20 வயதை அடைந்து விட்டாலே பெண்களுக்கு திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய குறையாக இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.
இந்திய பெண்களும் தங்களால் முடிந்த வரை திருமணத்தை தள்ளி போடவே விருப்பப்படுகிறார்கள். திருமணம் என்றால் ஏன் இன்றைய இளம் இந்திய பெண்கள் பயம் கொள்கிறார்கள் என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.
• தனியாக இருக்கும் வரை தான் தாங்கள் நினைத்ததை எல்லாம் சுதந்திரமாக பெண்களால் செய்ய முடியும். திருமணத்திற்கு பிறகு இந்த நிலை அடியோடு மாறி விடும். தங்கள் கணவன் அல்லது மாமனார் மாமியார் என்ன சொல்வார்களோ என்ற எண்ணத்திலேயே அவர்களின் பாதி திட்டங்கள் கனவாகவே போய் விடும். திருமணத்தைப் பற்றி பயம் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமையும்.
• பெண்களில் பல பேருக்கும் மாற்றத்தை உடனடியாக ஏற்றுக்கொள்வது அவ்வளவு சுலபமல்ல. அதனால் தான் வீடு (சில நேரம் ஊர் அல்லது நாடு), குடும்பம், மொத்த வாழ்க்கை முறையில் ஏற்பட போகும் மாற்றத்தை எண்ணி பெண்களுக்கு தலைவலியே வந்து விடும். திருமணத்தை எண்ணி பயப்பட இந்த ஒரு காரணம் போதாதா?
• பெண்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரங்களில் ஒன்று – தன் தாயிடம் இருந்து தனக்கு கிடைக்கும் செல்லமும் அரவணைப்பும் தான். அவர்களுக்கு கிடைக்கும் இந்த அன்பு தான் அவர்களுக்கு திருமணத்தின் மீது பயத்தையே ஏற்படுத்தும். எங்கே இந்த அன்பும் செல்லமும் திருமணத்திற்கு பிறகு கிடைக்காமல் போய் விடுமோ என்ற பயமே. “என்ன போல உன் மாமியார் நீ செய்யும் எல்லாவற்றையும் பொறுத்து கொள்ள மாட்டாங்க” என அடிக்கடி ஒரு தாய் கூறுவதே போதும், அவர்களின் பயம் அதிகரிக்க.
• திருமணம் முடிந்து விட்டால் அது தங்களின் குறிக்கோள்களுக்கும், தொழில் ரீதியான திட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது போலாகும் என தான் பல பெண்களும் நினைக்கின்றனர். தங்கள் ஊர் அல்லது நாட்டை விட்டு செல்ல வேண்டிய பெண்கள் இந்த நிலைக்கு ஓரளவிற்கு தள்ளப்படுவது உண்மையே. அதற்கு காரணம் புதிய இடத்தில் அவர்களுக்கு புதிய பணி சுலபமாக கிடைக்குமா என சொல்ல முடியாது. கஷ்டப்பட்டு பார்த்து வந்த வேலையை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக விட்டு விட யாருக்கு தான் மனம் வரும்.