தினசரி வாழ்க்கையில் முடி உதிர்தல் என்பது ஆண், பெண் என நாம் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னை. சாதாரண கூந்தல், வறண்ட கூந்தல் என பலவகையாக உள்ளது. இதில் முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்த ஐந்து காரணங்கள் முக்கியமானவை….
ஜீன்:
பெரும்பாலும் முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அனைவராலும் சொல்லப்படுகிற ஒரு காரணமாக இருந்தாலும் தாய், தந்தை மரபு வழியிலும் முடி உதிர்தல் பிரச்னை தொடரும்.
வயது முதிர்ச்சி:
வயது முதிர்ச்சியால் முடி உதிர்வதை தடுக்க இயலாது. வயதாக வயதாக முடி உதிர்தல் என்பது தவிர்க்க இயலாத ஒன்று. ஆண், பெண் இருபாலருக்கும் வயதாக வயதாக முடி உதிர்தல் மற்றும் முடி வலிமை இழத்தல் என்பது இயல்பான ஒன்று. 30 வயதிற்கு மேல் முடி வளர்ச்சி குறைவாகவே உள்ளது. அது மட்டுமல்லாமல் முடியின் அடர்த்தியும் குறையத் தொடங்குகிறது.
உணவு முறை:
நமது முடி நன்றாகவும் ஆரோக்கியமாகவும் வளருவதற்கு நியூட்ரிஷன்கள் தேவை. திடீரென்று எடை குறைதல், இரும்பு சத்து குறைதல், முறைப்படி டயட்டை பின்பற்றாமலோ அல்லது தவறான டயட்டை பின்பற்றுவதாலோ முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம்.
மன அழுத்தம்:
அதிக அளவு மன அழுத்தம் உள்ளவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்னை காணப்படுகிறது. வேலைப்பளு, மனம் அமைதியின்மை, எரிச்சலடையும் மனப்பான்மை போன்ற காரணங்களாலும் முடி உதிர்தல் ஏற்படும்.
இறுக்கமான முடி:
அடிக்கடி முடியை இறுக்கமாக கட்டி வைத்தால் முடி உதிர்தல் பிரச்னைக்கு எளிதாக வழிவகுக்கும். அதேபோல் முடியை சரியாக பராமரிக்காமல் கண்டபடி வைத்திருப்பது, முடியின் வேர் பாதிக்கப்பட்டிருப்பது போன்றவையும் முக்கிய காரணம்.
என்ன செய்யலாம்?
நன்கு திட்டமிடப்பட்ட சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். புரோட்டின், இரும்பு சத்து, பயோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் ஸ்ட்ரெஸுக்கான காரணத்தை தவிர்ப்பதுதான் முடி உதிர்தலை தவிர்க்க சிறந்த வழி. ஆனால் இதை தவிர்க்க இயலாதபோது (வேலைப்பளு காரணமாக) ஸ்ட்ரெஸ் குறைக்கும் ரெகுலர் உடற் பயிற்சிகளை செய்யலாம். இது போன்ற பயிற்சி 6 மாத காலத்திற்குள் முடி உதிர்தல் பிரச்னைக்கு தீர்வை தரும்.
முடியை அடிக்கடி இறுக்காமல், மருத்துவரின் பரிந்துரையின்படி சரியான ஷாம்பூ மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தலாம். அதேபோல் அடிக்கடி முடிக்கு டை அடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.