தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீப்பு . இந்த சீப்பு தினமும் பயன்படுவதால் தலை முடியில் உள்ள அழுக்கு , பிசுபிசுப்பு போன்றவை சீப்புகளில் ஒட்டி இருக்கும்.. இதனைக் கண்டாலே தலை சீவும் எண்ணம் நமக்கு வரவே வராது. ஆனால் அழுக்கில்லாத சீப்பு மற்றும் ஹேர் பிரஷ் பயன்படுத்த மிகவும் சுகமான உணர்வைத் தரும்.
தினமும் நமது தலை முடியை அழகாக்கும் சீப்பு மற்றும் ஹேர் பிரஷில் உள்ள அழுக்கைப் போக்குவது எப்படி? இதோ நாங்கள் இருக்கிறோம்.. சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷில் உள்ள அழுக்குகளைப் போக்க சில எளிய வழிகளை இந்த பதிவில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். படித்து பயன் பெறுங்கள்.
சுத்தம் செய்யும் முறையை தெரிந்து கொள்வதற்கு முன்னர், கூந்தல் பராமரிப்பிற்கு பொதுவாக நாம் பயன்படுத்தும் வெவ்வேறு வகையான பொருட்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
பிளாஸ்டிக் சீப்பு
பல காலமாக நாம் பிளாஸ்டிக் சீப்பை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்றைய நாட்களில் பலர் பிளாஸ்டிக் சீப்பு பயன்படுத்துவதை விரும்புவதில்லை. காரணம் , இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் தலைமுடியில் சிக்கு மற்றும் வறட்சி ஏற்படுவதாக நம்புகின்றனர். அதனால் பெரும்பாலான மக்கள் நைலான் பிரஷ் பெரிய தூரிகைகள் கொண்ட மிருதுவான ஹேர் பிரஷ் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.
மர பிரஷ் அல்லது சீப்பு
மென்மையான மற்றும் நீடித்து நிற்கும் தன்மைக் கொண்ட மர பிரஷ் மற்றும் சீப்பு , இயற்கையான முறையில் உங்கள் தலை முடியை பராமரிக்க உதவுகிறது. உங்கள் தலை முடியில் உள்ள எண்ணெய் தன்மையை தலை முழுவதும் பரப்பி வேர்க்கால்கள் வரை ஊடுருவ உதவுகிறது.
உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. பிளாஸ்டிக் சீப்பை ஒப்பிடும்போது இந்த மர சீப்பு தலையை அதிகமாக அழுத்துவதில்லை.
வட்டமான ஹேர் பிரஷ்
சிலிண்டர் வடிவத்தில் இருக்கும் ஒரு வகையான ஹேர் பிரஷ் முழுவதும் தூரிகைகள் கொண்டதாக உள்ளன. தலை முடியை விரித்து விடவும், கர்ல்ஸ் , வேவ்ஸ் போன்ற அலங்காரம் செய்யவும் உகந்ததாக உள்ளது.
இந்த வகை ஹேர் பிரஷ் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த வகை பிரஷ், தலை முடி அலங்காரத்திற்கு சிறந்த வகையில் பயன்படும்.
பேடில் ஹேர் பிரஷ்
இது பொதுவாக தட்டையாக, பெரிய மற்றும் அகலமான அடியைக் கொண்டிருக்கும் ஒரு வகை ஹேர் பிரஷ் ஆகும். இந்த வகை பிரஷ் பொதுவாக முடியின் சிக்குகளை நீக்கவும், சுருண்டிருக்கும் முடியை நேராக்கவும், முடி உடைவதைக் குறைக்கவும் பயன்படுகிறது.
