29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
​பொதுவானவை

குழந்தை வளர்ப்பில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பங்குண்டு

 

குழந்தை வளர்ப்பில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பங்குண்டு

குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுத் தருவது, பாதுகாப்பாக விளையாடுவது, சாப்பிடுவது, வெளியே சென்றால் நடந்து கொள்ள வேண்டிய முறை, அன்னியர்களிடம் பழகும் விதம், மற்ற குழந்தைகளிடம் நட்பு, ஆசிரியரிடம் மரியாதை, பெரியவர்களிடம் பணிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வீட்டு தூய்மை, விருந்தினர்களை வரவேற்பது, பொதுஅறிவு, இயற்கையை நேசித்தல் என்று கற்றுகொடுக்க பல விஷயங்கள் உள்ளன.

குழந்தைகள் பள்ளி செல்லும் வரை பெற்றோரிடமிருந்து கற்று கொள்ள பல விஷயங்கள் உள்ளது. அம்மாவும், அப்பாவும் சேர்ந்து குழந்தைகள் அறிவை வளர்க்க பங்கேற்க வேண்டும். குழந்தைகள் கேள்வி கேட்கும் பருவத்தில் தக்க பதில் சொல்ல ஆள் இல்லாவிட்டால் அவை குழம்பிப்போகும்.

ஒரு பொருளை சுட்டிக் காட்டி ‘நீ இதை எடுக்க கூடாது’ என்று கட்டளை போடுவதை விட்டுவிட்டு, இதை என்ன காரணத்துக்காக எடுக்கக் கூடாது? இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெளிவுபடுத்திச் சொன்னால் நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும். கேள்வி மேல் கேள்வி கேட்கும்போது, ‘சும்மா நச்சரிக்காதே… சொன்னதைச் செய்’ என்று எரிச்சல்படாமல் பொறுமையாக விளக்கம் சொல்ல வேண்டும்.

நாம் சொல்லும் விளக்கம் அவர்களுக்கு புரிந்ததா என்பதையும் பார்க்க வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது நல்ல உணவோடு முடிந்து விடுவதில்லை. அறிவும் வளர அப்பா துணை நிற்க வேண்டும். அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் குழந்தைகளுக்கு அப்பாவின் உழைப்பு அதிகமாக இருந்திருக்கும். நாம் வாழும் உலகம், சுற்றுச்சூழல், இயற்கை இதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு புரியும்படி விளக்கிச் சொன்னால் இயற்கையை நேசிக்கும் பண்பு அவர்களிடம் வளரும்.

பூக்களைப் பறிக்காதீர்கள் என்ற அறிவிப்பு குழந்தைகளுக்குப் புரியாது. ரகசியமாக பூக்களை பறிக்க முற்படும்போது பூக்களைப் பற்றியும், அதன் அழகு சுற்றுச்சூழலை ரம்மியமாக்கும் விதத்தைப் பற்றியும், அதன் நறுமணம் நமக்குத் தரும் சந்தோஷம் பற்றியும், செடிக்கும், பூக்களுக்கும் உள்ள உறவைப் பற்றியும் சொல்ல வேண்டும்.

பூக்கள் இல்லாத செடி எப்படி காட்சியளிக்கும் என்பதைப் பற்றியும் விளக்க வேண்டும். அறிவிப்பு பலகை நமக்குத்தான், குழந்தைகளுக்கு அல்ல. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பெண் குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கு நிறைந்திருக்கிறது. நல்ல குடிமகன்களை உருவாக்கும் பொறுப்பு அப்பாவுக்கு நிறைய இருக்கிறது.

அம்மா வீட்டில் இல்லாமல் அழுது கொண்டிருக்கும் குழந்தைகளை அப்பாவால் சமாளிக்கவே முடியாது என்ற கருத்து பரவலாக இருக்கிறது. அது சரியல்ல. ஏதோ ஓர் அசவுகரியம், பாதுகாப்பின்மையை குழந்தை உணரும்போது ஏதேனும் ஒரு சுவாரசியமான விஷயத்தின் பக்கம் அவர்கள் கவனத்தைத் திருப்பினால் குழந்தைகள் அப்பாவை விரும்பும்.

படங்களைப் பார்த்து கதை சொல்ல வைப்பது அவர்களுடைய கற்பனை சக்தியை அதிகரிக்கும். பேச்சுத்திறனையும் அதிகரிக்கச் செய்யும். நாம் சொல்லும் கதைகளைவிட அவர்கள் சொல்லும் கதை சுவாரசியமானதாக இருக்கும். அவர்களை அவர்கள் போக்கில் பேசவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டும்.

அப்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி. குழந்தைகளின் உலகம் அதீத கற்பனை நிறைந்தது. அது மகிழ்ச்சியானதாகவும் இருக்கும், அதேவேளையில் குழப்பங்கள், பயங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். அவர்களுக்கு அதீத கற்பனையை நீக்கி இயல்பு வாழ்க்கையைப் புரியவைக்க வேண்டும். அவர்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் விஷயங்களை உண்மை என்றே நினைத்துக் கொண்டு பயப்படுவார்கள்.

