இளம் வயதிலேயே ஏற்படும் நரையினை போக்குவதில் மருதாணி சிறந்த மருந்தாகும். மருதாணியை பேக் போல தலை முடிக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்சனை நீங்கும். முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும். முடியின் நுனியில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். மருதாணி குளிர்ச்சி என்பதால், சிலருக்கு சீக்கிரம் சளி பிடிக்கும்.
மருதாணி இலைகளை மைய அரைத்து அடை போல தட்டி நிழலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாட்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வந்தால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும்.
செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிது சேர்த்து கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால், தலைமுடி பளபளப்பாக இருக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முடி கொட்டுவது குறையும். மருதாணியை திக்காக அரைத்து அதில் வாழைப்பழத்தை சேர்த்து முடியில் தடவி வந்தால் முடி பளபளப்பாகும். மருதாணியுடன் செம்பருத்தி இலை சேர்த்து அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து, தலையில் பேக் போல போட்டு காய்ந்ததும் குளித்தால் முடி கருப்பாக இருக்கும்.
நரை பிரச்சனை இருந்தால் அதற்கான சிறப்பு பேக் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
மருதாணி இலை பொடி இரண்டு கப் (காயவைத்து பொடித்துக் கொள்ளவும்), டீ டிகாஷன் தேவையான அளவு, எலுமிச்சை சாறு 1 பழம், முட்டையின் வெள்ளை கரு 1, காபி பொடி 2 மேசைக்கரண்டி, பீட்ரூட் சாறு 1 கப். ஒரு இரும்பு பாத்திரத்தில் மருதாணி இலை பொடியுடன், டீ டிகாஷன் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலக்கவும். அதில் காபி பவுடர் சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் முட்டை, எலுமிச்சை சாறு மற்றும் பீட்ரூட் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
தற்போது கடைகளில் கிடைக்கும் மெஹந்திகளில் சிவப்பதற்காக கெமிக்கல்ஸ் அதிகமாக கலக்கப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால் மட்டுமே இதன் பலன்களை அனுபவிக்க முடியும். அதனால் கடைகளில் கிடைக்கும் மெஹந்தி பாக்கெட்டுகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் கைகளில் தோல் உரிய காரணம் இந்த ரசாயன ஒவ்வாமை தான். அதனால் முடிந்த வரை பாக்கெட் மருதாணியை தவிர்த்து இயற்கை முறையில் விளையும் மருதாணியை பயன்படுத்துவது நல்லது.