முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு மிக பெரிய பங்கு உண்டு. அதுவும் நீளமான கண் ரப்பைகள்(கண் இமை முடிகள்) பார்ப்பவரை மயக்க கூடியதாக இருக்கும். இயற்கையிலேயே சிலருக்கு நீண்ட கண் ரப்பைகள் இருக்கும். அப்படி இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது பியூட்டி பார்லர் . ஒரு செயற்கை பசை கொண்டு கண்களின் ரப்பைகளை நீளமாக்குவார்கள்.
இந்த செயற்கை கண் ரப்பைகளை நீண்ட நேரம் கண்களில் வைத்திருக்க கூடாது. அடிக்கடி பயன்படுத்தவும் கூடாது. இவை கண்களை பாதிக்கும் என்று ஒப்பனை நிபுணர் நந்திதா டாஸ் கூறுகிறார். செயற்கை கண் ரப்பைகள் கரு விழியில் மற்றும் கண் இமைகளில் தொற்றுகளை ஏற்படுத்தலாம். கண்களை சிரமத்திற்கு உள்ளாக்கலாம்.
அழகியல் நிபுணரால் செயற்கை ரப்பையை உருவாக்க பயன்படுத்த கூடிய பசை, ஒவ்வாமையை உண்டாக்கலாம். பார்மல்டீஹைடு என்ற ஒரு இரசாயனம் கலக்காத பசையா என்பதை உறுதி செய்து விட்டு பயன்படுத்தலாம். இந்த ரசாயன பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவை எரிச்சல் , வீக்கம் போன்ற விதத்தில் வெளிப்பட்டு கட்டிகள் உண்டாகலாம்.
தொற்றுகளும் ஒவ்வாமைகளும் ஒரு புறம் இருக்க , நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ரப்பைகள் உதிர தொடங்கும். ரப்பைகளை நீளமாக்க பயன்படுத்தப்படும் பசையால், இயற்கையான ரப்பையின் வேர்க்கால்கள் பலவீனமாகி பாரம் தாங்காமல் உடைய நேரிடும். ஆகவே செயற்கை ரப்பைகளை பயன்படுத்துவதற்கு முன் நிறைய யோசித்து பிறகு பயன்படுத்துங்கள். ஒரு முறை ரப்பைகளை இழக்க நேரிட்டால் பின்பு அவை வளர்வதற்கு நீண்ட நாட்கள் ஆகும்.
கண்களில் செயற்கை ரப்பைகளை பொருத்தியவுடன் எரிச்சல் , வலி அல்லது கண்களில் சிவப்பு நிறம் தோன்றுவது போன்ற அறிகுறிகள் தென்படுகிறதா என்று கவனியுங்கள். அப்படி தெரிந்தால் உடனடியாக செயற்கை ரப்பைகளை நீக்கி விடுங்கள் . அப்படியே விட்டால், நிலைமை மோசமாகி விடும்.
முடிந்த வரை இந்த செயற்கை ரப்பைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அப்படி பயன்படுத்தும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதனை விட சிறந்த தீர்வு, உங்கள் இயற்கையான கண் ரப்பைகளை நீளமாக வளர வைப்பது. இதற்கு தினமும் ரப்பைகளில் ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தடவி ரப்பைகளை வளர செய்யலாம்