திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் தெரியாதவராக இருந்தால், அவர் எப்பேர்பட்டவர் என்பது தெரியாமல், மனமானது ஒருவித அழுத்தத்துடனும், படபடப்புடனும் இருக்கும். ஆனால் அந்த திருமணமானது விருப்பப்பட்டவருடன் நடந்தால், அப்போது வாழும் வாழ்க்கையே ஒரு தனி சுகம் தான்.
மேலும் அந்த வாழ்க்கையானது இனிமையாக செல்லும். அந்த வகையில் திருமணம் செய்து கொள்ள போகும் நபர், மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்ததுண்டா? தெரியாதவரை திருமணம் செய்து கொண்டு, மனம் ஒத்துப் போகாமல் இருந்து, அடிக்கடி சண்டை போடுவதை விட, நன்கு புரிந்து கொண்டு, காதல் மலர வைத்த தோழனை மணந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும்.
நண்பர்களை மணந்து கொள்ளும் போது, அவர்களுக்கு நம்மைப் பற்றிய கடந்த கால வாழ்க்கைப் பற்றி நன்கு தெரியும். மேலும் விருப்பங்கள், உணர்ச்சிகள் போன்றவற்றை நன்கு புரிந்திருப்பதால், திருமணத்திற்கு பின் நல்ல புரிதலுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ முடியும். புதிய நபரை திருமணம் செய்து கொண்டு, அவர்களுடன் சகஜமாக பழகுவதற்கு பல மாதங்கள் ஆகலாம்.
மேலும் அத்தகையவர்களிடம் சாதாரணமாக பழகுவதற்கு ஒருசில பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டி வரும். ஆனால் அதுவே தோழனாக இருந்தால், சாதாரணமாக சங்கடம் ஏதுமின்றி சகஜமாக பழகலாம். நண்பர்களை மணந்து கொள்வதில் உள்ள நன்மைகளில் முக்கியமானது, மனதில் இருக்கும் கோபம், பொறாமை போன்றவற்றை வெளிக்காட்ட முடியும்.
இதனால் இருவரும் சிறு சண்டைகளுக்காக பிரியும் நிலை இருக்காது. ஆனால் வெளிநபராக இருந்தால், மனதில் வைத்து கஷ்டப்பட வேண்டியிருக்கும். எதையும் வெளிப்படையாக பேச முடியாது. உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது.