முகப்பரு, கரும்புள்ளிகளைப் போன்றே ஏராளமானோர் அவஸ்தைப்படும் பிரச்சனை தான், முகத்தில் அசிங்கமாக மேடு பள்ளங்கள் இருப்பது. இதனால் நிறைய பேர் மேக்கப் மூலம் அந்த அசிங்கமான சருமத்துளைகளை மறைத்து வருகின்றனர். எத்தனை நாள் தான் இப்படி மேக்கப் மூலம் முகத்தில் இருக்கும் விரிவடைந்த சருமத் துளைகளை மறைத்துக் கொண்டிருப்பீர்கள்.
இதற்கு என்று ஒரு நிரந்தர தீர்வு இல்லையா என்று பலரும் வருத்தப்படுவதுண்டு. அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் இக்கட்டுரையில் முகத்தில் இருக்கும் அசிங்கமான மேடு பள்ளங்களை மறைக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வழி #1 முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத்துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.
வழி #2 தக்காளியை அரைத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, முகத்தைக் கழுவ வேண்டும். இதனாலும் முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் மறையும்.
வழி #3 2 டேபிள் ஸ்பூன் அன்னாசிப் பழச்சாற்றுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஒரு சுத்தமான காட்டன் துணியை அக்கலவையில் ஊற வைத்து, பின் அந்த துணியை முகத்தில் விரித்து 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
வழி #4 இரவில் படுக்கும் முன் சிறிது பாதாமை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
வழி #5 ஆப்பிள் சீடர் வினிகரை சரிசம அளவிலான நீரில் கலந்து, ஒரு பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி, முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.