பலர் வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக சருமத்தின் நிறத்தை வெள்ளையாக்குவதற்கு கடைகளில் விற்கப்படும் ஃபேர்னஸ் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அப்படி தொடர்ந்து அந்த க்ரீம்களை பயன்படுத்தி வந்தால், சருமத்தின் நிறம் நிச்சயம் வெள்ளையாக மாறும் தான். இருப்பினும் அந்த ஃபேர்னஸ் க்ரீம்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால், சருமம் அதன் ஆரோக்கியத்தை இழந்து, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும்.
இதனால் ஒரு நாள் ஃபேர்னஸ் க்ரீம் பயன்படுத்தாவிட்டாலும், சருமத்தில் லேசாக அரிப்புக்கள், பருக்கள், வறட்சி போன்றவை வர ஆரம்பித்து, நாளடைவில் ஒரு கட்டத்தில் சரும புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது. எனவே ஃபேர்னஸ் க்ரீம் பயன்படுத்த நினைத்தால், அதன் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா என்பதை தெரிந்து கொண்டு பின் பயன்படுத்துங்கள். இங்கு கண்ட கண்ட ஃபேர்னஸ் க்ரீம் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!
அரிப்புக்கள்
ஃபேர்னஸ் க்ரீம் மூலம் சிலருக்கு சருமத்தில் அரிப்புக்கள் ஏற்பட ஆரம்பிக்கும். அதிலும் க்ரீம் பயன்படுத்திய சில நொடிகளிலேயே அரிப்புக்களானது ஏற்படும். எனவே எந்த ஒரு ஃபேர்னஸ் க்ரீமை பயன்படுத்தும் போது அரிப்புக்கள் ஏற்பட்டாலும், உடனே குளிர்ச்சியான நீரினால் சருமத்தை கழுவி விடுங்கள்.
அலர்ஜி
ஃபேர்னஸ் க்ரீம்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கெமிக்கல்கள் கலந்திருப்பதால், அதனை பயன்படுத்தினால் சரும எரிச்சல், சருமம் சிவப்பாக மாறுவது, அரிப்பு என்று ஏற்படக்கூடும். எனவே க்ரீம் பயன்படுத்தும் முன்னர், நன்கு பரிசோதனை செய்துவிட்டு, பின் பயன்படுத்துங்கள்.
சரும புற்றுநோய்
தொடர்ச்சியான ஃபேர்னஸ் க்ரீம் பயன்படுத்தி வந்தால், சரும புற்றுநோய் வரவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் க்ரீம்களில் பயன்படுத்தும் சில கெமிக்கல்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவாறு இருக்கும். எனவே க்ரீம்களை வாங்கும் முன், அதில் ஹைடட்ரோகுவினைன், மெர்குரி அல்லது ஸ்டெராய்டு இல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சரும வறட்சி
அழகை அதிகரிக்க சருமத்திற்கு தகுந்த ஃபேர்னஸ் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தாமல், கண்டதை பயன்படுத்தினால், சரும வறட்சி அதிகரித்துவிடும். எனவே சருமத்திற்கு தகுந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்துங்கள்.
பிம்பிள்
நீங்கள் பயன்படுத்தும் க்ரீம் மிகவும் எண்ணெய் பசையுடன் இருந்தால், அதனால் சருமத்துளைகளானது அடைப்பட்டு, பிம்பிளை ஏற்படுத்தும். இதனால் முகத்தில் பிம்பிள் மட்டுமின்றி, கரும்புள்ளிகளும் ஏற்படக்சுடும்.
சென்சிடிவ்வான சருமம்
தொடர்ச்சியாக சருமத்திற்கு க்ரீம்களை பயன்படுத்தி வந்தால், சூரிய கதிர்கள் சருமத்தில் படும் போது, சருமத்தில் எரிச்சல், விரைவில் கருமை ஏற்படும். எனவே அளவுக்கு அதிகமாக க்ரீம்களை சருமத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.
குறிப்பு
எப்போதும் கடைகளில் க்ரீம்களை வாங்கும் முன், அதனை முதலில் காதுகளுக்கு பின்னர் பயன்படுத்திவிட்டு, பின் முகத்திற்கு பயன்படுத்துங்கள். இதனால் சருமத்திற்கு அந்த க்ரீம் சரியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் முக்கியமான ஒன்று, சரும அழகை அதிகரிக்க க்ரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு சருமத்தை பராமரித்து, வருவதே சிறந்ததும், ஆரோக்கியமானதும் கூட.