பெண்களின் கூந்தலில் இயற்கையாகவே மனம் வீச காரணம் என்ன என்று பழங்காலத்தில் இருந்து இருந்து வரும் கேள்விக்கு இன்னும் பதில் கிடைத்தவாறில்லை. கூந்தலை பராமரிப்பதில் மன்னர் காலத்தில் மக்கள் சிறந்து விளங்கினர்.
அவர்களுக்கு அந்த காலத்தில் எந்த விதமான கூந்தல் பிரச்சனையும் வரவில்லை. இயற்கையான அடர்த்தியான கூந்தலை மகாராணிகளும் மக்களும் கொண்டிருந்தனர். அதற்காக அவர்கள் பயன்படுத்தியதெல்லாம் இயற்கை பொருட்கள் தான்.
அவர்கள் என்னென்ன இயற்கை பொருட்களை பயன்படுத்தினார்கள் அவர்களின் கார்மேக கூந்தலுக்கு என்ன காரணம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
நெல்லிச்சாறு:
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, நெல்லிச்சாறு கூந்தலுக்கு அனைத்து விதமான ஆரோக்கிய நன்மைகளையும் வேரிலிருந்து நுணி வரை தருகிறது.
நெல்லிக்காயை தேங்காய் எண்ணெய்யில் போட்டு கொதிக்க வைத்து அந்த எண்ணெய்யை தலைக்கு தடவி இரவு முழுவதும் காத்திருந்து பின்னர் தலைமுடியை அலசினால் முடிக்கு கண்ணாடி போன்ற பிரகாசம் கிடைப்பதோடு முடியும் ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
மனதை இழுக்கும் வாசனை
இன்று நாம் முடிக்கு வாசனையை தர கெமிக்கல் பொருட்களை உபயோகிக்கிறோம். ஆனால் இந்த நெல்லிக்காய் எண்ணெய்யை தலையில் தேய்ப்பதால் முடிக்கு நல்ல வாசனை கிடைக்கிறது. இதை முகலாய காலத்தில் அக்பர் எழுதியுள்ளார்.
மல்லிகை, லெவெண்டர்
மல்லிகைப்பூ மற்றும் லெவெண்டர் போன்ற பூக்களை நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய்யில் போட்டு விசேஷ தினங்களில் காய்ச்சி தேய்த்தனர். இதனால் முடிக்கு இயற்கையாகவே நல்ல வாசனை கிடைத்தது.
ஆயில் போடும் முறை
தலைக்கு கை நிறைய எண்ணெய்யை அவர்கள் தேய்த்தனர். தலைக்கு இயற்கை எண்ணெய்களை தேய்தனர். உடைந்த முடிகளில் நன்றாக எண்ணெய்யை தேய்த்து மசாஜ் செய்து முடியை நன்றாக வாரி பின்னர் ஒரு கெட்டியான துணியை தலைக்கு கட்டிக்கொண்டனர்.
ஆனால் அவர்கள் உடைந்த முடிகளை அழுத்தி மசாஜ் செய்யவில்லை. அழுத்தி தேய்த்தால் மேலும் முடிகள் உடையக்கூடும். இதனால் முடி அடர்த்தியாக வளர்ந்ததுடன், வெடிப்புகள் ஏதும் இன்றியும் வளர்ந்தது. பார்க்கவும் வசிகரமான தோற்றத்தை கொடுத்தது.
ராஜ குளியல்
அந்த காலத்தில் முடியை நன்றாக அலசுவதற்கு குளிப்பதற்கு சற்று நேரம் முன்னதாகவே சீகக்காய் மற்றும் பூந்திக்கொட்டை ஆகிய இரண்டும் சூடான நீரில் கொதிக்க வைக்கப்பட்டது. முடிக்கு கூடுதல் நலன் சேர்க்க நெல்லிக்காயும் அதனுடன் சேர்க்கப்பட்டது.
எப்படி பயன்படுத்துவது:
சீகக்காய் மற்றும் பூந்திக்கொட்டையை சூடான நீரில் இட்டு காய்ச்சி அது ஆறியதும் தலைக்கு தேய்க்க வேண்டும்.
சீப்பை எப்படி தேர்ந்தெடுப்பது
அகன்ற பற்கள் கொண்ட சீப்புகளையே அவர்கள் பயன்படுத்தினர். இந்த சீப்புகள் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. அகன்ற பற்கள் கொண்ட சீப்பு என்பதால் முடியில் உள்ள சிக்குகளை எளிமையாக நீங்க உதவியது.