23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
dark circles
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

நமது கண்களைச் சுற்றி ஏன் கருவளையம் வருகிறது? அதை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எப்படி நீக்கி தீர்வு காண்பது

நமக்குள் உள்ள பிரச்சனைகளை நமது கண்களே காட்டிக் கொடுத்துவிடும். நமது கண்களின் அழகு கெட்டாலே, நமது   மொத்த உடலின் ஆரோக்கியமும் சரியில்லை என்பதே அர்த்தம். மருத்துவர்கள் எப்படி நமது கை, நகம் இவற்றைப்   பார்த்து நோயிற்கான அறிகுறிகளை கண்டு பிடிக்கிறார்களோ, அதேபோல் நமது கண்களைப் பார்த்தும் நோயை கண்டு   பிடிக்க முடியும். இத்தனை சிறப்பு வாய்ந்த நமது கண்களை சுற்றி கருவளையம் தோன்றினால், அந்தத் தோற்றம்   நம்மை சுத்தமாகச் சோர்வுள்ளவராகக் காட்டும்.
dark circles
கண்டதும் கவரும் நமது கண்களைச் சுற்றி ஏன் கருவளையம் வருகிறது? அதை வீட்டில் உள்ள பொருட்களைக்   கொண்டு எப்படி நீக்கி தீர்வு காண்பது போன்ற வழிமுறைகளைச் சொல்கிறார் அழகுக் கலை நிபுணர்  ஹேமலதா.கண்களுக்கு கீழே தோன்றும் கருவளையமும் ஒருவிதமான தோல் பிரச்சனைதான். கருவளையம்  வருவதற்கு பல  காரணங்கள் இருப்பினும் மிகவும் முக்கியமானது நமது உடல் ஆரோக்கியம் சரியில்லை என்பதே. நம்  முகத்தில்  தோன்றும் அலர்ஜி, தழும்பு, முகப்பரு, பிக்மென்டேஷன்(நிறமி செயல்பாடு) இவற்றைப் போலவே  கருவளையத்தையும்  பார்த்தவுடன் நம்மால் கண்டு பிடிக்க முடியும்.

விட்டமின், இரும்புச் சத்து, தாதுப் பொருட்கள் போன்ற ஊட்டச் சத்துக்கள் நம் உடலுக்குத் தேவைப்படும் அளவிற்கு   இல்லாமல் குறைவாக இருந்தால் கண்ணிற்கு கீழே கருவளையம் தோன்றும். நமது உடலில் நீர்ச்சத்து குறைவாக   இருப்பதும் கருவளையம் வருவதற்கு ஒரு முக்கியக் காரணம்.தேவையான தண்ணீரை நாம் குடிக்கவில்லை என்றாலும்   கண்ணில் கருவளையம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மன அழுத்தம் காரணமாகவும் கருவளையம்   தோன்றலாம். அது சின்னக் குழந்தையாக இருந்தாலும், மனஅழுத்தம் ஏற்பட்டால் கருவளையம் தோன்றும் சாத்தியக்   கூறுகள் உண்டு.

ஒரு சிலருக்கு சரியான முறையில் தூக்கம் இல்லை என்றால் தூக்கக் குறைவினால் கண்களில் கருவளையம் வரும்.   உதாரணத்திற்கு மாணவர்கள் தேர்விற்காக சரியாகத் தூங்காமல் நீண்ட நேரம் இரவில் விழித்திருந்து படிப்பார்கள்.   அதேபோல் குழந்தை பெற்ற பெண்கள் பிறந்த குழந்தையால் சரியான முறையில் தூங்க முடியாமல் சோர்வடைவார்கள்.   இரவு முழுவதும் விழித்திருந்து இரவு நேர வேலை செய்பவர்களுக்கு  தூக்கம்  கெடுவதன் மூலமாகக் கருவளையம்   தோன்றுகிறது. கணிப்பொறி, தொலைக்காட்சி, கைபேசி போன்ற உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம்   நம் கண்கள் சோர்வடைந்து, அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் பாதிப்பால் கண்கள் பாதிக்கப்பட்டு கருவளையம்   தோன்றலாம்.

