இன்று பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்னை, பொடுகு மற்றும் நரைமுடி. இவற்றைக் களைய கடை கடையாய் ஏறி இறங்கி, கண்ட கண்ட எண்ணெய்கள் மற்றும் ஷாம்பூகளை வாங்கித் தேய்த்து, டாக்டர் அறிவுரை வரைக் கேட்டும் பலன் எதுவும் கிடைப்பதில்லை; ஆனால் பக்கவிளைவுகளுக்கும் பஞ்சமில்லை! பிரேசிலில் உள்ள அமேசான் காடு, அயர்லாந்து காடு, ஆப்பிரிக்க காடுகள் போன்றவற்றில் விளையக்கூடிய அரிய வகை மூலிகைகளைவிட, நம் பாட்டிகள் கற்றுக்கொடுத்த கேசத்திற்கான இயற்கை சிகிச்சைகளை செய்து பார்க்கலாமே..!
பொடுகை விரட்ட…
* நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய வசம்பை இடித்து தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு தலையில் தேய்க்கலாம்.
* பசலைக்கீரையை மையாக அரைத்து தொடர்ந்து 3 நாட்கள் தலையில் தடவி குளித்து வரலாம்.
* நல்லெண்ணெயுடன் வேப்பம்பூ, வெல்லம் சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வரலாம்.
* அரை கப் தேங்காய்ப் பாலை 4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறுடன் கலந்து வாரம் ஒருநாள் தலைக்குத் தேய்த்துக் குளித்து வரலாம்.
* வில்வக்காயைப் பொடியாக்கி சம அளவு சீகக்காய்த்தூள் சேர்த்து தினமும் தலையில் தேய்த்து குளித்து வரலாம்.
நரை முடியைத் தடுக்க…
* தாமரைப்பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கஷாயம் செய்து காலையும், மாலையும் குடித்து வந்தால் காலப்போக்கில் நரைமுடி கருமையாகும்.
* கடுக்காய், நெல்லி வற்றல் (காய்ந்த நெல்லிக்காய்), தான்றிக்காய் தலா 50 கிராம் எடுத்துப் பொடித்து, அதனுடன் வெல்லம் சேர்த்து சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாகச் செய்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் நரை முடி மறையும்.
* நெல்லி வற்றல், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் சம அளவு எடுத்து பால்விட்டு அரைத்து, வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் நரை விலகும்.
* நெல்லிச்சாறுடன் அதே அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் இளநரை மறையும்.
* மருதாணி, வெந்தயக்கீரை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி எடுத்து 1 லிட்டர் தேங்காய் எண்ணெயில் இளஞ்சூட்டில் காய்ச்சி ஆற வைத்து தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் நாளடைவில் நரைமுடி மாறும்.
குறிப்பு: சைனஸ், சளி தொந்தரவு உள்ளவர்கள் மழை , குளிர் காலத்தில் இவற்றைச் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களும் வெதுவெதுப்பான நீரில் தலைக்குக் குளிப்பது நல்லது.