‘‘மூலிகைகள் என்றவுடன், அது காட்டில் வளரும் செடிகள் என்று நினைக்க வேண்டாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழைகூட மூலிகைதான்.
மூலிகைச் செடிகளின் சிறப்பு, அதற்கு குறைந்த அளவு தண்ணீரே போதுமானது, எந்த மண்ணிலும் வளரும். வீட்டிலேயே அவசியமான மூலிகைச் செடிகளை வளர்த்து வருவது, சாதாரண காய்ச்சல், சளி, இருமலில் தொடங்கி மூட்டு வலி, மூலம் போன்ற பிரச்னைகள் வரை மருத்துவமனையைத் தேடி ஓடுவதைத் தவிர்க்கச் செய்யும்.
பணத்தை விரயம் செய்யாத, பக்கவிளைவுகள் அற்ற மூலிகை மருத்துவத்துக்குப் பழகிக்கொள்ளலாம்!’’ என்ற சென்னையைச் சேர்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர் ஆறுமுகம், வீட்டில் வளர்க்கக் கூடிய மூலிகைச் செடிகளைப் பற்றி அடுக்கினார்.
கற்றாழை
உணவு, மருந்து, அழகு சாதனப் பொருள்… மூன்றாகவும் பயன்படும் மூலிகை கற்றாழை. நல்ல சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.
வாரத்தில் இரண்டு நாட்கள் நீர் ஊற்றினால் போதும். இதில் மனித உடலுக்குத் தேவையான 18 வகை அமினோ அமிலங்கள் உள்ளன.
கற்றாழை ஜூஸை தயார் செய்த மூன்று மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். இரவு நேரத்தில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சைனஸ் பிரச்னை நீங்கும்; ரத்த அழுத்தம், வயிற்றுக்கோளாறுகளுக்கு சிறந்த மருந்து.
ஆடாதொடா
ஆடாதொடா என்றும் ஆடு தொடா என்றும் அழைக்கப்படும் செடியின் நுனியில் இருந்து மூன்றாவது கணுவை எடுத்து தொட்டியில் நட்டுவைத்தால், வளரும்.
சளி, இருமல் அதிகம் உள்ளவர்கள் சிறிதளவு இந்த இலைகளை எடுத்து அரை டீஸ்பூன் சீரகம், 8 முதல் 10 மிளகு சேர்த்து 4 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி மூன்று நாள், இரண்டு வேளை சாப்பிட்டு வர… நல்ல பலன் கிடைக்கும்.
தவசி முருங்கை
மல்டி விட்டமின் செடி என்று சொல்லும் அளவுக்கு, சத்து நிறைந்தது தவசி முருங்கை. 16 அடி வரை வளரும் தன்மைகொண்ட இதை, மொட்டைமாடியில் தொட்டியில் 5 அடி வரை வளர்க்கலாம்.
நீளமாக வளர விடாமல் 2 அல்லது 3 அடியில் வெட்டிவிடலாம். வெட்டியது பக்கத்தில் கிளை விடும். விட்டமின் குறைபாடு உள்ளவர்கள், இந்த இலையை பருப்பு போட்டு சமைத்து சாப்பிட்டு வர, பலன் கிடைக்கும்.
சிறியாநங்கை
சிறியாநங்கை அதிகபட்சமாக இரண்டு அடி உயரம்தான் வளரும். சூரிய ஒளி மற்றும் நிழல் என இரண்டும் கிடைக்கும் இடத்தில் இதை வளர்க்கலாம்.
ஜுரம் வந்தால், இதை வேரோடு கழுவி, 4 கப் தண்ணீரில் 2 – 3 மிளகு சேர்த்து கொதிக்கவிட்டு, ஒரு கப்பாக வற்றும்படி காய்ச்சிக் குடிக்கலாம். பூச்சிக் கடி, வண்டுக் கடி, கம்பளிப்பூச்சிக் கடி போன்றவற்றை இந்தக் கஷாயம் குணமாக்கும்.
சீந்தில் கொடி
இந்தச் செடியைப் பிடுங்கிப் போட்டால்கூட அந்த இடத்தில் வேர்விட்டு வளரும் என்பதால், ‘சாகா மூலிகை’ என்ற சிறப்புப் பெயர் பெற்றது.
