சாமானியப் பெண்கள் பார்த்துப் பிரமிக்கும் நடிகைகளும் மாடல்களும் வெறும் ஃபேஷியலையும் காஸ்மெட்டிக்ஸையும் மட்டுமே நம்பி இருப்பதில்லை. அவற்றையும் தாண்டிய சிறப்புச் சிகிச்சைகள்தான் அவர்களின் அழகு சீக்ரெட். மாநிறமாக வரும் நடிகைகளைப் பேரழகியாக மாற்றும் மேஜிக் சிகிச்சைகள் ஏராளம் உண்டு இன்று. அவற்றில் ஒன்றுதான் ‘க்யூ ஸ்விட்ச்டு என்டியாக் லேசர்’ (Q Switched NDYAG Laser).
ஃபேஷியல் செய்துகொள்வதற்குப் பதில் அதே இடைவெளிகளில் இந்தச் சிகிச்சையைச் செய்துகொள்ளலாம். இதிலிருந்து செலுத்தப்படுகிற ஒளியானது மெலனினைக் குறிவைத்து நிணநீர் சுரப்பிகள் வழியே அவற்றை நீக்கிவிடும். இதைச் செய்து முடித்ததும் சருமத்தில் ப்ளீச் செய்தது போன்ற தோற்றம் வரும். கூடவே சருமத்தில் உள்ள மெல்லிய ரோமங்களும் நிறம் மாறிவிடும்.
சருமத்தில் பிக்மென்ட்டேஷன் எனப்படுகிற மங்குப் பிரச்னை இருந்தாலும் இதில் சரியாகிவிடும்.
பியூட்டி பார்லர் சென்று ஃபேஷியல் செய்துகொள்கிறபோது அது மேல்புறத்தில் உள்ள இறந்த செல்களை மட்டுமே நீக்கும். ஃபேஷியலுக்கு முன் செய்யப்படுகிற ப்ளீச், சருமத்திலுள்ள ரோமங்களை நிறம் மாற்றுவதால் சரும நிறம் பளிச்சென மாறியதுபோலக் காட்சியளிக்கிறது. ஃபேஷியல் செய்வதைவிடவும் சிறந்தது ‘க்யூ ஸ்விட்ச்டு என்டியாக் லேசர்’ சிகிச்சை. பிரபலங்கள் செய்துகொள்கிற சிகிச்சை என்பதால் காஸ்ட்லியானது என நினைக்க வேண்டாம். பார்லரில் ஸ்பெஷல் ஃபேஷியல் செய்துகொள்கிற செலவுதான் இதற்கு ஆகும்.
என்ன நடக்கிறது இந்தச் சிகிச்சையில்?
முதலில் கார்பன் பவுடரைத் தண்ணீரில் கலந்து சருமத்தில் தடவப்படும். இதற்கான கருவியை ‘லாங் பல்ஸ்’ என்கிற மோடில் வைத்து இந்தச் சிகிச்சையைச் செய்கிறபோது கார்பன், சருமத்தில் நன்கு ஒட்டிக்கொள்ளும். லேசான சூட்டையும் கிளப்பும். அது சருமத்தின் இளமைக்குக் காரணமான கொலஜெனைத் தூண்டும்.
அடுத்து காலிமேட்டடு (Collimated) முறையைப் பயன்படுத்தி அந்தக் கார்பனை நீக்குவோம். அந்தக் கார்பனோடு சேர்த்து இறந்த செல்களும் மெலனினும்கூட வெளியே வந்துவிடும்.
மூன்றாவதாக ஃபிராக்ஷனல் முறையில் ஒளியைச் சருமத்தின் உள்ளே ஊடுருவச் செய்யப்படும். இதில் சருமம் அதிகபட்ச பொலிவைப் பெறும்.
இந்தச் சிகிச்சை முடிந்த உடனே வேலைக்குச் செல்லலாம். வெறும் 20 நிமிடங்களில் மொத்த சிகிச்சையும் முடிந்துவிடும்.
சரும நிறத்தைக் கூட்டுவது, பருக்கள், மங்கு, டாட்டூ நீக்குவது போன்ற எல்லாவற்றுக்கும் இந்தச் சிகிச்சை உதவும். சரும துவாரங்கள் இறுகும். சுருக்கங்கள் நீங்கும். மாடல்களும் நடிகைகளும் ஷூட்டிங்கிற்கு ஒருவாரம் முன்பும், மணப்பெண்கள் என்றால் திருமணத்துக்கு ஒருவாரம் முன்பும் இதைச் செய்து கொள்கிறார்கள்.
இதற்கு அடுத்தபடியாக இன்று பிரபலங்களிடம் டிரெண்டாகி வருவது ஆன்டிஆக்ஸிடன்ட் சிகிச்சை. க்ளூட்டாதையான் என்கிற ஆன்டிஆக்ஸிடன்ட் மருந்தை நரம்பின் வழியே செலுத்துகிற ஊசியாக எடுத்துக்கொள்கிறார்கள். இது ஒட்டுமொத்த உடலையும் டீடாக்ஸ் செய்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும். இந்தச் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம், முறையான மருத்துவமனைகளில் செய்துகொள்வதுதான் பாதுகாப்பானது.
பக்கவிளைவுகள் இருக்காது என்றாலும் உடலுக்குள் க்ளூட்டாதையான் இருக்கும்வரைதான் அதன் பலன் நீடிக்கும்.
நரம்பின் வழியே எடுத்துக்கொள்கிற சிகிச்சை வேண்டாம் என்கிறவர்கள் மாத்திரையாகவும் க்ளூட்டாதையானை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு மாத்திரையின் விலையே 100 ரூபாய்க்கு மேல் இருக்கும். ஆறு மாதங்களுக்காவது சாப்பிட வேண்டியிருக்கும். வசதி இருப்பவர்களுக்கு இது ஓ.கே. மற்றவர்கள் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதன் மூலம் இதே பலன்களை அடைய முடியும்.
சருமப்பொலிவுக்கு டிப்ஸ்…
* நம் ஊரில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
* பழங்களை அப்படியே சாப்பிடுங்கள். ஜூஸாகக் குடிக்க வேண்டாம்.
* காலையில் உணவு உண்ணும்முன்பு பழங்கள் சாப்பிடுவது சிறந்தது.
* வெளிநாட்டுக் காய்கறிகளையும் பழங்களையும் தவிர்ப்பது நல்லது. அவை அங்கிருந்து நம் கைகளுக்குக் கிடைக்கும் வரையிலான நாள்கள் அதிகமாக இருப்பதால் கெட்டுப்போகாமலிருக்க ஏகப்பட்ட கெமிக்கல்களைச் சுமந்து வரும்.
* சாப்பிடும்போது டி.வி பார்க்கவோ, போன் பேசவோ வேண்டாம். வேறு வேலைகளைச் செய்துகொண்டே சாப்பிடுகிறபோது சுவாசம் சீராக இருக்காது. சீரான சுவாசம் என்பது சரும ஆரோக்கியத்துக்கும் அவசியம்.