இவ்வுலகத்தில் அழகை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. மேலும் அழகாய் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அனைவரது மனதிலும் இருக்கும். ஆகவே முகத்திற்கு அழகு தருவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அழகான கண்கள் முகத்திற்கு இன்னும் வசீகரத்தைத் தருகிறது. ஒரு சிலருக்கு முகம் அழகாக இருந்தாலும் கண்கள் பொலிவோடு இல்லாமல், சோர்ந்து காணப்படும். இவற்றைப் போக்கி வசீகரமான கண்களைப் பெற சில சாதாரண செயல்களைப் பின்பற்றினாலே போதும். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
கவர்ச்சியான கண் அழகைப் பெற…
1. கண் அழகாக பெரிதும் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்யும் காய்கனிகளான கேரட், ஆரஞ்சு, பால், திராட்சை, முட்டை, முன் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் கண்கள் ஆரோக்கியமுடனும், அழகுடனும் இருக்கும்.
2. இரவில் படுக்கும் முன், கண்களுக்கு மை தீட்டும் பழக்கம் உள்ளவர்கள் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். இல்லாவிட்டால் கண் மையில் இருக்கும் இரசாயப் பொருட்கள் கண்களில் தங்கி கெடுதலை ஏற்படுத்தும்.
3. வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது, மறக்காமல் முகத்தையும், கண்களையும் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். அப்படி செய்தால் முகத்தில் மற்றும் கண்களில் இருக்கும் தூசிகள் வெளியேறி கண்கள் பாதுகாப்புடன் இருக்கும்.
4. கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையம் நீங்க, வெள்ளரிக்காயின் சதைப்பகுதியை எடுத்து கண்களை மூடிக் கொண்டு வைத்து, 10 நிமிடம் கழித்து எடுத்து விடவும். இதனை தினமும் செய்து வந்தால், கண்களுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு சோர்வு இல்லாமல், கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். மேலும் கருவளையமும் நீங்கும்.
5. கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், கண்கள் சோர்வடையும் நேரத்தில் 10 நிமிடம் கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்து, பின் வேலை செய்தால் கண்கள் புத்துணர்ச்சிப் பெறும்.
பொதுவாக பெண்களுக்கு முகப் பொலிவை கண்கள் தான் காட்டும். ஆகவே அத்தகைய கண்களை அலட்சியமாக எண்ணாமல், சரியான முறையில் கண்களை பராமரித்தால் முக அழகானது இன்னும் மெருகேறும்.