சந்திரன் பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். கணவர் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார். சொந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சகோதரர் வகையில் உதவிகள் உண்டு. சனியின் சஞ்சாரம் இந்த ஆண்டு முழுவதும் சரியில்லாததால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்துங்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய வேலையாட்கள், பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சக ஊழியர்களின் சம்பள உயர்வுக்காகப் போராடுவீர்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பதவி உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். இந்தப் புத்தாண்டு வேலைகளை அலைய வைத்தே முடிக்கவைத்தாலும், முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.qt

பரிகாரம்: அருகிலிருக்கும் துர்கை அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.

கடகம்

சுதந்திர மனப்பான்மைகொண்ட உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் சார்வரி ஆண்டு பிறப்பதால் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். 14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி 6-ம் வீட்டில் நிற்பதால் எதையும் சாமர்த்தியத்துடன் சமாளிப்பீர்கள். 26.12.2020 முதல் சனி 7-ம் வீட்டில் அமர்வதால் முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். இந்த ஆண்டு தொடங்கும்போது குரு பகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவரின் வேலைச்சுமையைப் பகிர்ந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாகப் பணியாற்ற வேண்டி வரும். உயரதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். இந்த சார்வரி ஆண்டு திடீர் வெற்றியையும் புகழையும் பணபலத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலிலுள்ள ஶ்ரீசரபேஸ்வரரைச் சென்று வணங்குங்கள்.

சிம்மம்

எதையும் மறைக்காமல் பேசும் உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் புதிய யோசனைகள் பிறக்கும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். தோழிகளால் ஆதாயமடைவீர்கள். 14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே சென்று நல்வழிப்படுத்துங்கள். 26.12.2020 முதல், வருடம் முடியும்வரை சனி 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். இந்த ஆண்டு தொடங்கும்போது குரு பகவான் 6-ம் வீட்டில் நுழைவதால் செலவுகளும் பயணங்களும் இருக்கும். வியாபாரத்தில் வரவு சுமாராக இருக்கும். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். வைகாசி, தை மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பதவி உயரும். சம்பளம் கூடும். இந்தப் புத்தாண்டு சமூகத்தில் அந்தஸ்தையும் நிம்மதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவாலயம் சென்று திங்கட்கிழமையில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

கன்னி

உங்களின் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மனத்தில் தோன்றும். கணவரின் முன்கோபம் குறையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். சித்திரை, வைகாசி மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். 14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி பகவான் 4-ம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக அமர்வதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 26.12.2020 முதல் சனி 5-ம் வீட்டில் நுழைவதால் பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் ஏற்படும். ஆனால், சொத்து சேர்ப்பது, நகை வாங்குவது என்று வருமானம் உயரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் தேங்கிக்கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். சொந்த இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். இந்தப் புத்தாண்டு ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வாருங்கள்.

துலாம்

பரந்த மனப்பான்மை மிக்க உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் சார்வரி ஆண்டு பிறப்பதால் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடித்துக்காட்டுவீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். 14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி 3-ம் வீட்டில் நிற்பதால், சவாலில் வெற்றி பெறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகளால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். 26.12.2020 முதல் சனி 4-ம் வீட்டில் அமர்வதால் யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். செப்டம்பர் மாதம் முதல் கேது ராசிக்கு 2-ம் வீட்டுக்கு வருவதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 8-ம் வீட்டுக்கு ராகு வருவதால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். புரட்டாசி, கார்த்திகை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். இந்த சார்வரி புத்தாண்டு திடீர்ச் செலவுகளில் உங்களைச் சிக்கவைத்தாலும், வருமானத்தையும் அதிகப்படுத்தும்.

பரிகாரம்: பௌர்ணமி திதி நாளில் லக்ஷ்மி நரசிம்மரை வணங்குங்கள்.

விருச்சிகம்

எதிலும் புதுமையை விரும்பும் உங்களின் ராசிக்கு 2-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சோர்ந்திருந்த நீங்கள், உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீகச் சொத்தைச் சீர்செய்வீர்கள். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். சனி பகவான் 25.12.2020 வரை பாத சனியாக 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பேச்சில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 26.12.2020 முதல் சனி பகவான் 3-ம் வீட்டுக்குள் நுழைவதால் பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவருக்கு வேலைச்சுமை இருக்கும். சில விஷயங்கள் இரண்டாவது முயற்சியில்தான் முடியும். வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் புதிய கொள்முதல் செய்வீர்கள். விளம்பர யுக்திகளால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு சித்திரை, வைகாசியிலே கிடைக்க வாய்ப்புண்டு. இந்த சார்வரி ஆண்டு அடங்கிக்கிடந்த உங்களைப் பொங்கியெழவைத்து அடிப்படை வசதிகளை உயர்த்தும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவாலயத்தில் அருள்பாலிக்கும் பைரவரை வணங்குங்கள்.

