கரோனா தொற்று எண்ணிக்கையில் தவறு செய்கிறோமா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியவருக்கு சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் பதிலளித்துள்ளார்
தமிழகத்தில் இன்றைய (ஏப்ரல் 5) நிலவரப்படி மொத்தம் 571 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது.
கரோனா வைரஸ் தொற்று தமிழகத்துக்குள் வந்ததிலிருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும், தினமும் கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்பாக மாலையில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது மட்டுமன்றி, தனது ட்விட்டர் தளத்தைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்புபவர்களுக்கும் பதிலளித்து வருகிறார் பீலா ராஜேஷ்.
அதன்படி இன்று (ஏப்ரல் 5) பீலா ராஜேஷின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ஒருவர், “டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு நபர் திரு.வி.க நகரில் பிடிபட்டதாக சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸப்பிலும் ஒரு செய்தி பரவி வருகிறது. 1103 பெரும் கண்டறியப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் சொன்னீர்களே? பிறகு இது என்ன? பொய் சொன்னீர்களா? அல்லது இது வதந்தியா? என்னுடன் ஸ்க்ரீன் ஷாட் உள்ளது. உங்களால் தெளிவுபடுத்த முடியுமா?
நான் உங்கள் தெளிவான பதிலுக்காகக் காத்திருக்கிறேன். வதந்திகளும், மத வெறுப்பும் பரவிக் கொண்டிருக்கிறது. உங்கள் மவுனம் அதை மேலும் தீவிரமாக்குவதாக உள்ளது. எனவே தயவுசெய்து இந்த சம்பவத்தைப் பற்றி தெளிவுபடுத்துங்கள். எண்ணிக்கையில் தவறு செய்கிறோமா அல்லது வேறு இடத்தில் தோற்கிறோமா? உங்கள் தகவலுக்கு’ என்று கேள்வி எழுப்பினார்.
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக பீலா ராஜேஷ், ‘நல்லிணக்கத்துக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் பல துறைகளும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். தொடர்புகளைக் கண்டுபிடிக்கும்போது எண்ணிக்கையும் கூடுகிறது. கோவிட் 19 அச்சுறுத்தலுக்கு எதிரான யுத்தம் இது’ என்று பதிலளித்துள்ளார்.
Reconciliation work is going on still as multiple intelligence agencies are at work. As we trace contacts the number will increase. This is a fight against containment of a pandemic covid19. https://t.co/m41FZ1FJm4
— Dr Beela IAS (@DrBeelaIAS) April 5, 2020