26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
edX0MuK
பொதுவானகைவினை

காகிதத்தில் கலை வண்ணம் கண்டார்!

வண்ண விளக்குகள், அழகான கூடைகள், பார்த்தவுடன் வணங்கத் தோன்றும் சிவலிங்கங்கள் மற்றும் பெருமாள்… இவை எல்லாம் மூங்கிலால் செய்யப்பட்டது என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. இவை அனைத்தும் பேப்பரில் தயாரானவை. ஆம். தினமும் நாம் படித்துவிட்டு தூக்கி எறியும் நாளிதழ்களில் இருந்து இப்படி கலைத்தன்மை மிக்க பொருட்களை எல்லாம் தயாரிக்கலாம் என்கிறார் பூஜா படேல்.

”பிறந்தது வளர்ந்தது எல்லாம் மத்திய பிரதேச மாநிலத்துல இருக்கிற ஒரு கிராமத்துல. இது இந்தோருக்கு பக்கத்துல இருக்கு. எங்க குடும்பம் கொஞ்சம் பழமையானது. குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டாங்க. ஒருவேளை அப்படி அனுப்பினாலும் பதினெட்டு வயசானதும் கல்யாணம் செய்து வைச்சுடுவாங்க. ஆனா, எங்கப்பா படிச்சவர். பொறியியல் பட்டதாரி. அதனால என்னை படிக்க வைக்க நினைச்சார். பாதிலயே படிப்பை நிறுத்த அவர் விரும்பலை.

எங்க கிராமத்து பெண்கள் திறமைசாலிங்க. வீட்டு வேலை செய்யறது தவிர சின்னச் சின்னதா நிறைய கைத்தொழில் செய்வாங்க. சின்ன வயசுலேந்து அதையெல்லாம் பார்த்துதான் வளர்ந்தேன். எங்க ஊர்ல எப்ப கண்காட்சி நடந்தாலும் நாங்க போயிடுவோம். பொருட்களை வாங்கறோமோ இல்லையோ… வேடிக்கைப் பார்க்கறது பிடிக்கும். ஆசை தீர நானும் அம்மாவும் வேடிக்கைப் பார்ப்போம்.

கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும் எனக்கு மாப்பிள்ளை பார்த்தாங்க. நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் நடுவுல கேப் இருந்தது. அப்ப கூடை பின்னறது, வண்ணம் தீட்டுவது எல்லாம் கத்துகிட்டேன். திருமணமானதும் கணவரோட மும்பைல செட்டில் ஆனேன். அங்க ஐடி நிறுவனத்துல வேலையும் பார்த்தேன். வேலை, வீடுன்னு பிசியா இருந்ததால கைவினை வேலைகளை செய்ய முடியலை. இதுக்கு இடையில என் கணவருக்கு சென்னைல மாற்றல் கிடைச்சது. இங்க வந்து செட்டிலானோம்…” என்று சிரிக்கும் பூஜா படேல், இதன் பிறகுதான் தனது முழு நேர வேலையாக கைவினை பொருட்களை செய்வது மாறியது என்கிறார்.

”குழந்தை பிறந்த பிறகு ஐடி வேலை பெருசா தெரியலை. வேலையை விட்டு குழந்தையை பார்த்துக்க ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல நிறைய நேரம் கிடைச்சது. என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப ஒரு வீடியோவை பார்த்தேன். ஐரோப்பாவை சேர்ந்த ஒருத்தர் காகிதத்தை வைச்சி அழகழகான கைவினைப் பொருட்களை செய்து காட்டினார். பார்க்க புதுசா, ஃப்ரெஷ்ஷா இருந்தது. நாமும் ஏன் முயற்சிக்கக் கூடாதுன்னு டிரை பண்ணினேன்.

முதல்ல சொதப்பிடுச்சு. ஆனா, போகப் போக சரியா வந்தது. ஏற்கனவே நான் கைத்தொழில் பழகி இருந்ததுதான் இதுக்கு காரணம்…” என்ற பூஜா படேல், இது குறித்து விளக்க ஆரம்பித்தார்.”இந்தப் பொருட்களை பார்க்கிற எல்லாருமே ‘இது மூங்கிலால செய்யப்பட்டதா’னு கேட்கறாங்க. இல்ல… பேப்பர்னு சொன்னாலும் நம்ப மாட்டேங்கறாங்க. அந்தளவுக்கு இது நேர்த்தியா இருக்கு. ஆனா, இதுக்காக எந்த சிறப்பு பயிற்சியும் நான் எடுத்துக்கலை.

