உதடுகளில் அலர்ஜி, வறட்சி ஏற்படாமல் இருக்க வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத இயற்கையான பொருட்களைக் கொண்டு, லிப் பாம்களைத் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
வீட்டிலேயே லிப் பாம் தயாரிப்பது எப்படி?
உதடு மிகவும் சென்சிடிவ்வான பகுதி என்பதால் கெமிக்கல் அதிகம் இல்லாத லிப் பாமைப் பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் உதடுகளில் அலர்ஜி போன்றவை உண்டாகும். உதடு மிக அதிகமான வறட்சியடையும். தோலில் அரிப்பு உண்டாகும். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத இயற்கையான பொருட்களைக் கொண்டு, லிப் பாம்களைத் தயாரித்துக் கொள்ள முடியும்.
லெமன் லிப் பாம்
சருமப் பராமரிப்புக்கு மிகவும் ஏற்றது லெமன். சருமத்தின் நிறத்தைக் கூட்டவும் அலர்ஜியைப் போக்கவும் எலுமிச்சை பயன்படுகிறது. எலுமிச்சை ஜூஸை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து, தயாரிக்கப்படும் லிப் பாம் உதட்டின் நிறத்தை மேம்படுத்தவதோடு, மென்மையாகவும் இருக்கும்.
முதலில் ஒரு ஸ்பூன் தேன் மெழுகை எடுத்துக் கொண்டு சூடு செய்ய வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற்றும் 10 துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சில துளிகள் லெமன் ஆயிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை மிதமான வெப்பநிலையில் சூடுபடுத்தி ஆறியபின், ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, தேவையான போது இதைப் பயன்படுத்திக் கொள்ளாலாம். இந்த லெமன் லிப் பாம் மிக விரைவிலேயே நல்ல பலனைத் தரும்.
பெட்ரோலியம் ஜெல்லி லிப் பாம்
பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளுக்குப் பயன்படுத்துவது சிறந்தது. அதனால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. பெட்ரொலியம் ஜெல்லியையும் இயற்கையான பொருட்களில் இருந்து எடுக்கப்படும் நிறங்களையும் சேர்த்து, லிப் பாம் செய்ய முடியும்.
6 ஸ்பூன் அளவுக்கு பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து மைக்கோவேவ் ஒவனில் பயன்படுத்தும் பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு உங்களுக்குப் பிடித்த ஜூஸை ஊற்றிக் கொள்ள வேண்டும். சில ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆரஞ்சுப் பழங்களை நன்கு மசித்து அவற்றோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு நிமிடத்துக்கு மிதமான வெப்பநிலையில் வைத்து சூடேற்றவும். அதன்பின் ஆறவைத்து, பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் உதடு வறட்சியாக இருக்கிறதோ அப்போது இந்த பாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.