கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. வெளியே சென்றாலே அனல் பறக்கும் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த கோடைக்காலத்தில் வீட்டின் உள்ளே கூட இருக்க முடியாத அளவில் வெப்பநிலையானது அதிகமாக இருக்கும். பலரது வீடுகளில் கோடை வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க, வீட்டில் ஏசிக்களைப் போட்டிருப்பார்கள். இருப்பினும் மற்ற காலங்களை விட கோடைக்காலத்தில் சற்று அதிகமாக மின்சார துண்டிப்பு ஏற்படும் என்பதால், நிச்சயம் பலருக்கும் அதிகமாக வியர்வை வெளியேறும்.
ஒருவரது உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறினால், உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைய ஆரம்பிக்கும். நீர்ச்சத்தின் அளவு குறைந்தால், அதுவே பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதோடு அதிகமாக வியர்த்தால், அது சருமத்தில் அரிப்புக்கள் மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.
மனித உடலானது 70% நீரால் ஆனது. எப்போது உடலில் போதுமான அளவு நீர் இல்லையோ, அப்போது உடல் வறட்சி நிலையில் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் இதை ஈடுசெய்ய நீரை அதிகம் குடிக்க வேண்டியிருக்கும். ஒருவரது உடலில் உள்ள நீர்ச்சத்தை வெறும் நீரால் மட்டும் அதிகரிக்க முடியாது. நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்க பல்வேறு வழிகள் உள்ளன. இக்கட்டுரையில் கோடையில் உடல் வறட்சி அடையாமல் இருக்க செய்ய வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஜூஸ் குடியுங்கள் உங்களுக்கு வெறும் தண்ணீரைக் குடிக்க போர் அடித்தால், அந்த நீரை பழங்களுடன் சேர்த்து ஜூஸ் வடிவில் உட்கொள்ளுங்கள். இப்படி பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதோடு, வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் ஜூஸ் தயாரித்துக் குடிக்கும் போது, அதில் சர்க்கரையை சேர்க்காமல், தேன் கலந்து கொள்ளுங்கள்.
இளநீர் குடியுங்கள் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் ஒரு சிறப்பான பொருள் இளநீர். வெளியே செல்லும் போது எவ்வளவு தான் நீரை கொண்டு செல்ல முடியும். ஆனால் வெளியிடங்களுக்கு செல்லும் போது, தெருவோரங்களில் இளநீர் விற்கப்பட்டால், அதை அச்சமின்றி வாங்கிப் பருகலாம். இளநீரில் எவ்வித கலப்படமும் இல்லை. மேலும் இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளதால், இது உடலை புத்துணர்ச்சி அடையச் செய்து, உடல் வெப்பத்தைத் தணிக்கும்
சாலட் சாப்பிடுங்கள் காய்கறிகள் மற்றொரு அற்புதமான நீர்ச்சத்தைப் பெற உதவும் உணவுப் பொருட்களாகும். ஆகவே வெள்ளரிக்காய், தக்காளி, கீரைகளைக் கொண்டு சாலட் தயாரித்து, அதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி, கோடைக்காலத்தில் சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் வறட்சியடையாமலும் இருக்கும்.
எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ணவும் கோடைக்காலத்தில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுங்கள். செரிமானமாவதற்கே கடினமாக இருக்கும் உணவுகளை உட்கொண்டால், பின் செரிமான மண்டலத்தில் அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படும். எனவே கோடையில் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட நினைத்தால், எளிதில் செரிமானமாகும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள்.
சூப் குடியுங்கள் ஒருவரது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும் உணவுகளுள் ஒன்று சூப். கோடைக்காலத்தில் காய்கறிகளால் ஆன சூப்பை குடித்தால், அதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து, உடல் நன்கு ஆரோக்கியமாகவும், வறட்சியடையாமலும் இருக்கும். மேலும் சூப் கோடைக்காலத்தில் வாய்க்கு ருசியானதாகவும் இருக்கும்.
மோர் குடியுங்கள் மிகவும் சுவையான மற்றும் உடல் சூட்டைத் தணிக்கும் மறும் உடல் வறட்சியைத் தடுக்கும் அற்புத பானம் தான் மோர். மேலும் மோரில் செரிமான மண்டலத்தில் உணவை செரிப்பதற்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது. அதிலும் மோரில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றைப் போட்டுக் குடித்தால், அந்த மோர் இன்னும் சுவையாக இருக்கும்.
காப்ஃபைன் பானத்தில் இருந்து விலகி இருங்கள் கோடைக்காலத்தில் காபி, டீ போன்ற காப்ஃபைன் நிறைந்த பானங்களை அதிகம் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காப்ஃபைன் உடலை வறட்சி அடையச் செய்யும். அதிலும் நீங்கள் தினமும் போதுமான நீரை பருகி, அதோடு டீ அல்லது காபியையும் அதிகமாக குடித்தால் உடலில் நீர் சத்து அதிகரிப்பதற்கு பதிலாக குறையவே செய்யும். எனவே, கோடையில் காபி மற்றும் டீக்கு குட்பை சொல்லுங்க.
தண்ணீர் நீங்கள் உங்கள் டியட்டில் எவ்வளவு தான் திரவங்களை சேர்த்தாலும், தண்ணீரை தவறாமல் சீரான இடைவெளியில் குடிக்கும் பழக்கத்தை கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் உடலுக்கு கோடையில் தேவையான அத்தியாவசியமான ஒன்று தண்ணீர். எனவே, அதை மட்டும் குடிக்க தவற வேண்டாம்.