தினமும் காலையில் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதோடு, உடலின் நச்சுகளையும் வெளியேற்ற உதவும்.
குளித்து முடித்த பின் உங்கள் சரும வகைக்குப் பொருத்தமான மாய்ஸ்ச்சரைஸரை, தேவையான அளவுக்கு உடல் முழுவதும் அப்ளை செய்யவும்.கோடைக்காலத்தில் சன்ஸ்க்ரீன் லோஷன் நிச்சயம் பயன்படுத்த வேண்டும். சாலையில் பயணம் செய்யும்போது முகத்தில் மாஸ்க் அணிந்தும், கை, கால்களுக்கு கிளவுஸ் மற்றும் சாக்ஸ் அணிந்தும் செல்லும்போது, சருமம் வெயில் மற்றும் மாசிலிருந்து பாதுகாக்கப்படும்.
பகலில்.
பயணத்தின்போது முகத்தில் படிந்த அழுக்கை, அலுவலகம் சென்றதும் ‘வெட் டிஷ்யூ’ உபயோகித்து சுத்தம் செய்யலாம். இதற்குக் குறைந்த நேரம்தான் செலவாகும். சருமத்தில் ஒவ்வாமை ஏற்படலாம் என்பதால், வாசனைக்காக கெமிக்கல் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும் டிஷ்யூக்களைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் இருப்பின் மிதமான ஃபேஸ் வாஷ் கொண்டும் முகம் கழுவலாம். முகத்தைத் துடைத்த பின் பொருத்தமான மாய்ஸ்ச்சரைஸரை அப்ளை செய்யவும். உதட்டுக்கும் பாதுகாப்பு அவசியம் என்பதால் தவறாமல் ‘லிப் பாம்’ பயன்படுத்தவும்.
தற்போது பெரும்பாலான அலுவலகங்களிலும் ஏ.சி இருக்கிறது. ஏ.சி-யில் சருமம் பாதுகாப்போடுதான் இருக்கிறது என நினைக்க வேண்டாம். சருமத்தின் இயற்கையான ஈரப்பதம் ஏ.சி-யால் பாதிக்கப்படும். அதனால், கடைகளில் கிடைக்கக்கூடிய ‘மாய்ஸ்ச்சரைஸர் மிஸ்ட்’டை முகத்தில் ஸ்ப்ரே செய்துகொள்வது நல்லது.சிறிய ஸ்ப்ரே பாட்டிலில் 50% தண்ணீருடன் 50% ரோஸ் வாட்டர் கலந்து, அதில் விட்டமின் இ மாத்திரை ஒன்று, டீ-ட்ரீ (Tea Tree) அல்லது லாவண்டர் போன்ற ஏதாவதொரு எசென்ஷியல் ஆயில் ஐந்து சொட்டுகள் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும். இதை மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை முகத்தில் ஸ்ப்ரே செய்துகொள்ளலாம்; சருமத்தைப் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும்.
மாலையில்.
மாலை வீடு திரும்பியதும், சிறிதளவு காய்ச்சாத பாலை முகத்தில் தடவி மசாஜ் செய்வது அவசியம். தேவைப்பட்டால் பாலில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து ‘ஸ்கிரப் (Scrub)’ பதத்துக்குக் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இப்படிச் செய்யும்போது முகத்திலிருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்கும்.முகத்தைச் சுத்தம் செய்த பின் டோனர் அப்ளை செய்ய வேண்டும். இது, சருமத்தில் திறந்திருக்கும் துவாரங்களை மூடச்செய்து சருமத்தைத் தொய்வில்லாமல் இறுக்கமாக வைத்துக்கொள்ளும். லிப்ஸ்டிக் உபயோகிக்கும் வழக்கம் உள்ளவர்கள், இந்த பால்-சர்க்கரை ஸ்கிரப்பை உதட்டுக்கும் தடவி மசாஜ் செய்யலாம்.
இரவில்.
சருமத்தின் ஆரோக்கியத்துக்கு, இரவு உறங்குவதற்கு முன்பு ஒரு குளியல் போடுவது அவசியம். குளித்த பின் உடலுக்கு எதுவும் அப்ளை செய்யாமல் இரவு முழுவதும் சருமத்தை சுவாசிக்க விடவும். தேவைப்பட்டால் முகம் மற்றும் கை, கால்களுக்கு மட்டும் நைட் க்ரீம் அல்லது மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்தலாம்.