உடலில் காற்றோட்டம் குறைவாக இருக்கும் மற்றும் மடிப்பு உள்ள பகுதிகளில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு காரணம் வியர்வை தான். பொதுவாக ஈரமான பகுதிகளில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகம் இருக்கும். இப்படி பாக்டீரியாக்கள் அதிகம் பெருகும் போது, அவ்விடம் சிவந்தும், கடுமையான அரிப்புக்களையும் ஏற்படுத்தும்.
இந்த அரிப்பு அப்படியே நீடித்தால், எந்த ஒரு உடையை அணிய முடியாமல் அவ்விடமே பழுப்பு நிறத்தில் காணப்படும். பின் அந்த இடமே வலி மிக்கதாக இருக்கும். இந்த அரிப்புடன், சில சமயங்களில் மூச்சு விடுவதில் சிரமம், காய்ச்சல், தொண்டை கரகரப்பு, முக வீக்கம் போன்றவை ஏற்படும். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இம்மாதிரியான அக்குள் அரிப்பை இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். இக்கட்டுரையில் அக்குள் அரிப்பைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.
கற்றாழை கற்றாழை மிகச்சிறந்த வலி நிவாரணி. சரும பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வளிக்கும். அதிலும் அக்குளில் அரிப்பு இருப்பவர்கள், கற்றாழை ஜெல்லை அப்பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அக்குள் அரிப்புடன் வலியும் நீங்கும்.
பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இந்த பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி தினமும் 2 முறை செய்தால், அக்குள் அரிப்பு போய்விடும்.
ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள மாலிக் அமிலம், அரிப்பை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆகவே அக்குளில் அரிப்பு தீவிரமாக இருந்தால், ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் மூன்று முறை அக்குளில் தடவுங்கள். இதனால் சீக்கிரம் அக்குள் அரிப்பு மறைந்துவிடும்.
ஐஸ் அக்குள் சிவந்தும், தீவிர அரிப்பையும் உண்டாக்கினால், அதிலிருந்து உடனடி நிவாரணம் பெற, ஐஸ் கட்டிகளை துணியில் வைத்துக் கட்டி அக்குளில் சிறிது நேரம் வைத்திருங்கள்.
காட்டன் உடைகள் அக்குளில் அரிப்பு கடுமையாக இருந்தால், எப்போதும் காட்டன் உடைகளை அணியுங்கள். சிந்தடிக் மற்றும் உல்லன் உடைகள், நிலைமையை மோசமாக்கும். ஆனால் காட்டன் உடைகள் அணிந்தால், அப்பகுதி காற்றோட்டமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.
வைட்டமின் ஈ அக்குள் அரிப்பு கடுமையாக இருந்து, அப்பகுதி மிகவும் வறட்சியுடன் இருந்தால், வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை வாங்கி, அதனுள் உள்ள எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுங்கள். இப்படி தினமும் 2-3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ஓட்ஸ் ஓட்ஸ் அரிப்பைக் குறைக்கும். ஆகவே பாத் டப்பில் ஒரு கையளவு ஓட்ஸ் பவுடரைப் போட்டு, நீர் நிரப்பி, அதனுள் சிறிது நேரம் உடலை ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், அக்குள் அரிப்பு மட்டுமின்றி, உடலின் இதர பகுதிகளில் ஏற்படும் அரிப்பும் நீங்கும்.
டீ ட்ரீ ஆயில் சில நேரங்களில் பூச்சிக்கடியாலும் அக்குள் பகுதியில் அரிப்பு ஏற்படலாம். இந்த காரணத்தால் ஏற்படும் அரிப்பை டீ-ட்ரீ ஆயில் உதவியுடன் எளிதில் நீக்கலாம். டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளது. இவை வலியையும், அழற்சியையும் தடுக்கும். எனவே அக்குள் அரிப்பு இருந்தால், டீ-ட்ரீ ஆயிலை பஞ்சுருண்டையில் நனைத்து அக்குளில் தடவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை என அக்குளில் ஏற்பட்ட அழற்சி போகும் வரை செய்யுங்கள்.