ஆரஞ்சு பழம் – சுளைசுளையாக உரித்து சாப்பிட எல்லோருக்குமே ஆர்வம் உண்டு. அதுவும் ஆரஞ்சு பழம் தட்டுப்பாடின்றி சுவையானதாக கிடைக்கும் சீசனில் விரும்பி சாப்பிடுவோர் அநேகர்.
ஆரஞ்சு பழம் போன்ற சிட்ரஸ் வகை பழங்களின்மேல் பூச்சிக்கொல்லி தெளிக்கப்படுகிறது. இயற்கையான முறையில் விளைந்த ஆரஞ்சு பழங்களையே கவனித்து வாங்க வேண்டும். அது பூச்சிக்கொல்லியின் தாக்கம் இல்லாமல் இருக்கும்.
ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டபின் தோலை என்ன செய்கிறீர்கள்? குப்பையிலே வீசி குப்பைத் தொட்டியை நிறைத்து விடுகிறீர்களா? வெளியே வீசுவதைக் காட்டிலும் பயனுள்ள காரியங்களுக்கு இப்பழத்தின் தோலை பயன்படுத்தலாம்.
உலர வைக்கப்பட்ட தோல்
இனிப்பான ஆரஞ்சு பழத்தின் தோல் பல்வேறு மூலிகை பயன்பாடுகள் கொண்டது செரிமான கோளாறுகளை நீக்குவதுடன் சருமத்திற்கு ஆரோக்கியமும் அளிக்கக்கூடியது. இதன் தோலிலிருந்து கிடைக்கக்கூடிய எண்ணெய்க்கும் இதே மருத்துவ பயன்கள் இருக்கிறது. ஆரஞ்சு பழத்தின் தோலை நன்கு உலர வைத்து உங்கள் மூலிகை பெட்டியில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.
கிடைக்கும் ஆரஞ்சு பழ தோலினை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு வெயிலில் உலர வைக்கவும். வெயிலில் உலர வைக்க இயலாது என்பவர்கள், மின் அடுப்பில் (oven) குறைந்த வெப்பநிலையில் இத்தோலினை வைத்து வாட செய்தும் பயன்படுத்தலாம்.
ஆரஞ்சு செஸ்ட்
ஆரஞ்சு பழம் கையில் இல்லாத காலங்களிலும் பயன்படுத்தும்படி அதை உறைநிலையில் பராமரித்து தேவையானபோது எடுத்துப் பயன்படுத்தலாம். உறைய வைக்கப்பட்ட இந்த தோலிலும் எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய் சத்து இருக்கும்.
ஆரஞ்சு பழ தோல் மிகுதியாக கிடைத்தால் அதை கண்ணாடி பாட்டில் ஒன்றில் சேகரியுங்கள். அதை உறைநிலையில் ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். தேவைப்படும் அதில் இரண்டு தோல் துண்டுகளை எடுத்து, உருக வைத்து பயன்படுத்தலாம்.
வினிகரில் ஊறிய தோல்
மீதமான ஆரஞ்சு தோலை வினிகரில் ஊற வைத்து பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும். புதிய மற்றும் உறைநிலையில் வைக்கப்பட்ட தோலினை இதற்கு உபயோகிக்கலாம். வினிகரில் அல்கலாய்டுகள், தாவரங்களிலுள்ள சத்துகள் ஆகியவை இருப்பதால் ஆரஞ்சு பழ தோல் ஊறிய வினிகர், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வீட்டையும் பாத்திரங்களையும் பொருள்களையும் சுத்தப்படுத்தவும் இந்த வினிகரை பயன்படுத்தலாம்.
சர்க்கரைப் பாகில் இடப்பட்ட தோல்
ஆரஞ்சு பழ தோலை சர்க்கரைப் பாகில் இட்டு ‘கேண்டீயட் பீல்’ செய்யலாம். இதை தனியாகவோ, ஏனையவற்றுடன் சேர்த்தோ சாப்பிடலாம். கொண்டாட்ட மனநிலையை கொடுக்கக்கூடிய அற்புதமான சுவை கொண்டது இது. உலர வைக்கப்பட்ட தோலை போன்றே இதுவும் மருத்துவ குணங்கள் கொண்டது. ஆனால், இதில் சர்க்கரை கலந்திருப்பதால் உலர்ந்ததைப்போன்று அதிக அளவுக்கு பயன்படுத்த இயலாது.
கேண்டீயட் பீல் செய்வது எப்படி?
தேவையானவை
பெரிய ஆரஞ்சு பழங்கள் – 2 எண்ணம்
நீர் – 3 கப்
சர்க்கரை – 4 கப்
செய்முறை
ஆரஞ்சு பழத்தை உரித்து, அதன் தோலை ¼ அங்குல அகலத்திற்கு பட்டையாக வெட்டிக்கொள்ளவும். வெட்டிய தோல் துண்டுகளை நீரில் 15 நிமிடத்திற்கு வேக வைக்கவும். பிறகு நீரை இறுக்கி, தோலை வேறு நீரில் நன்கு அலசவும்.
மூன்று கப் நீருடன் மூன்று கப் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு அதனுள் வெட்டப்பட்ட ஆரஞ்சு தோலை போட்டு முழு நிலையில் கொதிக்கவிட்டு, உடனடியாக ஜூவாலையை குறைத்துவிட வேண்டும்.
மெலிதான ஜூவாலையில் 45 நிமிடங்கள் எரிய விடவும். பின்னர், நீரை இறுத்து எடுக்கவும். மீதியிருக்கும் சர்க்கரையினுள் அவிக்கப்பட்ட தோலை போட்டு நன்றாக குலுக்கவும். பின்னர் சர்க்கரை கிண்ணத்திலிருந்து தோல் துண்டுகளை எடுத்து முழுவதுமாக ஒன்று முதல் இரண்டு நாள்கள் உலர விடவும். இதை காற்றுப்புகாத கலன்களில் மூடி வைக்கவும்.
தூர எறியப்படும் ஆரஞ்சு தோலை இப்படி பல பயனுள்ள விதங்களில் சாப்பிடலாம். எதுவே செய்யமாட்டேன் என்கிறீர்களா? வீட்டுத் தோட்டத்தினுள் எரிந்து விடுங்கள்; அது உரமாக பயன்படும்.