இன்றைய அவசரமான வாழ்க்கை முறை மாற்றத்தினால் உங்களுடைய ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன் இன்னொரு விஷயமும் மிக அதிகமாக பாதிக்கப்படுகிறது. அதனைக் குறித்து நாம் தினமும் கவலைப்பட்டுக் கொண்டும் இருக்கிறோம்.
என்ன தெரியுமா? தலைமுடி. ஆம், தலை முடிப்பிரச்சனை தான் இன்றைக்கு தலையாய பிரச்சனையாக இருக்கிறது. சரியாக பரமாரிப்பு இல்லாதது, முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கொடுக்காமல் இருப்பது போன்றவை தான் அடிப்படை காரணமாக இருக்கிறது.
இன்றைக்கு முடியுதிர்வு பிரச்சனையை சந்திக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது எனுமளவுக்கு எல்லாருமே முடி சம்மந்தமாக எதாவது ஒரு புகாரை வாசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதற்கு தீர்வு எல்லாம் இல்லாமல் இல்லை. கண்டிப்பாக தீர்வு இருக்கிறது. முடியை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும். அதே சமயம் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் கொடுத்திட வேண்டும். நாம் சாப்பிடும் காய்களில் பீட்ரூட் பற்றி ஏற்கனவே எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். உடல் நலனுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று தெரியும் தானே… இப்போது பீட்ரூட்டை கொண்டு நம் தலைமுடிக்கு வலு சேர்க்கப்போகிறோம்.
இதற்கு முன்பாக ஹேர் டை அடிக்க நினைப்பவர்கள் மட்டும் பீட்ரூட் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் பீட்ரூட் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதனை எப்படி பயன்படுத்துவது? அதனை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
பீட்ரூட் மற்றும் தேங்காய் எண்ணெய் : பீட்ரூட் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு தலைமுழுவதும் இதனை தேய்த்திடுங்கள். பின்னர் தலையில் ஹேர் கேப் கொண்டு மூடிக் கொள்ளுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து கழுவிடலாம்.
பீட்ரூட்,கேரட் மற்றும் சர்க்கரை : பீட்ரூட் ஹேர் மாஸ்க் போடும் போதெல்லாம் அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெயையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தேங்காய் எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் இயற்கையாகவே பீட்ரூட் நிறம் நீண்ட நாட்கள் வைத்திருக்க உதவிடும். அரை கப் பீட்ரூட் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அதேயளவு கேரட் ஜூஸ் சேர்த்து இரண்டு ஸ்பூன் சர்க்கரை கலந்து சூடாக்குங்கள்.முழுவதுமாக சேரும் வரை கலக்குங்கள். பின்னர் அது ஓரளவு ஆறியதும், தலையில் அப்ளை செய்திடுங்கள்.
பீட்ரூட்,இஞ்சி மற்றும் ஆலிவ் ஆயில் : ஒரு கப் பீட்ரூட் ஜூஸ்,இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு இஞ்சி மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு முறை அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை தலையில் ஹேர் மாஸ்க்காக போடுங்கள். தலையில் சேர்த்த பிறகு மசாஜ் செய்திட வேண்டும்.தலையின் வேர்கால்களுக்கு படுமளவுக்கு மசாஜ் செய்வது அவசியம். ஒரு மணி நேரம் கழித்து கழுவிடலாம்.
பீட்ரூட்,ரோஸ் வாட்டர்,ப்ளாக் டீ : ஒரு கப் பீட்ரூட் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். ஃபிரஸ்ஸாக தயாரிக்கப்பட்ட ப்ளாக் டீ சேர்த்திடுங்கள். கவனம் ப்ளாக் டீ ஃப்ரஸ்ஸாக போட்டதையே சேர்க்க வேண்டும். பழையதை சேர்க்க வேண்டாம். பின்னர் ஒரு ஸ்பூன் அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து தலையில் தேய்த்திடுங்கள். இதனை வாரம் ஒரு முறை செய்திடலாம்.
கவனிக்க வேண்டியவை : இந்த பீட்ரூட் ஹேர் மாஸ்க் செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டியவை எல்லாம் என்னென்ன தெரியுமா? பீட்ரூட் சாறு எடுத்து சூடாக்கும் போது அதிக சூட்டில் சூடாக்காதீர்கள். மிதமான சூட்டில் லேசாக சூடாக்கினால் மட்டுமே போதுமானது. இந்த மாஸ்க் போட்டதும் கண்டிப்பாக ஹேர் கவர் போட வேண்டும். அப்போது தான் உங்கள் உடலில் இருக்கக்கூடிய சூடு சாறில் இருக்கும் குளிர்ச்சியை கிரகித்துக் கொள்ள முடியும். அதோடு அந்த நிறமும் இறங்கும். பீட்ரூட் மாஸ்க் போடும் போது உங்கள் சருமத்தில் படும் என்ற பயம் இருந்தால் காதுக்கு பின்புறம், கழுத்துப்பகுதி ஆகிய பகுதிகளில் வாஸ்லின் தடவிக் கொள்ளுங்கள். இப்படிச்செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது தெரியுமா?
