25.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஃபேஷன்

பெண்கள் நளினமாகப் புடவை கட்ட ஆலோசனைகள் !

நளினமாக புடவை கட்டுவது எப்படி? கத்துக்கலாம் வாங்க!

pp1

 
தினமும் புடவை கட்டிய அம்மாக்களைக் கண்ட கடைசித்  தலைமுறை நாம்தான். அந்தளவுக்கு இப்போது புடவை என்பது பண்டிகைக்கால ஆடையாக மாறிவருகிறது. தமிழர்களின் பாரம்பர்ய உடையான புடவை, இப்படி நம் பெண்களுக்கு அந்நியமாகும் சூழலில், ‘எப்படி அழகாக புடவை கட்டுவது’ என்பது பற்றி ஒரு வொர்க்‌ஷாப் நடத்தியிருக்கிறார், TBG(Tamil Bridal Guide)’ ஆன்லைன் வெடிங் ஸ்டோரின் உரிமையாளர் காவியா.

”இந்தக் காலத்துப் பெண்கள், எப்படிப் புடவை கட்டிக்கிறது, கட்டிட்டு எப்படி மேனேஜ் பண்றது என்பதில் எல்லாம் ரொம்பக்  கஷ்டப்பட்டாலும், புடவை மீதான அவங்களோட இஷ்டம் குறையலைங்கிறதுதான் உண்மை. ‘வாங்க… ஆர்வம் இருக்கிறவங்களுக்கு அழகா, அம்சமா புடவை கட்டும் டெக்னிக்கை நாங்க சொல்லித் தர்றோம்’னுதான் இந்த ஒன் டே ஸாரி டிராப்பிங் வொர்க்‌ஷாப்பை நடத்தினோம்” என்கிறார் காவியா.

கட்டண வொர்க்‌ஷாப்புக்கு ஆர்வத்தோடு வந்திருந்த பெண்களுக்கு, சிந்தடிக், காட்டன், டிசைனர், பட்டு என ஒவ்வொரு ரகப் புடவையையும் கட்டிக் காட்டி பயிற்சி அளித்தார், ஸாரி டிராப்பிங் ஸ்பெஷலிஸ்ட் நிகிலா ஷ்யாம் சுந்தர்.
நளினமாகப் புடவை கட்ட அங்கே தரப்பட்ட ஆலோசனைகள் இங்கே…

* புடவையின் முந்தி, உள்பக்கம் குழப்பம் வராமல் இருக்க, உள்பக்க நுனியில் முடிச்சிட்டுக்கொள்ளவும். இது அடிப்படை.

* இடுப்புக்கான ப்ளீட்ஸை இடது பக்கத்தில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும்; ஒன்றன் பின் ஒன்றாக வைத்து, சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், புடவை ‘ஸ்கர்ட்’ போல் ஆகிவிடும்.

* ப்ளீட்ஸை வயிற்றுப் பகுதியில் செருகியவுடன், அங்கே உப்பலாக இல்லாமல் உள்பக்கமாக சீராக நீவிவிடவும்.

* மார்புப் பகுதிக்கான ப்ளீட்ஸை வெளிப்பக்கத்தில்(இடப் பக்கத்தில்) இருந்து ஆரம்பிக்க வேண்டும். சரியாக வரவில்லையென்றால், உள்ளே இருக்கும் ப்ளீட்ஸின் அளவை சரிசெய்து கொள்ளலாம்.

* முந்தியை இரண்டு விதமாகப் பின் செய்யலாம். ஒன்று, ஃபார்மல் முறை. இதில் ப்ளீட்ஸை ஒன்றன் பின் ஒன்றாக மடித்து, தோள்பட்டைக்குச் சற்று கீழே பின்செய்ய வேண்டும். இரண்டாவது, கேஷுவல் முறை. இதில் ப்ளீட்ஸை ஒன்றன் பின் ஒன்றாக மடித்து, அதில் இரண்டாவது ப்ளீட்டை  வெளியே எடுத்துவிட்டு, மீதியை அப்படியே பின் செய்ய வேண்டும். ரேவதி, சுஹாசினி, ரோஹிணி சேலை கட்டும் ஸ்டைல் இதுவே. மரியாதையான தோற்றம் தரும்.

* ப்ளீட்ஸை பிளவுஸுடன் பின் செய்யும்போது, கழுத்தில் நெருடலாக இருப்பதுபோல தோன்றினால், ப்ளீட்ஸை அடுக்கிய பின், முதல் ப்ளீட்டை மட்டும் சற்றே தளர்த்தி, சற்று கீழே இறக்கி பின் செய்யலாம்.

