ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். மேலும் பழத்தோலை பாலுடன் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும்.
தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். இதனுடன் முட்டையில் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்தும் முகத்தில் தடவி வந்தால் முகத்தில் வலரும் தேவையற்ற முடிகளின் வளர்ச்சி தடைபடும்.
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும்.
இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.