முடியுதிர்வு : இது முடியுதிர்வு பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்திடும். இதில் மக்னீசியம்,பொட்டாசியம், மற்றும் ஐயர்ன் ஆகியவை நிரம்பியிருப்பதால் அவை முடிக்கு ஊட்டமளிக்கிறது. நீங்கள் பீட்ரூட்டை ஹேர் மாஸ்க்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை ஜூஸாக செய்து குடிக்கலாம், சாலட் செய்து சாப்பிடலாம். அதோடு இந்த பீட்ரூட் ஜூஸ் நம் ஹார்மோன் அளவை அதிகரிக்கிறது. இதனை தலையில் தடவுவதால் தலையின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதனால் தலையில் இருக்கும் முடியின் வேர் கால்களை வலுவாக்குகிறது இதனால் முடியுதிர்வு தவிர்க்கப்படும்.
வழுக்கைத் தலை : இன்றைக்கு வழுக்கைத் தலை தான் முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. அதில் விட்டமின் சி,பி6,ஃபோலேட் மற்றும் பீடெயின் ஆகியவை இருக்கிறது. இவையெல்லாம் முடியின் வளர்ச்சிக்கு ஆதரமாக விளங்குகின்றன. அதோடு வழுக்கைத் தலை இருந்தால் அவர்களுக்கு இது மிகச்சிறந்த தீர்வாக அமைந்திடும்.
ஹேர் டை : இன்றைக்கு இளைஞர்கள் பலருக்கும் மிகவும் இளவயதிலேயே இளநரை வர ஆரம்பித்து விட்டது. இதில் எந்த கெமிக்கலும் சேர்க்கப்படுவதில்லை என்பதால் நீங்கள் பயமின்றி பயன்படுத்தலாம். அதோடு இதனை எளிதாக வீட்டிலேயே நீங்கள் தயாரித்து விடலாம். இது முடிக்க வண்ணம் ஏற்றுவதுடன் ஆரோக்கியத்தையும் கொடுப்பதால் கூந்தல் ஆரோக்கியத்துடன் வளரும்.
ஈரப்பதம் : முடிக்கும் தலைக்கும் தேவையான ஈரப்பதம் கிடைக்காமல் வரண்டு விடுவதால் தான் முடியுதிர்வு பிரச்சனையே ஆரம்பிக்கிறது. இந்த பீட்ரூட் மாஸ்க்கை நாம் அன்றாடம் பயன்படுத்துவதால் முடிக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்திடும். இதிலிருக்கும் பீடலின் மற்றும் கரோடினாய்டு முடிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைந்திடுகிறது.
பொடுகு : தலையை சரியாக பராமரிக்காவிட்டால் பொடுகுப்பிரச்சனை தலை தூக்கும். விரைவில் அது தலை முழுவதும் பரவி அரிப்பை ஏற்படுத்திடும். அந்த அரிப்புக்கு தீர்வளிப்பதுடன் பொடுகையும் குறைத்திடும். பீட்ரூட் ஊற வைத்த தண்ணீரைக் கொண்டு முடியை கழுவி வந்தால் அது நல்ல பலனைக் கொடுக்கும். பீட்ரூட்டை பாதியாக நறுக்கி கொதிக்கும் நீரில் போடுங்கள். சில மணி நேரம் கழித்து குளிர்ந்ததும் தலைக்கு ஊற்றி குளித்திடுங்கள்.
பேன்களை கொல்லும் : இந்த பீட்ரூட் சாறு பேன் மற்றும் ஈறுகளை கொல்லவும் பயன்படுகிறது. பீட்ரூட் சாறுடன் இரண்டு ஸ்பூன் வேப்ப எண்ணெயை கலந்து தலைக்குத் தேய்த்திடுங்கள். அரை மணி நேரம் காத்திருந்து தலைக்குளிக்கலாம். இதனை வாரம் ஒரு முறை செய்திடுங்கள்.
ஹேர் கண்டிஷ்னர் : கெமிக்கல் சேர்க்காத உடனடி ஹேர் கண்டிஷ்னர் உங்களுக்கு கிடைத்திடும். காபி டிகாஷனுடன் மூன்று டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸ் கலந்து தலைக்கு பயன்படுத்துங்கள் அரை மணி நேரம் ஊறியதும் கழுவிடலாம். இது தலைமுடிக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படும். இது நுனிப்பிளவையும் போக்கிடும்.
அடர்ந்த கூந்தல் : பீட்ரூட்டில் 11 சதவீதம் விட்டமின் சி மற்றும் ஆறு சதவீதம் இரும்புச் சத்து இருக்கிறது. நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு இவை இரண்டும் மிகவும் அவசியமான ஒன்றாகும். முட்டையின் வெள்ளைக்கருவுடன் பீட்ரூட் ஜூஸ் கலந்து ஹேர் மாஸ்க்காக அப்ளை செய்திடுங்கள்.