சரியான முறையில் உணவுப் பழக்கவழக்கம் இல்லாதவர்களுக்கு, உதாரணத்திற்கு காய்கறிகள், கீரை, பருப்பு போன்ற   உணவு வகைகளை உணவில் சரியாக எடுத்துக் கொள்ளாதவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கருவளைய பாதிப்புக்கு   உள்ளாகின்றனர். சிலர் துரித உணவுகளான பீட்ஸா, பர்கர் போன்றவற்றை மட்டுமே உண்பார்கள். வேறு சிலர் ஓட்ஸ்,   கார்ன் ஃப்ளேக்ஸ் போன்றவற்றை மட்டுமே சாப்பிடுவார்கள். இவற்றில் நார்ச்சத்து மட்டுமே இருக்கும். நமது உடலுக்கு   எல்லா வகையான சத்துகளும் சரிவிகிதத்தில் தேவை. ஒரே வகையான உணவை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதால்   ஒரே வகையான சத்து மட்டுமே நம் உடலுக்கு கிடைக்கிறது. மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை தொடர்ந்து   எடுப்பதால் பசி எடுக்காது. நமது உடல் எடையும் குறையும். ஆனால் சத்துக் குறைபாட்டால் கண்களைச் சுற்றி   கருவளையம் விழுந்திருக்கும். உடல் தானாகவே சோர்வடையத் துவங்கும்.ஒரு செடி வளர எப்படி சூரிய ஒளி, காற்று,   தண்ணீர், வளமான மண் போன்ற பல்வேறு ஊட்டச் சத்துக்கள் தேவையோ அதேபோல் நம் உடலுக்கும் எல்லாவிதமான   சத்தும் தேவைப்படுகிறது. மனித உடலுக்கு விட்டமின் ‘கே’, விட்டமின் ‘சி’, விட்டமின் ‘டி’ இவையெல்லாம்   தேவை.

நமக்கு உடல் நிலை சரியில்லாதபோது மருத்துவரை அணுகினால் ஒருசில மருத்துவர்கள் நமது கண்களின் கீழ்ப்   பகுதியினை கீழ் நோக்கி  இழுத்து  சோதனை செய்வார்கள். காரணம், நமது விழிகளின் கீழ்ப்பகுதி சிவப்பாக இருக்கிறது   என்றால் நமக்கு ஹீமோகுளோபின் சரியான அளவில் உள்ளது என்று அர்த்தம். கீழ்விழி வெள்ளை நிறமாக இருந்தால்   ஹீமோகுளோபின் நமது ரத்தத்தில் குறைவாக உள்ளது என்று அர்த்தம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக   உள்ளவர்களுக்கு கட்டாயம் கருவளையம் வரும்.

ஒரு சிலருக்கு கருவளையம் வருவதற்கு பரம்பரை(genetic)யும் ஒரு முக்கியக் காரணம். அம்மா, அப்பா, தாய்   மாமா, அப்பாவுடன் பிறந்த அத்தை என வீட்டில் யாருக்காவது கண்ணில் கருவளையம் இருந்தால் தொடர்ச்சியாக   குழந்தைக்கும் வரும். உடலில் உள்ள சத்துக் குறைபாட்டால் கருவளையம் வந்தால் அதை நம்மால் சரிசெய்துவிட   முடியும். ஆனால்  ஜெனிடிக் பிரச்சனையால் வந்தால் அதை சரிசெய்ய முடியாது. அதிலும் நல்ல சத்தான உணவுகளை   எடுப்பவர்கள், உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள் என்றால் இந்த கருவளையத்தை ஆரம்பக் கட்டத்திலேயே   கண்டுபிடித்து தோல் மருத்துவரை அணுகினால் நீக்குவதற்கான வாய்ப்பு உண்டு.

