கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
பிரபல அமெரிக்க பாடகர் ஜோ டிப்பிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது சில நாட்களுக்கு முன்பு உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜோ டிப்பி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61. இது இசையுலக ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவில் ஜோ டிப்பி புகழ்பெற்ற பாடகராக இருந்தார். 1990-களில் பல இசை ஆல்பங்களை வெளியிட்டு உள்ளார்.
இவரது 18 பாடல்கள் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இசை உலகில் உயர்ந்த விருதாக கருதப்படும் ‘கிராமி’ விருதையும் பெற்று இருக்கிறார். இவருக்கு தெரசா கிரம்ப் என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஏற்கனவே பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, ஹாலிவுட் நடிகை இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ ஆகியோருக்கும கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், ஹாலிவுட் நடிகை ஓல்கா குரிலென்கோ ஆகியோர் கொரோனா பாதிப்பில் சிக்கி சிகிச்சை மூலம் குணமடைந்து இருக்கிறார்கள்.