தனுசு

புன்சிரிப்பால் அனைவரையும் வசீகரிக்கும் உங்களின் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சனி பகவான் 14.4.2020 முதல் 25.12.2020 வரை ஜென்ம சனியாக இருப்பதால் எதிலும் ஒரு பதற்றம் இருக்கும். 26.12.2020 முதல் பாத சனியாகத் தொடர்வதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. செப்டம்பர் மாதம் முதல் கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால் முன்கோபம் நீங்கும். 6-ம் வீட்டுக்கு ராகு வருவதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். இந்த ஆண்டு தொடங்கும்போது குரு 2-ம் வீட்டில் அமர்வதால் கணவன் மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. அரசாங்க கெடுபிடிகள் தளரும். உத்தியோகத்தில் சம்பள பாக்கி கைக்கு வரும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் வைகாசி மாதத்தில் நிறைவேறும். இந்தப் புத்தாண்டு அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு நவமி திதியில் சென்று நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

மகரம்

மனசாட்சிக்கு விரோதமில்லாத உங்களுக்கு சுக்கிரன் ஆட்சி பெற்று வலுவாக 5-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். உங்களின் ராசிக்கு 12-ம் ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வருட ஆரம்பம் முதல் 25.12.2020 வரை விரய சனி நடைபெறுவதால் திடீர்ப் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். 26.12.2020 முதல் வருடம் முடியும் வரை ஜன்ம சனி தொடர்வதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. ராகு 5-ம் வீட்டுக்கு வருவதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். ஆவணி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய திட்டங்கள் நிறைவேறும். இந்த ஆண்டு தொடங்கும்போது குரு பகவான் ராசிக்குள் ஜன்ம குருவாக வருவதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் ஈட்டுவீர்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரவு உயரும். உத்தியோகத்தில் வைகாசி, ஆனி மாதத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு. இந்த சார்வரி ஆண்டு விரக்தியின் விளிம்பில் இருந்த உங்களை வெற்றிக்கனியைச் சுவைக்கவைக்கும்.

பரிகாரம்: சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமானை அருகம்புல் சாற்றி வணங்கவும்.

கும்பம்

வந்தாரை உபசரிக்கும் பண்பாளரான உங்களின் ராசிக்கு 11-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். விருந்தினர்கள் வருவதால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் நெடுநாள் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். 14.4.2020 முதல் 25.12.2020 வரை சனி லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிலும் முன்னேற்றம் உண்டு. பணத்தட்டுபாடு நீங்கும். 26.12.2020 முதல் ஏழரைச் சனி தொடர்வதால் அலைச்சல், வேலைச்சுமை அதிகரிக்கும். ஆண்டு தொடங்கும்போது குரு பகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதால் திடீர்ப் பயணங்கள், சுப செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். உத்தியோகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தவர்களுக்கு ஆர்வம் பிறக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்தப் புத்தாண்டு சமயோஜித புத்தியாலும் சகிப்புத்தன்மையாலும் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சாய்பாபா ஆலயத்துக்குச் சென்று வாருங்கள்.

மீனம்

செயற்கரிய செயல்களைச் செய்தாலும் சாதாரணமாக இருக்கும் உங்களின் ராசிக்கு 10-வது ராசியில் இந்த சார்வரி ஆண்டு தொடங்குவதால் சாதனைகள் தொடரும். வைகாசி, ஆவணி மாதங்களில் திடீர்த் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். கணவருக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டு. சனி பகவான் சாதகமான வீடுகளில் செல்வதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். செப்டம்பர் மாதம் முதல் ராகு 3-ம் வீட்டுக்கு வருவதால் எதிலும் தெளிவு பிறக்கும். எதிர்ப்புகள் அடங்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கேது 9-ம் வீட்டில் நுழைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் செய்ய வேண்டிவரும். இந்த ஆண்டு தொடங்கும்போது குரு பகவான் லாப வீட்டில் அமர்வதால் ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்று சேருவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்து கடையை அலங்கரிப்பீர்கள். மார்கழி, தை மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் வைகாசி, ஆனி மாதங்கள் சாதகமாக இருக்கும். இந்தப் புத்தாண்டில் திடீர்த் திருப்பங்கள் இருப்பதால், சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பரிகாரம்: ஶ்ரீகாமாட்சி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.