டேராடூன்: டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாஅத் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் முன் வந்து தகவல்களை 24 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும், இல்லையெனில், கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என: உத்தரகண்ட் டிஜிபி அனில் ரதுரி எச்சரித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 4122 பாதிக்கப்பட்டுள்ளனர். 117 பேர் உயிரிழந்துள்ளனர். 315 பேர் குணம் அடைந்துள்ளனர். 3690 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மார்ச் மாதம் முதல் இரண்டு வாரத்தில் டெல்லி நிஜாமுதீனில் தப்லிக் ஜமாஅத் சார்பில் நடந்த சமய சொற்பொழிவு கூட்டங்களில் இந்தியா முழுவதும் பல ஆயிரம் மக்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நாடு முழுவதும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் மருத்துவ பரிசோதனை இதுவரை செய்யாதவர்களை அந்தந்த மாநில அரசு தீவிரமாக தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் முழுமையாக அனைவரும் தாங்களாக முன்வந்து சோதனைக்கு உட்படுத்தி கொண்டனர். இந்நிலையில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களிலும் அரசு மற்றும் போலீஸ் சோதனைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில டிஜிபி அனில் ரதுரி, தப்லிக் ஜமாஅத் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் முன் வந்து தகவல்களை 24 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும், இல்லையெனில், கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.