நெல்லை டவுன் வாகையடி முனையில் உள்ள ஒரு கண்ணாடி கடை முன்பு மஞ்சளும் வேப்பிலையும் தண்ணீரில் கலந்து இயற்கை கிருமி நாசினியை கடைக்காரர் வைத்துள்ளது அனைவரையும் ஈர்த்து வருகிறது.
திருநெல்வேலி டவுன் வாகையடி முனையில் உள்ள கண் கண்ணாடி கடைக்காரர் மீராசா தனது கடைவாசலில் இயற்கையான கிருமிநாசினி தயார் செய்து வைத்துள்ளார்.
இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் இந்த இயற்கை கிருமி நாசினி பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், வெந்நீரில் மஞ்சளையும் வேப்ப இலையையும் கலந்து வைத்தால் கிருமி நாசினியாக பயன்படும் என சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி இதனை தயார் செய்து வைத்துள்ளதாகவும், செயற்கையாக தயாரிக்கப்படும் சானிடைசர்களில் கெமிக்கல் பயன்பாடு இருக்கும் எனவும், இயற்கையாக மஞ்சள் மற்றும் வேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கியுள்ளதாகவும் அதன் காரணமாக இவ்வாறு வைத்துள்ளதாக கூறினார்.
மேலும், அம்மை நோய் தாக்கத்தில் இருந்து காப்பதில் மஞ்சள் – வேப்பிலை மிக முக்கிய பங்காற்றி வருவதாகவும், இந்த இயற்கை கிருமிநாசினி கொரானா வைரஸ் தொற்றை தடுக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை என்ற போதிலும் அனைவரும் பயன்படுத்தும் எளிய வழியாக இந்த இயற்கை கிருமிநாசினி உள்ளது என அவர் தெரிவித்தார்.