டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இஸ்லாமிய சொற்பொழிவுகள் நடைபெறும் தப்லீக் ஜமாத் மாநாடு மார்ச் 13 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது , தமிழ்நாட்டிலிருந்து சுமார் 1500 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர் , இதேபோல் தெலுங்கானா மற்றும் மலேசியா , தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 8000 க்கும் அதிகமானோர் இதில் கலந்து கொண்டனர் . இதில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதுடன் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது . இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய தெலுங்கானாவை சேர்ந்த 6 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர் .
இந்நிலையில் மாநாடு நடைபெற்ற டெல்லி நிஜாமுதீன் மையத்திலிருந்து சுமார் 300 பேர் வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . மேலும் அங்கு தங்கியிருந்த 700 பேர் பல்வேறு பகுதிகளில் தனிமை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர் . நிஜாமுதீன் மையமும் முழுவதும் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் சுற்றுலா விசாவில் வந்து அதற்கான விதிகளை மீறி மத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சுமார் 300 வெளிநாட்டவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது . இதேபோல் இந்தோனேஷியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து நிஜாமுதீன் மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 800 இந்தோனீசிய தப்லீக் பிரச்சாரிகளை கருப்பு பட்டியலில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது . கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டால் அவர்கள் எதிர்காலத்தில் இந்தியாவிற்குள் நுழைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ், டெல்லியில் மாநாடு முடித்து தமிழகம் திரும்பிய 1131 பேரில் சுமார் 515 பேரை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மீதமுள்ள 616 பேர் தங்களது செல்போனை அணைத்து வைத்துள்ளதுடன் அவர்கள் தலைமறைவாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தயவு செய்து தாங்களாகவே முன்வந்து சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்குமாறு பீலா ராஜேஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் டெல்லி சென்று தமிழகம் திரும்பியவர்களில் 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பிடதக்கது. தமிழகத்தில் தலைமறைவாக உள்ள 616 பேரால் பலருக்கும் கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை செய்வதறியாது , மிகுந்த கலக்கம் அடைந்துள்ளது.