அந்தப் பயத்தை நீக்க வேண்டும். தொலைக்காட்சி கதாநாயகன் போல் உடையணியலாம். ஆனால் அவர்களாகவே மாறிவிட முடியாது. அவர்கள் செய்யும் சாகசங்களைச் செய்ய முற்படும்போது அதன் விளைவுகளை எடுத்துச் சொல்ல வேண்டும். தொலைக்காட்சி சாகசங்கள் கற்பனை என்பதை அவர்கள் புரிந்துகொண்டு கதையை ரசிக்க வேண்டும்.

இன்றைய சூழலில் பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகள் தனியாக இருக்கின்றன. அம்மா, அப்பா இருவரும் அலுவலகம் சென்றுவிடுவதால் தனிமை வாழ்க்கை அவர்களுக்கு நிரந்தரமாகி விடுகிறது. விழுந்து விழுந்து சம்பாதித்தாலும் குழந்தைகளின் தேவை பெற்றோரின் அருகாமை, பாதுகாப்பு என்பதை உணர வேண்டும்.

குழந்தைகளோடு நேரம் செலவிடுவது ஒரு முக்கிய அம்சம். அவர்கள் தங்களின் விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, கவலை ஆகியவற்றை பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள். அப்போது அவர்களை நிராகரித்துவிட்டு தனிமையில் விட்டுச் செல்வது ஆபத்தானது. மகிழ்ச்சியான தருணங்களில் நீங்கள் அவர்களுக்காக உழைப்பதையும், பணம் சம்பாதிப்பதையும் எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள்.

தனிமையில் விட்டு செல்வது சூழ்நிலையின் நிர்ப்பந்தமே தவிர நிராகரிப்பு அல்ல என்பதைப் புரிய வையுங்கள். குழந்தைகளுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் அவர்களை மகிழ்ச்சியடைய செய்யும். பல பணிகளுக்கு இடையிலும் அவர்களை நாம் நேசிக்கிறோம் என்ற உண்மையை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

அது அவர்களை பலப்படுத்தும். நமது சிறிய வயது மலரும் நினைவுகளை அவர்களுக்குச் சொல்லி, எப்படி ஓர் உயர்ந்த வாழ்க்கையை அளித்திருக்கிறோம் என்று தெளிவுபடுத்த வேண்டும். அந்தக் கால குழந்தை வளர்ப்பு வேறு. ஒரு வீட்டில் பல பேர் இருப்பார்கள். குழந்தைகளுக்குத் தனிமை கிடையாது.

இப்போது இருக்கும் தனிமை குழந்தைகளின் விபரீத சிந்தனைகளை தூண்டக்கூடியதாக இருக்கும். அதை தடுக்க வேண்டிய பொறுப்பு இன்றைய பெற்றோர்களுக்கு உண்டு. குழந்தைகள் பகிர்ந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். அதை அம்மா, அப்பா இருவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

அது குழந்தைகளின் மகிழ்ச்சியைப் பெருக்கும். நம்முடைய வாழ்க்கைச் சூழல் மாறியிருக்கலாம். மனித உணர்வுகள் எப்போதும் மாறுவதில்லை. குழந்தைகளின் மனநிலை எப்போதும் நல்ல நட்பைத் தேடக் கூடியது. அவர்களோடு மனம்விட்டு பேசும்போதுதான் அவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகள் புலப்படும். அவற்றைத் திருத்த நாம் முயற்சிக்கலாம்.

பள்ளியில் மற்ற குழந்தைகளோடு எப்படிப் பழகுகிறார்கள் என்பதை தெரிந்து வழிநடத்தினால் நட்பு வட்டம் இனிமையாக மாறும். பள்ளிக்குச் சென்று அவர்களுடைய நண்பர்களைச் சந்தித்து ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுங்கள். எப்போதும் உங்கள் பணிச்சுமை, இயலாமையைச் சொல்லி குழந்தைகளிடம் புலம்பாதீர்கள்.

அது அவர்களை பலவீனமாக சிந்திக்க வைத்து விடும். எப்போதும் மகிழ்ச்சி மகிழ்ச்சி இது ஒன்றையே அவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். குடும்பம் என்பது குழந்தைகளை உள்ளடக்கியது. ஆரோக்கியமான உடலும் மனமும் கொண்ட குழந்தைகள்தான் நல்ல குடும்பத்துக்கு ஆதாரம். குழந்தை வளர்ப்பில் அப்பாவுக்கும் முக்கியப் பங்கு இருப்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

Related posts

Kamarajar History in Tamil | காமராஜர் வாழ்க்கை வரலாறு

nathan

சுவையான சத்தான மொச்சை சுண்டல்

nathan

பெண்களே ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா?

nathan

பச்சை பயறு மிளகு மசாலா

nathan

சூப்பரான கல்யாண வீட்டு சாம்பார் ரகசியம் இதுதான்!

nathan

இஞ்சி தயிர் பச்சடி

nathan

கம்பு வெஜிடபிள் கஞ்சி….

nathan

சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

nathan

சுவையான உருளைக்கிழங்கு தோசை

nathan