கேமரா முன் தோன்றும் பிரபலங்கள் அதை குறைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். இதற்காக அவர்களின் முக அமைப்பின் பரப்பளவிற்கு(Volume) ஏற்றவாறு பெரியதாக உள்ள உதடுகளை சிறியதாக மாற்றி அமைப்பதற்கு உதடு குறைப்பு அறுவை சிகிச்சையும் (Lip Reduction Surgery), முகம் பெரிதாக இருந்து உதடு மட்டும் சிறியதாக இருப்பவர்களுக்கு உதடு பெருக்குதல் (Lip Fillers) அறுவை சிகிச்சையும் செய்யலாம்.
உதடு குறைப்பு அறுவை சிகிச்சை என்றால் என்ன?
முதலில் மேல் மற்றும் கீழ் உதடுகளின் அளவுகள் சமமாக ஒரே மாதிரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். முகத்தின் அழகியல் அலகுகள் (Easthetic units of Face) சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். அதற்கேற்றவாறு எந்த அகலத்தில் குறைத்தால் இயல்பாக இருக்குமோ அந்த அளவிற்கு உதடுகளை குறைத்துக் கொடுப்பதற்குப் பெயர்தான் உதடு குறைப்பு அறுவை சிகிச்சை (Lip Reduction Surgery) என்று பெயர்.
சிகிச்சை எப்படி செய்யப்படும்?
வலி தெரியாமல் இருக்க உதட்டுப்பகுதியில் மட்டும் மரத்துப்போகும் ஊசி போட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு, வடு தெரியாமல் இருக்க ஒருவரின் உதட்டின் இளஞ்சிவப்பு உள் பகுதியில் ஒரு கிடைமட்ட கோட்டில் ஒரு கீறல் செய்கிறோம். பின்னர் உதட்டின் ஒட்டுமொத்த அளவைக் குறைக்க, அங்கு அதிகப்படியாக இருக்கும் கொழுப்பு மற்றும் திசுக்களை நீக்க வேண்டும். அனைத்து திசுக்களும் அகற்றப்பட்டதும், கீறல்களை தையல் போட்டு மூடிவிட வேண்டும். தையல் காய்ந்ததும், சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் தானாகவே விழுந்துவிடும்.
யாரெல்லாம் செய்து கொள்ளக்கூடாது?
நம்பத்தகாத எதிர்பார்ப்புகள் உள்ளவர்கள், தங்களுக்கு நார்மலாக இருக்கும் மூக்கு உதடுகளைக்கூட அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்ள விரும்புவார்கள். பல் வரிசை சரியாக இல்லாமல் இருந்தால் கூட உதடு தூக்கிக் கொண்டு இருக்கும். அவர்களுக்கு பல்வரிசையை சரி செய்தாலே போதும். லிப் ரிடக்ஷன் அறுவை சிகிச்சை வேண்டியதில்லை. அழற்சி நோய்கள் மற்றும் மூட்டுவலி, ஆர்த்தரைட்டிஸ் போன்ற ஆட்டோ இம்யூன் நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள், அடிக்கடி வாய்ப்புண் வருபவர்கள் இந்த சிகிச்சையை செய்து கொள்ளக்கூடாது. புகைப்பழக்கம் உள்ள ஆண்கள் கண்டிப்பாக செய்து கொள்ளக்கூடாது.
பக்கவிளைவுகள் ஏதேனும் உண்டா?
பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏதும் இருக்காது. சாதாரணமாக 3 நாட்களில் சரியாகிவிடும். ஒருசிலருக்கு அனஸ்தீஷியாவால் அலர்ஜி வந்து தடித்துக் கொள்ளலாம். அல்லது ரத்தப்போக்கு இருக்கும். அதிகபட்சமாக ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
உதடு பெருக்குதலுக்கு(Lip Augmentation) ஏதேனும் சிகிச்சை உண்டா?
சிலருக்கு முகப்பரப்பளவிற்கேற்றபடி இல்லாமல் மிகவும் சிறியதாக உதடுகள் இருக்கும். இவர்களுக்கு ஃபில்லர்ஸ் என்று சொல்லக்கூடிய கொலாஜன், ஹையலூரோனிக் அமிலம் (Hyaluronic acid) போன்றவற்றை ஊசிகள் மூலம் உதட்டுப்பகுதியில் செலுத்தி சின்னதாக உள்ள உதட்டை பெரிதாக்கலாம் அல்லது உடலின் மற்ற பகுதியிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பை எடுத்து ஊசிமூலம் உதட்டில் செலுத்தியும் பெரிதாக்கலாம்.