தரமான வைரம் என்பது பலவிதமான சோதனைகளுக்குப்பின் ஆய்வு செய்து அதற்கு என சர்வதேச தர குறியீடு தரப்படுகிறது. நாம் விரும்பி அணிகின்ற பலவிதமான ஆபரணங்கள் என்பதில் வைரம் பதித்தும், தனிப்பட்ட வைர நகைகள் என்றவாறும் விலை மதிப்புமிக்க வைர நகைகள் தயார் செய்யப்படுகிறது. இதில் பதியப்படும் வைரங்கள் என்பது ஒவ்வொரு விதமான உருவ அமைப்பிலும், அதன் மதிப்பை காட்டும் காரட் அளவீடுகளை கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. முந்தைய நாளில் வைரங்கள் என்பதில் போலியும், தோஷமும், அதிகமாக காணப்பட்டன. இன்றைய நாளில் தர சான்றுதலுடன் கூடிய தோஷம் நீக்கப்பட்ட வைரங்கள் கிடைக்கின்றன.
வைர நகைகள் என்பது தங்கம், பிளாட்டினம் போன்றவற்றில் பதியப்பட்டு கிடைக்கின்றன. அதுபோல் 18 காரட் வெள்ளை தங்கம், ரோஸ் கோல்டு, 18 காரட் தங்கம் போன்ற உலோகங்களும் வைர நகைகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. வைரம் எப்படியாயினும் வடிவமைத்தாலும் அதன் அழகே அதன் சிறப்பை உயர்த்தி பிடிக்கின்றது.
வைரத்தின் உருவ அமைப்புகள்:
ஆர்வத்தை தூண்டும் வைர நெக்லஸ்கள்
பெண்கள் வைரத்தில் செய்த நெக்லஸ்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதற்கேற்ப நகை வடிவமைப்பாளர்கள் தனிக் கவனத்துடன் மேம்பட்ட வடிவமைப்பு உத்தியை பயன்படுத்தி விதவிதமான வைர நெக்லஸ்களை தயார் செய்து தருகின்றனர். தங்க செயின் அமைப்பின் நடுநடுவே வைர பூக்கள், வைர தொங்கல்கள் கொண்டவாறும், முற்றிலும் அதிகபட்ச வைரங்கள் பதியப்பட்டு அடுக்கடுக்கான வளைவுகளுடன் கூடிய நெக்லஸ்கள் வரை ஆர்வத்தை தூண்டும் விதத்தில் கிடைக்கின்றன.
தங்க செயின் பின்னணியில் இடைவெளி விட்டு நட்சத்திர பூக்கள் உள்ளன. ஒவ்வொரு பூவிலும் ஏழு வைர கற்கள் என்றவாறு மொத்தம் ஐந்து பூக்களிலும் 35 வைரக்கற்கள் பதியப்பட்ட நெக்லஸ் அழகின் உச்சம். ஏனெனில் தங்க செயின் வளைவின் மேற்புற அமைப்பில் ஜொலிக்கும் நட்சத்திர பூக்கள் கண்கவர் தோற்ற பொலிவை தருகின்றது.
சூரிய கதிர்கள் போன்று விரியும் நெக்லஸ்
காலை எழுந்தவுடன் சூரியனை பார்க்கும்போது அதன் கதிர்கள் மேலெழுந்து வரும் அழகு தனிச்சிறப்பு. அந்த அரை வட்ட சூரிய ஒளிக்கதிர்கள் போன்ற அமைப்புடன் நெக்லஸ் உருவாக்கம் உள்ளது. மெல்லிய இருபக்க செயின் அமைப்பு அரை வட்ட வடிவில் மேலிருந்து கீழிறங்க நீளமான ஒளிக்கதிர்கள் போல் வைரம் பதியப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளன. வட்டமான சிறு வைரகற்கள், மேற்பகுதியிலும், கீழ் தொங்கும் அமைப்பில் பியர் வைரக்கற்கள் பதியப்பட்டும் கலை நயத்துடன் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒளிக்கதிர்கள் பிரகாசத்தை வைரக்கற்கள் தத்ரூபமாக வழங்குவதால் கழுத்து பகுதி அதிகபட்ச ஒளிப்பிரகாசத்துடன் ஜொலிக்கிறது.
பெரிய பூக்களாய் தொங்கும் வைர காதணிகள்
சிறுசிறு வைரக்கற்கள் பதியப்பட்ட சிறுகாதணிகள் என்பதுடன் பெரிய வைரக்கற்கள் பதித்த காதணிகளும் பிரம்மாண்ட அமைப்பில் உள்ளன. பெரிய பூ விதழ்கள் கொண்ட பூ அமைப்பு வண்ண கற்கள் இணைப்புடன் ஜொலிக்கும் பூக்களாய் காட்சித் தருகின்றது. இதன் பிற வடிவங்களாய் மெல்லிய கம்பி இணைப்பு, ஜல்லடை அமைப்பு, கணித அமைப்பு போன்றவைகளும் பெரிய காதணிகளாய் உலா வருகின்றன. நவீன கால பெண்களின் ரசனையை பூர்த்தி செய்யும் வடிவில் காட்சியளிக்கின்றன.