இந்த வகை சீப்பு மரம், பிளாஸ்டிக், செராமிக் போன்றவற்றில் செய்யப்படுகின்றன. பொதுவாக நீளமான, அடர்த்தியான நேராக இருக்கும் கூந்தலுக்கு இதனை பயன்படுத்தலாம். மேலே கூறிய ஹேர் பிரஷ் மற்றும் சீப்பு வகைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
நமது தலைமுடியை பராமரிக்கும் இந்த சீப்பு மற்றும் பிரஷ் போன்றவற்றை நாம் எப்படி பராமரிக்க வேண்டும்? எத்தனை முறை இதனை நாம் சுத்தம் செய்ய வேண்டும்? இதனைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
அடிப்படை சுத்தம் செய்யும் முறை
தேவையான பொருட்கள்
டூத்பிக் / வால் வடிவ முனை சீப்பு / பின்
டூத் பிரஷ்
பெரிய கிண்ணம்
மிதமான ஷாம்பூ அல்லது டிடர்ஜன்ட்
காய்ந்த டவல்
ட்ரையர் (தேவைப்பட்டால்)
கத்திரிகோல் (தேவைப்பட்டால்)
செய்முறை
சீப்பில் உள்ள முடிகளை உங்கள் கைவிரல்களால் எடுத்து விடவும்: சீப்பு அல்லது பிரஷ்ஷில் உள்ள முடிகளை உங்கள் கை விரல்களால் எடுத்து விடவும். டூத் பிக், வால் வடிவ சீப்பின் முனை, அல்லது பின் கொண்டு கைகளால் எடுக்க முடியாத முடிகளை எடுத்து விடவும். கத்திரி பயன்படுத்தியும் இந்த முடிகளை நீக்கலாம்.
சுத்தம் செய்யும் திரவம் செய்முறை
ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அந்த கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பிக் கொள்ளவும். அந்த நீரில், ஷாம்பூ அல்லது டிடர்ஜென்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொது சுத்தம் செய்யும் திரவம் தயார்.
ஹேர் பிரஷ்ஷை சுத்தம் செய்வது எப்படி?
சீப்புகளை சுத்தம் செய்ய தயாராக வைத்திருக்கும் தண்ணீரில் சீப்பு மற்றும் பிரஷ்ஷை 15-20 நிமிடங்கள் ஊற விடவும். ஹேர் பிரஷ்ஷின் தூரிகை மற்றும் சீப்புகளின் பற்களில் டூத் பிரஷ் மூலம் அழுக்கை அகற்றுங்கள்.
ஒரு ஈர துணி மூலமாகவும் அழுக்கைப் போக்கலாம். அழுக்கை அகற்றியவுடன் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷை முழுவதும் காய வைத்து பின்பு பயன்படுத்தவும்.
சீப்பை அலசுவது, காய வைப்பது
அழுக்கை முழுவதும் அகற்றியவுடன், ஹேர் பிரஷ் அல்லது சீப்பை குழாய் நீரில் காண்பித்து நன்றாக அலசவும். பின்பு ஒரு இரவு முற்றிலும் காய விடவும். உடனடியாக சீப்பை பயன்படுத்த விரும்புபவர்கள், ஒரு காய்ந்த டவலால் நன்றாக துடைத்து பின்பு பயன்படுத்தலாம் அல்லது ட்ரையர் பயன்படுத்தி சீப்பை காய வைக்கலாம்.
இதனால் அதில் உள்ள ஈரம் முற்றிலும் காணமல் போய்விடும். இந்த முதல் நிலை சுத்திகரிப்பை வாரம் ஒரு முறை செய்வது உங்கள் கூந்தல் பராமரிப்பு பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும். இது மிகவும் அவசியமும் கூட.
பல நாட்கள் இந்த முறையில் சுத்தம் செய்யாமல் விடும்போது, இன்னும் ஆழ்ந்த சுத்தம் தேவைப்படும். அதனை எப்படி செய்வது? இப்போது பார்க்கலாமா?
சீப்பு சுத்தம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
ரப்பிங் ஆல்கஹால் / ஆப்பிள் சிடர் வினிகர் / வெள்ளை வினிகர்
டூத் பிக் / வால் முனை சீப்பு / பின்
பெரிய கிண்ணம்
காய்ந்த டவல்
ட்ரையர் (தேவைப்பட்டால்)
கத்திரிகோல் (தேவைப்பட்டால்)
செய்முறை
சீப்பில் உள்ள முடிகளை உங்கள் கைவிரல்களால் எடுத்து விடவும்: சீப்பு அல்லது பிரஷ்ஷில் உள்ள முடிகளை உங்கள் கைகளால் எடுத்து விடவும். டூத் பிக், வால் வடிவ சீப்பின் முனை, அல்லது பின் கொண்டு கைகளால் எடுக்க முடியாத முடிகளை எடுத்து விடவும். கத்திரி பயன்படுத்தியும் இந்த முடிகளை நீக்கலாம்.