இது சீராக வளராது என்பதால், ஒரு தனி இடத்தில் வைத்து வளர்க்கலாம். தொட்டியில் வளர்க்கும்போது சின்னச் சின்ன மூங்கில் குச்சிகளை குறுக்கும் நெடுக்குமாக ஊன்றி, அதன் மேல் இந்தச் செடியைப் பரவவிடலாம்.
இதன் இலையும், தண்டும்தான் மருந்து. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், இதன் இலையை நிழலில் காய வைத்து பொடியாக்கி, தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பொடியைக் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
சிற்றரத்தை
பார்க்க அழகாக இருக்கும் இந்தச் செடியை, வெயிலும் நிழலும் படும் இடத்தில் வைத்து வளர்க்கலாம்.
வறட்டு இருமலால் அவதிப்படுவோர், இதன் வேரில் இருக்கும் கிழங்கை எடுத்து வெட்டிக் காயவைத்து, நசுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, 2 டம்ளராக வற்றியதும் குடிக்கலாம்.
தூதுவேளை
சிறிதளவு இடம் இருந்தால்கூட தூதுவேளை வளர்க்கலாம். தொட்டியைவிட நிலத்தில் வளர்ச்சி நன்றாக இருக்கும். இலை மட்டுமல்ல, பழம், பூ என மிகவும் பயனுள்ள மூலிகை இது.
பூக்களை நெய் சேர்த்து ரோஸ்ட் செய்து சாப்பிட்டால் ஞாபகத் திறன் வளரும். கசப்பான இதன் பழத்தை அரை கிலோ எடுத்து காம்பை நீக்கி, தேனில் ஊறவைக்கவும். ஒரு மாதம் கழித்து, பெரியவர்கள் ஒரு பழமும், குழந்தைகள் அரை பழமும் சாப்பிடலாம்.
சூடு செய்தும் சாப்பிடலாம். இதை பெரியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா கட்டுப்படும். சளி, தொண்டைப் பிரச்னைகளுக்கு இதன் இலையைத் துவையல் செய்து சாப்பிடலாம்.
துளசி
அதிகளவு ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் துளசியை வழிபடுவதைவிட, பயன்படுத்து வது முக்கியம். விதைகள் தூவினாலே வளரும் செடி இது.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். தலைவலி, ஜுரம், சளிக்கு இதை கஷாயம் வைத்து, தேன் கலந்து குடிக்கலாம்.
கற்பூரவல்லி
தண்டை வெட்டி வைத்தால் நிச்சயம் தழைக்கும் செடி, கற்பூரவல்லி. எனவே, குழந்தைகள் செடி வளர்க்க ஆசைப்படும்போது, முதலில் இந்தச் செடியை நடவைத்தால், ஏமாற்றாமல் வளரும் இது, அவர்களை அடுத்தடுத்த செடிகள் வளர்க்க ஊக்குவிப்பதாக இருக்கும்.
வாரத்தில் ஓரிரு நாள் தண்ணீர் ஊற்றினால் போதும். எல்லா இடத்திலும் வளரும் இந்தச் செடியின் இலைகளை அப்படியே சாப்பிடலாம். மறுக்கும் குழந்தைகளுக்கு, பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜி செய்து கொடுக்கலாம்.
குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாருக்கு சளித்தொல்லை இருந்தாலும் கற்பூரவல்லியை வெறுமனேயோ, துளசி, தூதுவளை போன்றவற்றுடன் சேர்ந்து சாறு எடுத்தோ தேன் கலந்து கொடுத்தால் பிரச்னை சரியாகும்.
செம்பருத்தி
தொட்டியிலோ, தரையிலோ வைத்து இயற்கை உரம் பயன்படுத்தினால் செழித்து வளரும் செம்பருத்தி.
இதன் பூக்களை 200 முதல் 250 கிராம் எடுத்து மகரந்தப் பகுதியை நீக்கிவிட்டு 6 அல்லது 8 எலுமிச்சையின் சாறு சேர்த்துக் கிளறவும்.
பின் அடுப்பில் வைத்து அரை கிலோ சர்க்கரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கிண்டவும். ஜாம் போல் வரும். இதை ஒரு மாதம் வைத்துச் சாப்பிடலாம்.
இதயத்துக்கு நல்லது; இரும்புச்சத்தை தரக்கூடியது. செம்பருத்தி இலைகளை அரைத்து, கேசத்துக்கு கண்டிஷனராகப் பயன்படுத்தலாம்.
என்ன… மூலிகைச் செடி வளர்க்க நீங்களும் தயார்தானே?!