நமது பழக்க வழக்கங்கள் அழிந்துகொண்டே வருகிறது.எண்ணெய் தேய்த்து குளிப்பதையும் அதில் சேர்த்துகொள்ளலாம். ஏனெனில் இன்றைய தலைமுறையினரை பொருத்தவரை எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது தீபாவளிக்கு மட்டுமே.
ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சனிக்கிழமை வந்தால் அனைவரின் வீட்டிலும் எண்ணெய் குளியல்தான். சரி, தீபாவளி அன்று மட்டும் எண்ணெய் தேய்த்து குளித்தால் நன்மை ஏற்படுமா? என்றால் கண்டிப்பாக இல்லை. எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலுக்கு குளிர்ச்சியை மட்டும் தராமல் உள்ளத்துக்கு புத்துணர்ச்சியையும் அளிக்கக்கூடியது.
சரி எந்தெந்த தினங்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பது. பொதுவாக நம்மில் பலருக்கும் ஞாயிறன்று விடுமுறை என்பதால் அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர். ஆனால் அது தவறு. “ஞாயிற்றுகிழமை கழுதை கூட எள்ளு காட்டு பக்கம் போகாது” என்பது பழமொழி. சனி நீராடு என்பதும் பழமொழி. நீங்கள் பிறந்த நட்சத்திரம், திகதி, கிழமைகளில், குளிக்க கூடாது என்பது ஐதீகம். பொதுவாக, ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமைகளில் குளிப்பது உசிதம்.
ஏனென்றால் சனி பகவான் அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி. எனவே எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும். இதே போன்று பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை. மேலும் செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணை தேய்த்துக் குளித்தல் நலம்.
இதேபோல் காலை 8 மணிக்கு முன் மற்றும் மாலை 5 மணிக்கு பின் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? நமது உடலில் சூடு அதிகரிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை வெயில் காலத்தில் ஏற்படுவது இயல்பு. எனவே, வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இப்படிப்பட்ட பிரச்னைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
உடலில் எண்ணெய்யை நன்றாக அழுத்தி தேய்ப்பதன் மூலம் தோலில் உள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் குளியல் நீக்கிவிடுகிறது. குறிப்பாக உடலில் பல உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி ஏற்படுகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலில் பளபளப்புக் கூடுகிறது. வறண்ட தோல் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் அவசியம். மேலும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. உடலில் சூடு குறைவதால் மனம் புத்துணர்ச்சி அடைகிறது. எனவே எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உங்களின் உடலையும் உள்ளதையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.