பெரும்பாலான மக்கள் விரும்பும் ஒரு உணவுப்பொருள் உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை எந்த விதத்தில் சமைத்தாலும், வேக வைத்து மசித்தாலும், வறுத்தாலும், பொரித்தாலும் சுவை மிகுந்த ஒரு உணவாக மாறும் தன்மை உருளைக்கிழங்கிற்கு உண்டு. உருளைக்கிழங்கில் மினரல், வைட்டமின், அன்டி ஆக்சிடென்ட் ஆகியவை உள்ளன.
உருளைக்கிழங்கு உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது, அதே சமயம், உங்கள் சருமத்தின் பொலிவை தக்க வைக்கவும் உருளைக் கிழங்கு உதவுகிறது. உருளைக் கிழங்கு பயன்படுத்தி தயாரிக்கும் பேஸ் பேக் பருக்களால் உண்டான தழும்புகள், புள்ளிகள் ஆகியவற்றை மறைக்க உதவுகிறது.
உருளைக்கிழங்கு பேஸ் பேக்
உருளைக்கிழங்கில் உள்ள அன்டி ஆக்சிடென்ட், சருமத்தில் தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்து போராட உதவுகிறது. இதனால் கிருமிகளும், பக்டீரியாக்களும் அழிக்கப்படுகின்றன. உருளைக்கிழங்கில் உள்ள அமிலத்தன்மை, சருமத்தில் அடைக்கப்பட்ட துளைகளை திறக்க வைக்க உதவுகிறது.
தக்காளியுடன்
தக்காளி சாறின் அமிலத்தன்மையுடன் ஒருங்கிணைந்த உருளைக்கிழங்கு, சருமத்தில் உண்டாகும் பருக்களில் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது. இந்த ஒருங்கிணைந்த கலவையுடன் தேன் சேர்த்துக் கொள்வதால் சருமம் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.
தேவையான பொருட்கள்
. ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு விழுது அல்லது சாறு
. ஒரு ஸ்பூன் தேன்
. ஒரு ஸ்பூன் தக்காளி விழுது அல்லது சாறு
செய்முறை
. உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி விழுது அல்லது சாற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
. இந்த கலவையுடன் தேன் சேர்த்து ஒரு பேஸ்ட் தயாரித்துக் கொள்ளவும்.
. இந்த கலவையை உங்கள் முகத்தில் சமமாக எல்லா இடங்களிலும் தடவவும்.
. பிறகு 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
. பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
. பருக்கள் மறையும்வரை ஒரு நாளுக்கு ஒரு முறை இந்த பேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.
தழும்புகளைப் போக்க
முல்தானி மிட்டியுடன் இணைந்து உருளைக்கிழங்கு தனது தோல் மிளிர வைக்கும் பண்பினால், தழும்பு, சரும நிறமாற்றம் போன்றவற்றைப் போக்க உதவுகிறது. முல்தானி மிட்டி மற்றும் உருளைக்கிழங்கு கலவை, படிப்படியாக பருக்களால் உண்டான புள்ளிகள், தழும்புகள், மற்றும் கட்டிகளைப் போக்க உதவுகின்றன. இருப்பினும், இவற்றை அதிக அளவில் பயன்படுத்துவது தவிர்க்கப் பட வேண்டும். இல்லையேல் சருமம் வறண்டு போக நேரலாம்.
தேவையான பொருட்கள்
. ஒரு உருளைக்கிழங்கு
. ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி
செய்முறை
. பச்சை உருளைக்கிழங்கை எடுத்து துருவி சாறு எடுத்துக் கொள்ளவும்.
. இந்த சாற்றில், ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி சேர்க்கவும் .
. இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.
. இந்த பேஸ்டை முகத்தில் தடவவும்.
. 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
. பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
. ஒரு வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் இதனை பயன்படுத்த வேண்டாம்.
கட்டிகளைப் போக்க
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி சத்து ஆகியவை உள்ளன. இவை, சருமத்தை தளர்த்தி, கிருமிகளை அகற்றுவதில் தனித்தன்மை பெற்றவையாக விளங்குகின்றன. உருளைக்கிழங்குடன் இதனை சேர்த்து பயன்படுத்துவதால், முகத்தில் தோன்றும் மென்மையான கோடுகள் குறைந்து, தழும்புகள் நீங்கி, பருக்களின் அடையாளம் மறைந்து பொலிவான சருமம் கிடைக்கிறது. மேலும் கொலாஜன் வளர்ச்சி அதிகரிக்கிறது. இதனால் உங்கள் சருமம் இளமையாக காட்சி தருகிறது.
