சிரிப்பது போன்ற தோற்றமே சந்தோஷத்தை தருமென்றால் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். வாழ்வே சந்தோஷமயமாக மாறிவிடும்.
மகிழ்வான வாழ்க்கைக்கு ‘பாவனை’ ரகசியம்
எல்லாரும் மகிழ்ச்சியாக வாழத் தான் விரும்புகிறார்கள்… ஆனால் மகிழ்ச்சியாகத்தான் இருக்க முடியவில்லை.!
மகிழ்ச்சியாக இருக்க ஏதோ ஒரு பெரிய விஷயம் நடக்க வேண்டும் என்பதில்லை. அதை யாரோ கொண்டு வந்து தரவேண்டியதில்லை.
அதை தேடி நீங்களும் போக வேண்டியதில்லை. ஏன் என்றால் அது உங்களிடமேதான் எப்போதும் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் அதை எவ்வளவு வேண்டுமானாலும் பெறலாம்.
மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
மகிழ்ச்சியாக இருப்பதற்கான முதல் படியே சிரிப்பதுதான். முகத்தில் புன்னகை மலர்ந்தால் அகத்தில் மகிழ்ச்சி மலரும். அதற்காக குலுங்கி குலுங்கி சிரிக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை.
மெல்லியதாக ஒரு புன்னகை பூத்தாலே போதும். உங்கள் மனதில் மகிழ்ச்சி மலரும். உங்கள் மனத்திற்குள் மகிழ்ச்சியை சுரக்க செய்வது ஒரு ஹார்மோன்தான்.
அந்த மாமருந்துக்கு பெயர் என்ன தெரியுமா? எண்டோர்ஃபின்ஸ். இது வெளியே எங்கேயும் இல்லை. உங்களுக்குள்தான் இருக்கிறது.
“நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று நீங்கள் மனதார நினைத்தாலே போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோனை சுரக்கும்படி பிட்யூட்டரி சுரப்பிற்கு மூளை கட்டளையிடும்.
அடுத்த சில நெடிகளில் எண்டோர்ஃபின்ஸ் சுரக்க, மனசுக்குள் மகிழ்ச்சியும் உடலில் புத்துணர்ச்சியும் தோன்றும். இந்த ஹார்மோன் எப்போதெல்லாம் சுரக்கும் தெரியுமா?
நீங்கள் நகைச்சுவை உணர்வோடு இருக்கும் போது, சுறுசுறுப்பாக இயங்கும் போது, விறுவிறுவென உடற்பயிற்சி செய்யும் போது, உடலை நேராக நிமிர்த்தி யோகா செய்யும் போது, எந்தவொரு செயலையும் விரும்பி செய்யும் போது ஆகிய தருணங்களில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கும்.
அப்படியானால் இதற்கு எப்போதும் இதுபோன்ற ஒரு செயலை செய்து கொண்டுதான் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் உங்கள் மனதில் எழும்.
அவ்வாறு செய்வது நல்லதுதான். ஆனால் முடியாத பட்சத்தில் இந்த எளிதான விசயத்தை செய்யலாம். அது என்னவென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற பாசாங்கு அதாவது பாவனை செய்வதுதான்.
பாசாங்கு செய்வதால் பலன் கிடைக்குமா?
மகிழ்ச்சி குறித்து பாசாங்கு செய்யும் போது உங்கள் மனம் அதை நிஜம் என்பது நம்பி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தயார் என உங்கள் மூளைக்கு தகவல் வரும். உடனே எண்டோர்ஃபின்ஸ் சுரந்து உங்களுக்குள் புத்துணர்ச்சி பெருகும்.
சோகத்தின் போது நம்மில் பலர் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விடுவார்கள். பிரச்சினைகளால் மனம் சங்கடப்படும் போது அல்லது கடந்த கால சோக சம்பவங்கள் எதையாவது நினைக்கும் போது நீங்கள் உங்களையும் அறியாமல் ஒரு கையால் கன்னத்தில் தாங்கி கொள்வீர்கள்.
இது எதனால் என்றால் துன்பத்தில் இருக்கும் தன்னை, தன் பிரச்சினைகளை யாராவது தாங்கிக் கொள்ள மாட்டார்களா? என்ற ஏக்கத்தின் வெளிபாடுதான் அது.
அத்தகைய சமயங்களில் “கன்னத்தில் கை வைக்காதே… கப்பலா மூழ்கி விட்டது?” என்று பெரியவர்கள் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
அது ஏன் தெரியுமா?நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை நாமேதான் தீர்க்க வேண்டும். அதற்கு மற்றவர்களை எதிர்பார்க்கக்கூடாது. பிறர் தீர்த்து வைப்பார் என்று எண்ணினால் துன்பத்தில் நாம் மூழ்கி போவோம்.
நம்முடைய உடல் அசைவுகள் மற்றும் மனநிலைகளை மூளை உற்று கவனித்து அதற்குரிய சுரபிகளை சுரக்க செய்கிறது. கன்னத்தில் கை வைத்தபடியே கொஞ்சம் சிரிக்க முயன்று பாருங்கள்.
கண்களில் டன் டனாக சோகம் வழியுமே தவிர உள்ளத்தில் உற்சாகம் பிறக்காது. கன்னத்தை தாங்கி கொண்டிருக்கும் கையை சட்டென எடுத்து விட்டு உங்கள் உதட்டை புன்னகைப்பது போல் செய்யுங்கள்.
அவ்வளவுதான். உங்கள் சோகம் காணாமல் போய் விடும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மூளைக்கு செய்தி போகும்.
மூளை அதை அதிகப்படுத்துவதற்காக எண்டோர்ஃபின்ஸ் ஹார்மோனை சுரக்க செய்யும். உடனே உண்மையான உற்சாகமும் மகிழ்ச்சியும் உங்களுக்குள் தொற்றிக்கொள்ளும்.
சிரிப்பது போன்ற தோற்றமே இப்படி சந்தோஷத்தை தருமென்றால் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தால் எப்படி இருக்கும்? உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். வாழ்வே சந்தோஷமயமாக மாறிவிடும்.