ஒவ்வொருவருக்கும் நல்ல அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அனைவருக்குமே இந்த பாக்கியம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், சிலர் தவறான தலைமுடி பராமரிப்பால், இருக்கும் முடியை இழந்து நிற்கின்றனர்.
குறிப்பாக கடைகளில் விற்கப்படும் தலைமுடி பராமரிப்பு பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவதால், தலைமுடியின் ஆரோக்கியம் அழிக்கப்படுகிறது. பலருக்கு ஷாம்புவை சரியான முறையில் பயன்படுத்த தெரிவதில்லை. இதனாலேயே தற்போது ஏராளமானோர் தலைமுடி கொட்டும் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
இக்கட்டுரையில் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்புவை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நீரில் அலசவும் தலைக்கு ஷாம்பு போடும் முன், தலைமுடியை நீரில் அலச வேண்டும். அதுவும் குறைந்தது 2 நிமிடம் நீரில் தலைமுடியை அலச வேண்டும். அதிலும் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலசுவதன் மூலம், மயிர்கால்கள் திறக்கப்பட்டு, அழுக்குகள் முழுமையாக வெளியேற உதவியாக இருக்கும்.
கண்டிஷனர் பயன்படுத்தவும் ஆம், ஷாம்பு போடும் முன் கண்டிஷனரை தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டும். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் நீளமான தலைமுடி இருப்பவர்கள் இப்படி சிறிது கண்டிஷனரைப் பயன்படுத்தும் போது, தலைமுடியின் முனைகள் வறட்சியடையாமல் தலைமுடி ஆரோக்கியமாகவும், மென்மையாகவும் இருக்கும்.
ஷாம்பு பயன்படுத்தவும் பின்பு தலைக்கு ஷாம்பு பயன்படுத்த வேண்டும். அதுவும் நீளமான தலைமுடியை கொண்டவர்களானால், இரண்டு பகுதிகளாகப் பிரித்து ஷாம்புவை தலைமுடியில் தடவி 1 நிமிடம் மசாஜ் செய்வது போல் மென்மையாக தேய்த்து, பின் நீரில் நன்கு அலச வேண்டும்.
2 முறை ஷாம்பு கூடாது தலைக்கு 2 முறை ஷாம்பு போட வேண்டாம். இதனால் இயற்கையாக தலையில் சுரக்கப்படும் எண்ணெய் முழுமையாக வெளியேற்றப்பட்டு, தலைமுடி வறண்டு பாழாகும். வேண்டுமெனில் தலையில் அதிகளவு எண்.ணெய் பசை இருந்தால், 2 முறை பயன்படுத்தலாம். மற்றபடி உபயோகிக்கக்கூடாது.
கண்டிஷனர் பயன்படுத்தவும் தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின், தலைமுடியில் உள்ள நீரை பிழிந்து வெளியேற்றிவிட்டு, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். அதுவும் அப்படி பயன்படுத்தும் கண்டிஷனர் ஸ்கால்ப்பில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அதுவே தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாழாக்கிவிடும்.
குளிர்ந்த நீரால் அலசவும் தலைக்கு குளித்து முடித்த இறுதியில் குளிர்ச்சியான நீரால் மறக்காமல் தலைமுடியை அலசுங்கள். இதனால் திறக்கப்பட்ட க்யூட்டிகிள் மூடப்பட்டு, தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.