சிலருக்கு கண்ணின் கீழ்ப்பகுதி சுருக்கமாக இருக்கும். சுருக்கம் இருந்தாலே கருவளையம் வரும். எந்த பிரச்சனையால்   நமக்கு கருவளையம் வருகிறது என்பதை கண்டுபிடித்துவிட்டால் அதற்கான வழிமுறைகளைக் கையாண்டு கருவளையப்   பிரச்சனையினை விரைவில் நிவர்த்தி செய்துவிடலாம்.கருவளையத்தைப் போக்க மருத்துவரை அணுகினால்,  மருத்துவர்  கொடுக்கும் ஆயின்மென்ட், மாத்திரைகள் எல்லாம் பயன்படுத்தும்வரை மட்டுமே பிரச்சனையில் இருந்து  நமக்கு தீர்வு  கிடைக்கும். மருந்து பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு அதிகம்  உள்ளது. நமது  வீட்டில், சமையலறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களைக் கொண்டே  கருவளையத்தை  நிரந்தரமாக நீக்கி தீர்வு காண முடியும்.

வீட்டிலே சரி செய்யும் முறை

நாம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் கலப்படமின்றி தரமானதாக இருக்க வேண்டும்.   அப்போதுதான் அதன் முழுப் பயன்பாடும் நமக்கு பலன் தரும்.

* நாம் உணவில் பயன்படுத்தும் வெந்தயத்தில் ஒருவிதமான ரசாயனத் தன்மை உள்ளது. எனவே வெந்தயத்தை
3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துநன்றாக அரைத்துக்கொண்டு, நமது கண்களை நன்றாக கழுவி சுத்தம்  செய்துவிட்டு, கண்களை மூடிய பிறகு கண்களின்  மேல் பேக் மாதிரி போட வேண்டும். 20 நிமிடம் கழித்து கழுவி  சுத்தம் செய்துவிடலாம். இந்த முறையை இரண்டு  நாளைக்கு ஒருமுறை செய்தால் கண்ணிலிருக்கும் கருவளையம்  மறையத் துவங்கும்.

* அரைத்த வெந்தயத்தோடு கஸ்தூரி மஞ்சள், காய்ச்சாத பால் இவற்றையும் சேர்த்து கண்ணில் பேக் போடலாம்.   அப்போது நம் கண்களில் இருக்கும் சோர்வும் சேர்ந்தே குறைந்து கண்களில் புத்துணர்ச்சி கூடும்.

*கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு சின்னச் சின்ன சிலைஸ்களாக எடுத்துக் கொண்டு அத்தோடு மிக்ஸியில்   பொடியாக்கப்பட்ட சர்க்கரை மற்றும் தேன் இவற்றை இணைத்து கண்களைச் சுற்றி தடவ வேண்டும். இதில் தூள்   செய்யப்பட்ட சர்க்கரை நல்ல ஸ்க்ரப்பராக செயல்பட்டு முகத்தில் இருக்கும் டெட் செல்களை நீக்கும். தேன் கண்களுக்கு   கீழே இருக்கும் முகச் சுருக்கத்தை குறைக்கும். முகத்தை கழுவிய பிறகு நம் முகத்தில் உள்ள தோல் மென்மைத்   தன்மை அடைவதுடன் முகம் மிகவும் பொலிவடைந்து பளபளப்பாக இருக்கும்.

* ஃப்ரெஸ்ஸான உருளைக் கிழங்கு, வெள்ளரி இவற்றை சிலைஸ்களாக எடுத்து கண்களைச் சுற்றி தடவ வேண்டும்.   இதில் உருளைக் கிழங்கிற்கு கண் மற்றும் கழுத்தில் இருக்கும் கருவளையத்தை போக்கும் சக்தி நிறைந்து இருக்கிறது.   அதேபோல் தக்காளியினை மசித்து எடுத்து அதையும் கண்களைச் சுற்றியும் முகத்திலும் பேக் போட்டுக் கொள்ளலாம்.

