யாருக்கு தான் ஆரோக்கியமான, நீளமான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்காது? தற்போது தலைமுடியின் ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்துவதற்கு மக்கள் எவ்வளவு பணம் செலவழிக்கவும் தயாராக உள்ளனர். இதற்கு ஏற்ப தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் தலைமுடி பராமரிப்புப் பொருட்களான சீரம், எண்ணெய்கள், ஷாம்புக்கள் என்று பல கடையில் விற்கப்படுகின்றன. இவை அனைத்தும் எவ்வளவு தான் விலை அதிகமாக இருந்தாலும், மக்கள் பணத்தைப் பற்றி சற்றும் கவலைப் படாமல் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இப்படி அதிக பணம் செலவழித்து தலைமுடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் வீட்டில் உள்ள ஒரு அற்புதமான பொருளைக் கொண்டு பராமரிப்பு கொடுத்து வந்தால், தலைமுடி ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும். அப்படி எந்த பொருள் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும் என்று நீங்கள் கேட்கலாம். அது வேறு ஒன்றும் இல்லை, எலுமிச்சை தான்.
மிகவும் பிரபலமான சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பொடுகுத் தொல்லை, அதிகப்படியான எண்ணெய் பசையுள்ள ஸ்கால்ப் போன்ற தலைமுடி பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். கீழே எலுமிச்சையை எப்படி பயன்படுத்துவது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து பின்பற்றினால், தலைமுடியை நீளமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ச்சி பெறும்.
ஷாம்புவுடன் எலுமிச்சை சாறு தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண எலுமிச்சை சாற்றினை நேரடியாக தலைக்கு பயன்படுத்தக்கூடாது. எலுமிச்சையில் அசிட்டிக் பண்புகள், ஸ்கால்ப்பில் எரிச்சலையும், அரிப்பையும் உண்டாக்கும். வேண்டுமானால் எலுமிச்சை சாற்றினை ஷாம்புவுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அதுவும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை மைல்டு ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, தலையில் தேய்த்து குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதனால் தலைமுடி நன்கு பொலிவோடு இருக்கும்.
தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, ஸ்கால்ப் ஊட்டம் பெறும். எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பொடுகையும், தேங்காய் எண்ணெய் ஸ்கால்ப்பிற்கு ஊட்டம் அளிக்கும். அதற்கு 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள்.
பாதாம் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்ய, எலுமிச்சை சாற்றினை தேன் மற்றும் பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள்.
தயிருடன் எலுமிச்சை சாறு ஒரு பௌலில் சிறிது தயிரை எடுத்து, அத்துடன் 1 ஸ்ழுன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு கொண்டு அலசுங்கள். இந்த ஹேர் மாஸ்க்கினால் பொடுகு நீங்குவதுடன், ஸ்கால்ப்பிற்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து, தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
வேப்பிலையுடன் எலுமிச்சை சாறு எலுமிச்சை சாற்றினை வேப்பிலையுடன் சேர்த்து கலந்து பயன்படுத்தினால், பொடுகு நீங்குவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்பட்ட பூஞ்சை தொற்றுக்களும் அகலும். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துவது நல்லது.
முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாறு ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, தலைமுடி பொலிவோடு இருப்பதுடன், தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.
நீருடன் எலுமிச்சை சாறு ஒரு கப் நீரில் 3-4 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தலைக்கு ஷாம்பு போட்டு சாதாரண நீரில் நன்கு அலசிய பின், இந்த எலுமிச்சை சாறு கலந்த நீரால் தலையை அலசுங்கள். சில நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து, பின் மீண்டும் சுத்தமான நீரால் தலைமுடியை அலசுங்கள். இப்படி செய்யும் போது கண்களை மூடிக் கொள்ளுங்கள். இந்த செயலை வாரத்திற்கு ஒருமுறை செய்ய தலைமுடி நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.