பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு. இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள்.
இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். சருமமும் மிருதுவாகும்.
தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கி, இளமைத் தோற்றம் தருகிறது பச்சை திராட்சைச் சாறு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு கிண்ணத்தில் எடுங்கள். அதே அளவுக்கு திராட்சைச் சாறையும் எலுமிச்சைச் சாறையும் எடுத்து, வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
இதை முகம், கழுத்து, கை ஆகிய பகுதிகளில் பேக் ஆகப் போட்டு 20 நிமிடம் காயவிட்டு கழுவுங்கள். பச்சை திராட்சை, சருமத்தை மிருதுவாக்கும். எலுமிச்சைச் சாறு, சருமத்தை சுத்தப்படுத்தும். முட்டை, தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கும். இதுபோல வாரம் இருமுறை செய்துவர முதுமைத் தோற்றம் மறைந்து இளமை மிளிரும்.
சிவப்பழகை ஜொலிக்கச் செய்யும் தன்மையும் பச்சை திராட்சைக்கு உண்டு. ஆரஞ்சு பழத் தோலை உலர்த்தி பவுடராக்குங்கள். ஒரு டீஸ்பூன் இந்தப் பவுடருடன், ஒரு டீஸ்பூன் திராட்சை ஜுஸ் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி கழுவுங்கள். இப்படிச் செய்வதால் தோலின் முரட்டுத்தன்மை நீங்குவதுடன் நிறமும் கூடும்.
அழகுக்கு ஆதரவு தருவதில் காய்ந்த திராட்சைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. காய்ந்த திராட்சையுடன், பீட்ரூட் சாறை கலந்து தினமும் உதடுகளில் பூசி வர, உதடுகள் கோவைப்பழம் போல சிவக்கும்.
காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊறவிட்டு கழுவினால், ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிக்கும்.