மாசு மருவற்ற முகம்… பளிங்கு போன்ற முகம்… என பெருமையாகச் சொல்லிக்கொள்வதில்தான் எத்தனை ஆனந்தம். முகத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். நமது முகத்தில் சிறிதாக பரு வந்தாலே அதை கிள்ளி அறுவடை செய்து விடுவோம்.. ஆனால், முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை அவ்வளவு சுலபமாகப் போக்க முடியாமல் கவலைப்படுகிறீர்களா..? எளிதாக வீட்டில் இருந்தபடியே கரும்புள்ளிகளைப் போக்கலாம்.. பார்ப்போமா…
கரும்புள்ளி
பெண்ட்டோனைட் கிளே:
பெண்ட்டோனைட் கிளே என்பது எரிமலை சாம்பலில் இருந்து உருவாக்கப்படும் ஒருவகைக் களிமண் ஆகும். அந்தக் களிமண்ணில் அதிகப்படியான மினரல்ஸ் இருப்பதால் முகத்துக்கு எனர்ஜியைக் கொடுக்கும். இந்த வகைக் களிமண்ணுடன் சிறிதளவு தண்ணீரும், ஆப்பிள் சிடர் வினிகரும் ஊற்றிக் கலக்க வேண்டும். அந்தக் கலவையை முகத்தில் பூசி பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை காய வைக்க வேண்டும். பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
முட்டை வெள்ளைக்கரு:முட்டை வெள்ளைக்கரு
முட்டையில் உள்ள வெள்ளைக்கரு சருமத்துக்கு பல்வேறு நன்மைகளை செய்யக் கூடியவை. இவை இதற்கு முன்னால் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகளைக் குணமாக்குவதோடு அடுத்து இவ்வகைக் கரும்புள்ளிகள் ஏற்படாமல் இருக்கவும் உதவியாக இருக்கும். முதலில் முட்டையிலிருந்து வெள்ளைக்கருவை தனியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனைக் கெட்டியாக கலக்கிக் கொண்டு முகத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பூச வேண்டும். பின்னர் சுத்தமான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும்.
பாலும் தேனும் கலந்த கலவை:
பாலும், தேனும் முகத்துக்குப் பொலிவு தரக்கூடியவை. தேனில் ஆன்டிபாக்டீரியலும், பாலில் லாக்டிக் அமிலமும் உள்ளது. ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் பாலைச் சேர்த்துக் கலந்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள்வரை சூடுபடுத்த வேண்டும். அதை கரும்புள்ளிகளின் மேல் பூச வேண்டும். அது காய்ந்ததும் காட்டன் துணிகளை வைத்து துடைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவ கரும்புள்ளிகள் எளிதில் மறையும்.
பாலும் தேனும்
பேக்கிங் சோடா – தண்ணீர் கலந்த கலவை:
கரும்புள்ளிகளை குணமாக்குவதில் பேக்கிங் சோடாவுக்கு முக்கிய பங்கு உண்டு. பேக்கிங் சோடாவை சிறிதளவு தண்ணீருடன் கெட்டியாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். சருமத்தில் அந்த பேஸ்டை வைத்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். காய்ந்த பின்னர் முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும்.
நீராவிக் குளியல்
நீராவி:
நீராவி நேரடியாக கரும்புள்ளிளை நீக்காது. ஆனால் கரும்புள்ளிகள் தோன்றுவதைத் தடுக்கும் ஆற்றல் நீராவிக்கு உண்டு. பாத்திரத்தில் சிறிதளவு நீரை ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை முகத்தில் ஆவி பிடிக்க வேண்டும். ஆனால் முகத்தில் எரிச்சல் ஏற்படும் அளவுக்கு ஆவி பிடிக்கக் கூடாது. இறுதியாக வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி வட்டு சுத்தமான துண்டில் முகத்தை துடைக்க வேண்டும்.