ஃபேன்சி பொருட்களை வாங்க நம்மில் பலருக்கு கை குறுகுறுக்கும். குறிப்பாக புதுமையாகவும் பல்வேறு விதங்களிலும் உள்ள பெட்டி அல்லது பேக்குகளில் கிடைக்கும்போது. சில நேரங்களில் பெண்களாகிய நமக்கு அழகான பொருட்களைப் பார்க்கும்போது ஏற்படும் ஆவல் தவிர்க்க முடியாதது.
இதில் சில பொருட்களை உங்களிடம் இயற்கையான தீர்வுகள் இருந்தால் தவிர்க்க முடியும். எனவே அடுத்த முறை நீங்கள் அழகாக பேக் செய்யப்பட்ட பொருட்களைக் கண்டால் இந்த பட்டியலை நினைவில் கொள்வதுடன் நீங்கள் செய்யப்போகும் செலவினையும் எண்ணிப்பார்த்து இதுபோன்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள்.
உண்மையிலேயே பணத்தை வீணடிக்கும் பொருட்களின் இந்த பட்டியல் இதோ உங்களுக்காக. இந்த பொருட்களுக்குப் பதிலாக நீங்கள் இயற்கை பொருட்களை பயன்படுத்தமுடியும்.
லிப் ஸ்க்ரப்: பல்வேறு ஃப்ளேவர்களில் கிடைக்கும் பல விதமான ஆர்வமூட்டக்கூடிய லிப் ஸ்க்ரப்களை நாம் சந்தைகளில் பார்க்க முடிகிறது. பபிள்கம் மற்றும் ராஸ்ப்பெர்ரி போன்ற ஃப்ளேவர்களில் கிடைக்கும் இவை உண்மையிலேயே பார்க்க ஆவலைத் தூண்டக்கூடியவைதான். ஆனால் இந்த லிப் ஸ்க்ரப்பை வீட்டிலேயே சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டு செய்ய முடியும் என்று தெரியுமா. இது கடைகளில் வாங்கப்படும் லிப் ஸ்க்ரப்பிற்கு எந்தவிதத்திலும் குறையாமல் செயலாற்றும்.
டோனர்: முகத்தை கழுவிய பிறகு முகச் சருமத்தின் பிஎச் அளவை திரும்பப் பெற உண்மையிலேயே டோனர் அவசியம். ஆனால் இதை விலை கொடுத்துதான் வாங்கவேண்டுமா? இதற்கு பதிலாக நீங்கள் ரோஸ்வாட்டரை பயன்படுத்தலாமே? இது டோனர் செய்யும் அதே வேலையை மிகக் குறைந்த செலவில் செய்யும்.
லிப் பாம்: இது உண்மையிலேயே நம்முடைய நிறைய காசை கரியாக்கும் ஒரு பொருள் எனலாம். பல்வேறு வண்ணம் மற்றும் ஃப்ளேவர்களில் கிடைக்கும் இவை ஆவலைத் தரக்கூடியவை. ஆனால் இதற்குப் பதிலாக பெட்ரோலியம் ஜெல்லி, தேங்காய் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தமுடியும். இவை லிப் பாம் தரும் அதே பலன்களைத் தரும்.
பாடி பட்டர் பாடி பட்டர் எனப்படும் இந்த அழகுப் பொருட்கள், உங்களுக்கு மாயிஸ்சரைசர்களைவிட அதிக ஈரப்பதம் தரக்கூடியவை. ஆனால் இதற்கு பதிலாக நீங்கள் பயன்படுத்தக் கூடிய இயற்கை தீர்வு கோகோ பட்டர் ஆகும். இது மிகவும் விலை குறைந்ததும் அதிக அளவில் கிடைக்கக் கூடியவையும் ஆகும்.
மேக்கப் ரிமூவர்: உங்கள் மேக்கப்பை நாளின் இறுதியில் அகற்றவேண்டியது இன்றியமையாத ஒன்று. ஆனால் இதற்கு மேக்கப் ரிமூவர்கள் தேவையா? நீங்கள் இதற்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சிறிய பஞ்சுருண்டைகளைக் கொண்டு மேக்கப்பை கலைக்க முடியும்.
ஷேவிங் க்ரீம்: உங்கள் உடம்பில் நீங்கள் ஷேவ் செய்ய விரும்பினால் நீங்கள் தனியாக ஒரு ஷேவிங் கிரீமை வாங்கவேண்டாம். உங்களுடைய ஷவர் ஜெல் அல்லது குளியல் சோப்பை இதற்குப் பயன்படுத்தலாம். மேலும் சிலர் பேபி ஆயிலைப் பயன்படுத்தி ஷேவிங் செய்யமுடியும் என உறுதியாகக் கூறுகின்றனர்.
ஆன்டி-ஸ்ட்ரெச் மார்க் க்ரீம்: கடைகளில் கிடைக்கும் இவை உண்மையில் அதிக பலன் தருவதில்லை. ஏனென்றால் ஸ்ட்ரெச் மார்க் பிரச்சனைகளை போக்க வழிகள் எதுவும் இல்லை. அவை காலப் போக்கில் மங்கிவிடலாமே தவிர மறைந்துவிடுவதில்லை. இதற்குப் பதிலாக நீங்கள் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.