பேப்பர்ல செய்யறதால ஃபங்கஸ் படிய வாய்ப்பிருக்கு. ஸோ, கவனமா இதை கையாளணும். முதல்ல மூங்கில் குச்சி மாதிரி காகிதத்தை நம்ம விருப்பத்துக்கும், செய்யப் போற பொருட்களோட தன்மைக்கு ஏற்ப கட் பண்ணணும். அப்புறம் மூங்கில் கூடையை பின்னறா மாதிரி பின்னணும். டிசைன் எல்லாம் நம்ம கிரியேட்டிவிட்டியை சார்ந்தது. ஒருமுறை உலோகத்தால செய்த கேண்டில் ஸ்டாண்டை பார்த்தேன். பிடிச்சிருந்தது. அதை அப்படியே பேப்பர்ல முயற்சி செய்தேன். நல்லா வந்தது. இப்படிதான் காபி குடிக்கும் மக், கீ செயின், டீ கேஸ்டர், பெல் வடிவ தோரணம்… எல்லாம் உருவாக்கினேன்.

எல்லாமே காகிதம். அதனால தண்ணீர் படாம பார்த்துக்கணும். மூங்கில் போல பேப்பரை வளைக்கணும். கசங்காம இதை சுருட்டணும். நான் சின்னச் சின்னதா சுருட்டி இணைப்பேன். எல்லா பொருட்களுக்கும் அடித்தளம் ஸ்ட்ராங்கா இருக்கணும். இங்கயும் அப்படித்தான்.விளக்கு செய்யறப்ப நிறைய யோசிச்சேன். மூங்கில் சூடு தாங்கும். ஆனா, குண்டு பல்போட வெயிட்டை பேப்பர் தாங்குமா? சந்தேகம் வந்தது. அதுக்காக விட மனசில்லை. முயற்சி செஞ்சேன். 17 மணி நேரம் விடாம எரிய விட்டேன். எந்த பாதிப்பும் ஏற்படலை. அப்புறம்தான் நம்பிக்கை வந்தது.

தென்னிந்தியாவுக்கே குத்து விளக்குன்னா ஒரு ஸ்பெஷல்தான். அதே மாதிரி என்னால செய்ய முடியாது. ஆனாலும் டிரை பண்ணினேன். கேண்டில் வழியா எரியும்படி செய்தேன். பேப்பர்ல நமக்கு வேண்டிய பொருளை செய்ததும் அதுக்கு பெயின்ட், வார்னிஷ் அடிக்கணும். அப்பதான் தண்ணீர் பட்டாலும் அது தாக்குப் பிடிக்கும்…” என்றவர் ஈகோ ஃப்ரெண்ட்லி அடிப்படையில்தான் வண்ணம் தீட்டுகிறார்.

”காபி டிகாஷன் இருக்கு இல்லையா… அதைதான் பூசறேன். இதே மாதிரி மத்த நிறங்களையும் கொண்டு வரும் முயற்சில இறங்கியிருக்கேன். முக்கியமான விஷயம். என்னதான் இருந்தாலும் இது காகிதப் பொருட்கள்தான். அதனால தண்ணீர் படாம பார்த்துக்கறது நல்லது. அப்படியே நனைந்தாலும் அதை காய வைச்சா போதும்…” என்று சொல்லும் பூஜா படேல் சென்னையில் கண்காட்சி நடத்தியிருக்கிறார்.

”சென்னைக்கு நான் புதுசு. தமிழும் பேச வராது. முதல்ல உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்தான் செய்து கொடுத்தேன். என் கணவர்தான் ‘ரொம்ப நல்லா இருக்கு… பெரிய அளவுல செய்’னு உற்சாகப்படுத்தினார். ஃபேஸ்புக்குல பெண்களுக்கான சுயதொழில் குழு இருக்கு. அதுல என்னை இணைச்சுகிட்டேன். அவங்க மூலமாதான் கண்காட்சில பங்கேற்கும் சான்ஸ் கிடைச்சது. இப்ப எனக்குனு கஸ்டமர்ஸ் இருக்காங்க. பள்ளி மாணவர்களுக்கு தனியா ஒர்க் ஷாப் நடத்தணும்னு ஒரு திட்டமிருக்கு…” என்று புன்னகைக்கிறார் பூஜா படேல்.edX0MuK

Related posts

பீட்ஸ் வேலைப்பாடு

nathan

குரோஷா கைவினைப் பொருட்கள்

nathan

சோப்பிலே அழகிய பூக்கூடை செய்வது எப்படி?

nathan

எப்படி காகித மயில் செய்ய-How To Make Paper Peacock

nathan

OHP சீட்டில் ஓவியம்

nathan

சுருள் படங்கள் செய்வோமா?

nathan

பீட்ஸ் ஜுவல்லரி

nathan

வீட்டிற்கு அழகு சேர்க்கும் வண்ணக்கொடிகள்

nathan

ரிப்பன் எம்பிராய்டரி

nathan