ஈரோடு மாவட்டத்தில் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தவிர 81 பேர் மருத்துவமனையிலும், 5,400 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்தார்.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் ஈரோட்டுக்கு கடந்த 11 ஆம் தேதி வந்தனர். அவர்கள் சில நாள்கள் ஈரோடு சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரியம் ஆகிய இடங்களில் உள்ள மசூதிகளில் தங்கியிருந்து தொழுகை நடத்தினர். அவர்களில் ஒருவர் கோவைக்குச் சென்றார். அங்கு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேர் மீட்கப்பட்டுப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவர்களுடன் தொடர்புடைய சிலர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. எனவே ஈரோடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக இருந்தது.
இந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் இன்று அளித்த பேட்டி:
“ஈரோட்டிற்கு வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்களுடன் அருகில் இருந்த ஈரோட்டைச் சேர்ந்த 3 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதுபோல் தாய்லாந்து நாட்டினருக்கு உதவியாக இருந்தவர்கள், அருகில் இருந்தவர்கள் என மொத்தம் 29 பேர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல் கரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற அறிகுறியுடன் மொத்தம் 81 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடைய ரத்த மாதிரி எடுக்கப்பட்டுப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த பகுதிகளும், அவர்கள் சென்று வந்த இடங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சுமார் 1,750 குடும்பங்களைச் சேர்ந்த 5,400 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான காய்கறி விநியோகம், தண்ணீர் வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த பகுதிகள் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த 11 நாள்கள் கரோனா வைரஸ் விரைவாக பரவும் அபாயம் உள்ளது. எனவே, மக்கள் தாங்களாகவே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். வெளி மாநில, வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்தவர்கள் இருந்தால், உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சளி, காய்ச்சல் இருந்தால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அது சாதாரண காய்ச்சலாகக்கூட இருக்கலாம். மேலும் கரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்படும்” என்றார் கதிரவன்.