அந்தக் காலத்துப் பெண்கள், தினமும் தலைக்குத் தேங்காய் எண்ணெய் வைக்கத் தவறியதில்லை. அதன் மூலம் அவர்களது கூந்தலை வறண்டு போகாமல் காத்தார்கள். இன்று தலைக்கு எண்ணெய் வைப்பது என்பது ஏதோ செய்யக்கூடாத விஷயம் என்கிற மாதிரி ஆகிவிட்டது. இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு கூந்தலில் எண்ணெய் பசையே தெரியக்கூடாது. அதே நேரம் எந்த ஹேர் ஸ்டைல் செய்தாலும் கூந்தல் அதற்கு வளைந்து கொடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
இளம் தேங்காயிலிருந்து தயாரிக்கப்படுகிற தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்பியது மூட நம்பிக்கையாக இருந்தாலும், அப்படி எண்ணெய் வைப்பதன் மூலம் அவர்களது கூந்தலின் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டது. தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம், மண்டைப்பகுதி வறண்டு போகாமல் காக்கப்படும். நுனிப் பிளவு இருக்காது. கூந்தல் தேங்காய் நார் போல முரடாக மாறாது. பிரச்னைகள் இல்லாத கூந்தல் இயற்கையாகவே ஆரோக்கியமாக வளரும்தானே?
கூந்தல் என்பது ஒரு வருடத்துக்கு 6 இன்ச் அளவு வளரும். அது வறண்டு, உடைந்து, உதிர்ந்து கொண்டிருந்தால் எப்படி வளரும்? எனவே, கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ, பாதாம் எண்ணெயோ உபயோகித்து வறண்டு போகாமல் காக்கும்பட்சத்தில் உங்கள் கூந்தலும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அரைத்த வெந்தயத்தைத் தலைக்குத் தடவிக் குளிப்பதன் மூலம் நீளமான முடியைப் பெறலாம்.
கூந்தலுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டியதும் அவசியம். எந்நேரமும் கூந்தலைக் கோதிக் கொண்டும், வாரிக் கொண்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் போது பின்னல் போட்டு தொந்தரவு செய்யாமல் விட்டுவிட வேண்டும்.
கூந்தல் வளர்ச்சியில் உணவுக்கு மிக முக்கிய பங்குண்டு. கறிவேப்பிலையும் கீரைகளும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். தயிரில் ஊற வைத்த வெந்தயமும் கூந்தலுக்கு நல்லது செய்யும்.நட்ஸ், பேரீச்சம்பழம், மீன் மற்றும் வைட்டமின் பி அதிகமுள்ள உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நீளமான கூந்தலுக்கு வழி செய்யும்.
ஷாம்பு வேண்டாம்… சீயக்காய்க்கு மாறுங்கள்!
சீயக்காய் பொடி கூந்தலை இயற்கையான முறையில் சுத்தம் செய்து, பாதுகாக்கும். பொடுகும் இளநரையும் வராமல் தடுக்கும். ஷாம்புவில் உள்ளது போல எஸ்.எல்.எஸ், பாரபென், சிலிக்கான் என எந்த கெமிக்கலும் அதில் இல்லை. கெமிக்கல் இல்லாத பொருட்கள் நல்லது செய்கின்றனவோ இல்லையோ, கெடுதலை ஏற்படுத்தாது என்பது நிச்சயம். எனவே, முழுக்க சீயக்காய்க்கு மாற முடியாதவர்கள், அவ்வப்போது ஒரு மாறுதலுக்கு சீயக்காய் குளியலை முயற்சி செய்யலாம். மெல்ல மெல்ல மாறலாம்.