நகங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்… வழக்கமாக நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்கள், நகங்களைச் சரியான முறையில் பராமரிக்காமல் விட்டால், பல பிரச்னைகள் ஏற்படும்.
“முன்பெல்லாம், தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு நெயில் பாலிஷ் தயார் செய்யப்பட்டது. அதனால், நகங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான நெயில் பாலிஷ்கள், ஆயில் அல்லது லேக்கர் (Lacquer) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்படுகின்றன.
நீண்ட நாள்கள் அழியாமல் இருப்பதற்காக இவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கிறார்கள். மேலும், பெரும்பாலான நெயில் பாலிஷ்கள் டார்க் ஷேடுகளில்தான் கிடைக்கின்றன. அவை நிச்சயம் நகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
இந்த ரசாயன நெயில் பாலிஷ்களைப் பயன்படுத்தும்போது, அதன் பாதிப்புகளை ஈடுகட்ட நகங்களுக்கு முறையான பராமரிப்பு கொடுக்கப்படவில்லை என்றால், நிச்சயம் நகங்களின் வேர் வலுவிழந்துவிடும்; நகத்தின் நிறம் மஞ்சளாக மாறும் வாய்ப்பிருக்கிறது. எனவே, தொடர்ந்து நெயில் பாலிஷ் உபயோகிப்பவர்கள், வாரத்திற்கு ஒருமுறையாவது நகங்களைச் சுத்தம்செய்து, ஒரு நாள் முழுவதும் எந்த பாலிஷும் இல்லாமல் காற்றோட்டமாக நகத்தை விட்டிருப்பது நல்லது.
எப்போதும் தரமான நெயில் பாலிஷையே உபயோகிக்கவும். நெயில் பாலிஷை நேரடியாக நகத்தில் அப்ளை செய்வதற்கு முன், ‘பேஸ் கோட்’, அதாவது நிறமற்ற ட்ரான்ஸ்பரென்ட் பாலிஷை அப்ளை செய்யவும். நெயில் பாலிஷ் போட்டபிறகும் இந்த நெயில் பேஸை அப்ளை செய்யலாம்.
வாரத்திற்கு ஒரு முறை நெயில் பாலிஷை முற்றிலும் அகற்றிவிட்டு, சோப் கலந்த குளிர்ந்த நீரில் விரல்களை ஐந்து நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, சாதாரண தண்ணீரில் நன்கு கழுவி, விரல்கள் நன்கு உலர்ந்தவுடன், ஒரு சொட்டு ஆலிவ் எண்ணெய் அல்லது க்யூடிகிள் க்ரீமை விரல்களில் அப்ளை செய்யவும். வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.
இப்படிச் செய்வதால், நகங்கள் நன்கு சுவாசிப்பதுடன் க்யூட்டிகிள்களும் மென்மையாக மாறும். நகங்கள் உடையாமல் வலுவாக இருப்பதற்கும் இந்த மசாஜ் உதவும்.