தேவையான பொருட்கள்
. ஒரு நறுக்கிய உருளைக்கிழங்கு
. அரை ஸ்பூன் தேன்
. 2 ஸ்ட்ராபெர்ரி
செய்முறை
. நறுக்கிய உருளைக்கிழங்கு, ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
. இந்த விழுதை முகம், கழுத்து ஆகிய இடங்களில் தடவவும்.
. 20 நிமிடங்கள் முகத்தைக் காய விடவும்.
. பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
. ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்துவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.
சூரிய ஒளியால் உண்டாகும் சரும சேதம், கட்டிகளைப் போக்க
மஞ்சளில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பண்பின் காரணமாக, இது அழகுக் குறிப்புகளில் ஒரு சிறப்பான இடத்தை வகிக்கிறது. இந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த மஞ்சளுடன், உருளைக் கிழங்கை சேர்த்து பயன்படுத்துவதால், சூரிய ஒளியால் உண்டாகும் சரும சேதம், குறைக்கப்பட்டு, துளைகள் திறந்து, பக்டீரியா மற்றும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. இதனால் கட்டிகள், தழும்புகள் ஆகியவை மறைந்து, சருமம் பிரகாசமாக விளங்குகிறது.
தேவையான பொருட்கள்
. பாதி உருளைக்கிழங்கு துருவியது
. அரை ஸ்பூன் மஞ்சள்
செய்முறை
. துருவிய உருளைக்கிழங்குடன் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலக்கவும்.
. இந்த கலவையை முகம், கழுத்து ஆகிய இடங்களில் தடவவும்.
. 15 நிமிடங்கள் இந்த கலவை உங்கள் முகத்தில் இருக்கட்டும்.
. பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
. சிறந்த தீர்வுகளுக்கு ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இந்த கலவையைப் பயன்படுத்தவும்.
கட்டிகள், தழும்புகள் குறைக்க
சூரிய ஒளியால் உண்டாகும் சரும சேதங்களை அகற்றி, சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யவும், சருமத்திற்கு இதமளிக்கவும், வெள்ளரிக்காய் அற்புதமாக உதவுகிறது. வெள்ளரிக்காயுடன் உருளைக் கிழங்கு, எலுமிச்சை சாறு ஆகியவை சேர்ந்து சருமத்தில் உள்ள துளைகளைத் திறக்கின்றன.
அதிக எண்ணெய்யை அகற்றுகின்றன, சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவுகின்றன. இதனால் கட்டிகள், தழும்புகள், பருக்களால் உண்டான புள்ளிகள் ஆகியவை குறைகின்றன. மஞ்சளின் பக்டீரியா எதிர்ப்பு தன்மைக் காரணமாக சருமத்தை பளபளப்பாக வைக்க மஞ்சள் உதவுகிறது மேலும், தொற்று பாதிப்பை உண்டாக்கும் பாக்டீரியாக்களை சரும மேற்பரப்பில் இருந்து அழிக்கவும் மஞ்சள் உதவுகிறது.
தேவையான பொருட்கள்
. 2 ஸ்பூன் உருளைக் கிழங்கு சாறு
. 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
. 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு
. ஒரு சிட்டிகை மஞ்சள்
செய்முறை
. மஞ்சளுடன் எல்லா சாறுகளையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
. இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும்.
. இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் முழுவதுமாக காயும் வரை காத்திருக்கவும்.
. காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
. ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றுவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.
. எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். நேரடியாக எலுமிச்சை சாற்றை முகத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தில் எரிச்சல் உண்டாகலாம்.
சரும புத்துணர்ச்சிக்கு
உருளைக்கிழங்கில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் மற்றும் பீட்டா கரோடின் காரணமாக, சரும ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உருளைக்கிழங்கு விழுதுடன், பாதாம் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கும் இந்த கலவை, சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.
சருமத்தில் உண்டான தடிப்புகளைப் போக்க உதவுகிறது, அழுக்கை அகற்றுகிறது, சருமத்தில் தோன்றிய மெல்லிய கோடுகளைப் போக்க உதவுகிறது. இதனால் பருக்கள், கட்டிகள் மற்றும், திட்டுகள் இல்லாத களங்கமற்ற சருமம் கிடைக்கப்பெறுகிறது.
தேவையான பொருட்கள்
. ஒரு சிறிய உருளைக் கிழங்கு
. ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய்
. ஒரு ஸ்பூன் தேன்
செய்முறை
. துருவிய உருளைக் கிழங்குடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து கலக்கவும்.
. இந்த கலவையை முகத்தில் சீராகத் தடவவும்.
. அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
. களங்கமற்ற சருமம் பெறுவதற்கு, இந்த செய்முறையை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றலாம்.
source: boldsky.com