*முகத்தை ஸ்டீம் செய்து கொள்ள வேண்டும். அப்போது முகத்தின் தோலில் உள்ள கண்ணிற்குத் தெரியாத துளைகள்   திறந்து கொள்ளும். முகத்தில் ரோஸ் வாட்டரை அப்ளை பண்ண வேண்டும்.அதன் பிறகு ஜாதிக்காயினை பொடியாக்கி,   மிகவும் மெதுவாக, சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் முறையில் இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்தி கண்களைச்   சுற்றி ஸ்க்ரப் பண்ண வேண்டும். அப்போது கண்களின் கீழுள்ள கருவளையத்தில் உள்ள டெட் செல்கள் வெளியேறும்.   பிறகு வெள்ளரியினை நன்றாக அரைத்து அதை தடவி கண்ணைச் சுற்றி மசாஜ் கொடுக்க வேண்டும்.

* ஊற வைத்த மூன்று பாதாமை அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து கண்களை டிஷ்யூ பேப்பர் கொண்டு   மூடிவிட்டு கண்ணைச் சுற்றி பேக் போட வேண்டும். 20 நிமிடம் கழித்து எடுத்துவிட்டால் கண்ணில் உள்ள கருவளையம்   கட்டாயமாக நீங்கிவிடும்.

* தாமரை மலரின் இதழ் மற்றும் ஆலுவேரா ஜெல் இரண்டையும் எடுத்து நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து அந்தக்   கலவையினை ஃப்ரீசர் பாக்ஸில் உள்ள ஐஸ் ட்ரேயில் உறைய வைக்க வேண்டும். உறைந்த பிறகு அதை எடுத்து ஒரு   டவலில் வைத்து கட்டி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்ணைச் சுற்றி வைத்து ஒத்தடம் கொடுத்தால் கருவளையம்   மறைவதுடன், தாமரை மலர் பார்வையின் திறனை அதிகரிக்கச் செய்யும்.
இத்துடன்…

* குறைந்தது 10 டம்ளர் தண்ணீரையாவது தினமும் அருந்த வேண்டும். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தண்ணீரை   குடித்தல் கூடாது. நமக்கு தாகம் எடுக்கும் உணர்வு தோன்றும்போது மட்டும் தண்ணீரை தவறாமல் பருக வேண்டும்.

*  தோலுக்கு தேவையான விட்டமின் கே, சி, இ அதிகம் நிறைந்த பழம், காய்கறிகளை அதிகம் உணவில்  எடுத்துக்கொள்ள வேண்டும்.

*  சூரிய ஒளி காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் நம் தோல்களில் படச் செய்தல்  வேண்டும்.பைட்டோதெரபி(phytotheraphy) முறையில் அழகு நிலையங்களிலும் கருவளையத்தை நீக்க  வழிமுறைகள்  உள்ளது. இதில் அரோமா ஆயில் பயன்படுத்தப்படுகிறது. அரோமா ஆயில் என்பது மரிக்கொழுந்து,  செம்பருத்தி பூ,  வெந்தயம் இவற்றில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இவற்றை இணைத்து கண்ணைச் சுற்றி  தடவி மசாஜ்  தருவார்கள். இதன் மூலமாகவும் 70 சதவிகிதம்வரை கருவளையத்தை நீக்கிவிட முடியும். இதை  இரண்டு முறை  தொடர்ந்து இடைவெளி விட்டு எடுத்துக் கொண்டால் கருவளையத்திற்கு குட் பை சொல்லலாம்.

Related posts

வீட்டிலேயே Facial செய்வது எப்படி ?

nathan

முகம் பொலிவு பெற இந்த எளிய குறிப்புகளை செய்யுங்கள்!…

nathan

இரு மகன்களையும் கொஞ்சி விளையாடும் நயன்தாரா.!

nathan

கசிந்த தகவல் ! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரகசியமாக அடிக்கடி செல்லும் இடம் இது தானாம் !

nathan

அழகான பாதத்திற்கு

nathan

உங்களின் முகத்தில் கொலஸ்ரோல் படிந்து அசிங்கமாக உள்ளமாக உள்ளதா? அப்போ இத செய்யுங்கள்!…

sangika

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் தாடியை உடனடியாக வளர செய்யும் 12 உணவு வகைகள்..!

nathan

உண்மையை உடைத்த அனிதா சம்பத்!என்னை தவறான உறவுக்கு அழைத்தார்கள் –

nathan

சருமத்தைப் பாதுகாப்பதுப் எப்படி?…..

sangika