வெயில் அதிகமாகியுள்ள வேளையில் நம் உடலில் ஆடை மறைக்காத இடங்கள் சூரியனின் புறஊதா கதிர்களால் கருமையடையும். அப்படி ஆகாமல் இருக்கவே நாம் சன்ஸ்க்ரீன் உபயோகிக்கிறோம். நம் சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்க்ரீன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மார்க்கெட்டில் கிடைக்கும் கண்டதையும் வாங்கி போடக்கூடாது.
அது நம் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். என்னதான் நாம் சன்ஸ்க்ரீன், லோஷன் போன்றவை உபயோகித்தாலும் இயற்கை நமக்கு அளித்த பொருட்களுக்கு நிகராக முடியாது. அப்படியான இயற்கை பொருட்களை பயன்படுத்தி நம் சருமத்தில் படர்ந்திருக்கும் கருமையை அகற்ற முடியும். தேவையான பொருட்களையும் செய்முறையையும் பார்ப்போம்.
1. கடலை மாவு, கற்றாழை, தயிர்ஒரு பௌலில் இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், ஒன்று அல்லது ஒன்றரை ஸ்பூன் தயிர் கலந்து ஒரு ஸ்பூன் கற்றாழை சதையையும் சேர்க்க வேண்டும். இம்மூன்றையும் நன்கு கலந்து முகம், கை, காலில் பூசி காய்ந்தபிறகு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இதை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வந்தால் கருமை நிறம் மங்கி விடும்.
2. வெள்ளரி சாறு, எலுமிச்சைச் சாறு, ரோஸ் வாட்டர் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் வெள்ளரி சாறுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, மேலும் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து கால், கை, முதுகு, முகத்திற்கு தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள்வரை வைத்திருந்து பின் கழுவலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்து வரலாம். கருமை நிறம் மெல்ல குறையும்.
3. தக்காளி, தயிர், எலுமிச்சைச் சாறு மிக்ஸியில் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட வேண்டும். அதோடு ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அரைத்த விழுதை தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து, உடலில் கருமை நிறம் உள்ள இடங்களில் போட வேண்டும். வாரம் மூன்று முறை இதை செய்து வந்தால் சருமம் பளிச்சிடும்.