ஆப்பிள் சிடர் வினிகர்
ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் ரப்பிங் அல்கஹால் அல்லது ஆப்பிள் சிடர் வினிகர் சேர்க்கவும். பிளாஸ்டிக் சீப்புகளை நேரடியாக அல்கஹால் அல்லது ஆப்பிள் சிடர் வினிகரில் ஊற வைக்கலாம். 10-15 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும்.
ஹேர் பிரஷ் சுத்தம் செய்ய அந்த பாத்திரத்தில் வெள்ளை வினிகரையும் தண்ணீரையும் சம பங்கு எடுத்து அந்த நேரில் பிரஷ்ஷை 15-20 நிமிடம் ஊற வைக்கவும்.
ஹேர் பிரஷ் சுத்தம் செய்வது
எப்படி அழுக்கை முழுமையாக நீக்கியவுடன் அந்த சீப்பு அல்லது பிரஷ்ஷை குழாய் நீரில் கழுவவும். காய்ந்த டவல் அல்லது ட்ரையர் மூலம் சீப்பை காய வைக்கவும். சீப்பு மற்றும் பிரஷ்ஷை சுத்தம் செய்யும் போது அவற்றின் கைப்பிடியை சுத்தம் செய்ய மறக்க வேண்டாம்.
பேடில் பிரஷ் அல்லது மர பிரஷ்ஷை சுத்தம் செய்யும்போது பிளாஸ்டிக் சீப்பை போல் சுத்தம் செய்யக்கூடாது. அவற்றை சுத்தம் செய்வதில் தனிக்கவனம் செலுத்துவது அவசியம்.
கவனிக்க வேண்டியது
மர பிரஷ் அல்லது பேடில் பிரஷ் சுத்தம் செய்யும்போது, நீரில் பிரஷ்ஷை முழுவதும் ஊற வைக்கக் கூடாது. தூரிகைகள் மட்டும் நீரில் படும்படி சில நிமிடங்கள் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு ஊற வைக்கவும். மென்மையாக சுத்தம் செய்வதன் மூலம் சேதம் மற்றும் உடைவது தடுக்கப்படும்.
அடிப்படை சுத்தம் மற்றும் ஆழ்ந்த சுத்தம் ஆகியவற்றைப் பற்றி மேலே விவரமாக பார்த்தோம். ஹேர் பிரஷ்ஷை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய இன்னும் சில வழிகள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.
பேக்கிங் சோடா / வினிகர்
வினிகர் அல்லது பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு நான்கு பங்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்து அந்த நீரில் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ் ஆகியவற்றை ஊற வைக்கவும்.
இதனால் உடனடியாக சீப்பில் உள்ள அழுக்கு முற்றிலும் நீங்கி விடும். மர சீப்புகளில் இந்த வகையாக சுத்தம் செய்வது கடினமாக இருக்கும்.
அமோனியா
நீடித்து நிற்கும் ஹேர் பிரஷ்களை சுத்தம் செய்ய இந்த முயற்சியை செய்யலாம். 1:4 என்ற விகிதத்தில் அமோனியா மற்றும் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
மென்மையான ஹேர் பிரஷ்ஷை சுத்தம் செய்ய அமோனியாவை பயன்படுத்த வேண்டாம். மேலும் இந்த ரசாயனத்தில் உங்கள் சருமம் அதிக நேரம் வெளிப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கொதிக்கும் நீர்
ஒரு பாத்திரத்தில் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷை போடவும். அந்த பாத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றி விடவும். சீப்பு முழுவதும் மூழ்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
சற்று நேரம் அதனை அப்படியே விடவும். இப்படி செய்வதால் அழுக்கு முழுவதும் வெளியேறும். சீப்பு உருகும் அளவிற்கு நீர் கொதிக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
ஹைட்ரஜன் பெராக்சைடு
ஒரு பங்கு ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் நான்கு பங்கு நீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த நீரைக் கொண்டு உங்கள் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷை சுத்தம் செய்யவும். இந்த நீர் அழுக்கை மட்டும் போக்குவதில்லை, கூடுதலாக, சீப்பில் உள்ள கிருமிகளையும் போக்க உதவுகிறது.
பல காலமாக சுத்தம் செய்யப் படாத சீப்புகளையும் ஹேர் ப்ரஷ்களையும் தேடி எடுத்து உடனடியாக சுத்தம் செய்யுங்கள்.