* சிங்கிள் ப்ளீட் விட ஆசைப்படுபவர்கள், முதல் ப்ளீட்டை மட்டும் பின் செய்துவிட்டு, மிச்சம் இருக்கும் முந்தியை ஒன்றாகச் சேர்த்து, புடவை கையில் விழும் இடத்தில் உட்பக்கமாக பின் செய்யவும். இதனால் புடவை கையைத் தாண்டி தரையில் விழாமல் ஒரு கன்ட்ரோல் கிடைக்கும்.

* சிங்கிள் ப்ளீட் விட ஆசை, ஆனால் புடவை ட்ரான்ஸ்பரன்ட்டா  இருக்கிறது என நினைப்பவர்கள்,  புடவையின் முந்தி முதல் இடுப்புப் பகுதிவரை, புடவையின் நிறத்திலேயே லைனிங் போல ஒரு மெல்லிய துணி அட்டாச் செய்துகொண்டு, சௌகர்யமாக சிங்கிள் ப்ளீட் விடலாம்.

* ட்ரான்ஸ்பரன்ட் மற்றும் நெட்டட் புடவை கட்டும்போது, ப்ளீட்ஸை இடுப்புப் பகுதியில் பிளவுஸோடு பின் செய்ய வேண்டும்.
* ப்ளீட்ஸ் ஒன்றை ஒன்று   ஓவர்லாப் செய்யாமல் இருக்க, 2, 3-வது ப்ளீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்ய வேண்டும். இதனால், அடிக்கடி ப்ளீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவை இருக்காது.

* புடவைக்கு ஃபால்ஸ் அட்டாச் செய்துகொள்ளும்போது, பார்டர் மடங்கும் பிரச்னை இருக்காது. மேலும், அது நீட் லுக் கொடுக்கும்.

* எப்போதும் புடவையின் நிறம் மற்றும் மெட்டீரியலுக்குப் பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். முக்கால் காலுடன் நிற்காமல், கணுக்கால் தொடும்படி உள்பாவாடை அணிய வேண்டியது அவசியம். இல்லையென்றால், பரிகசிக்கும் கமென்ட்ஸ் வாங்க நேரிடும்.

* ஃபிஷ் கட் சாட்டின் உள்பாவாடை கட்டும்போது, ஸ்லிம் லுக் கிடைக்கும். இதை, சின்தடிக் முதல் பட்டு வரை அனைத்துப் சேலைகளுக்கும்  பயன்படுத்தலாம்.

* காட்டன், சாட்டின் என எந்த மெட்டீரியலில் உள்பாவாடை இருந்தாலும், உள்ளே இருக்கும் நாடா கயிறு காட்டனில் இருப்பது சிறந்தது. அப்போதுதான் இறுக்கமான முடிச்சுகள் விழும். முடிச்சு எளிதில் நழுவும் ரிஸ்க்கும் இருக்காது.

*  அதிகபட்சமாக இரண்டு, மூன்று பின்கள் உபயோகிப்பதே போதுமானது. சகட்டுமேனிக்கு பின் செய்தால், கேஷுவலாக இருக்க முடியாது.

* புடவையை கணுக்கால் வரை கட்டாமல், இரண்டு பாதங்களின் சுண்டு விரல்களும் மறையும்படியாகக் கட்டவும். ஹீல்ஸ் அணியும் பெண்கள், புடவை கட்டிவிட்டு ஹீல்ஸ் அணியும்போது உயரம் போதாமல் போய்விடும் என்பதால், ஹீல்ஸ் அணிந்தபடியே புடவை கட்டி உயரத்தைச்  சரிசெய்துகொள்ளவும்.

* புடவை கட்டிப் பழக ஆரம்பிக்கும்போது, அதை அரைகுறையாகத் தெரிந்தவர்களிடம் இருந்து பழகாமல், நேர்த்தியாகப் புடவை கட்டும் பெண்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும்.

* வேண்டா வெறுப்பாக, கடமைக்காக இல்லாமல், ரசனையோடு, தன்னம்பிக்கையுடன் புடவை கட்டுங்கள். உலகின் மிக அழகான அந்த உடை, உங்களை இன்னும் அழகாகக் காட்டும்!

Related posts

பெண்கள் விரும்பி அணியும் வளையல்கள்

nathan

சூப்பர் டிப்ஸ் ப்ரேட் டெனிம் ஜீன்ஸை நாமே உருவாக்கலாம்

nathan

பொருத்தமான சட்டையை தெரிவுசெய்வது எப்படி?

nathan

சேலை…சல்வார்…சிருங்காரம்!

nathan

உங்களுக்கேற்ற ஆடையை தேர்வு செய்வது எப்படி?

nathan

ரசாயன கலப்பின்றி உருவாகும் ஆர்கானிக் ஆடைகள்

nathan

நளினமான விரல்களுக்கேற்ப ஜொலிக்கும் வைர மோதிரங்கள்

nathan

சுடிதாரை எப்படி தெரிவு செய்வது ???

nathan

உங்கள் செல்ல குழந்தையை தேவதையாக காட்டும் நகை, உடை

nathan